அன்பில்லாதவரது கடுமொழிக் கூற்றின்னா - இன்னா நாற்பது 20

மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
*வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி யெருத்தா லுழவு 20 இன்னா நாற்பது

*ஈரமிலாளர்

பதவுரை:

மாரி நாள் கூவும் - மழைக்காலத்தில் கூவுகின்ற,

குயிலின் குரல் - குயிலினது குரலோசை,

இன்னா - துன்பமாம்;

ஈரம் இலாளர் - அன்பில்லாதவரது,

(வீரமிலாளர் என்று கொள்ளலும் ஆம். மொழிக்கூற்று : ஒருபொருளிருசொல்; மொழியின் பகுதியுமாம்)

வீரமிலாளர் - மனதைரியமும், உடல் வலுவுமில்லாதவர்கள்

கடுமொழி கூற்று - பிறரிடம் கடிதாகிய சொல் பேசுவது,

இன்னா - துன்பமாம்;

மாரி வளம் பொய்ப்பின் - மழை வளம் பொய்க்குமாயின்,

ஊர்க்கு - உலகிற்கு, இன்னா - துன்பமாம்;

ஆங்கு - அவ்வாறே,

மூரி எருத்தால் – முதியதாகிய கிழட்டு எருதால் / முரட்டு எருதால்,

உழவு - உழுதல்; இன்னா - துன்பமாகும்

பொருளுரை:

மழைக்காலத்தில் கூவுகின்ற குயிலினது குரலோசை துன்பமாம்;

அன்பில்லாதவரது கடிதாகிய சொல் துன்பமாகும்;

(மனதைரியமும், உடல் வலுவுமில்லாதவர்கள் பிறரிடம் கடிதாகிய சொல் பேசுவதும் துன்பம் தரும்)

மழை வளம் பொய்க்குமாயின் உலகிற்கு துன்பமாகும்;

அவ்வாறே, முதியதாகிய கிழட்டு எருதுகளால் / முரட்டுக் காளைகளால் உழுதல் துன்பமாகும்.

மழையாகிய வளம் என்க; மழையினது வளம் எனலுமாம். பொய்த்தல் - இல்லையாதல்;

மூரி யெருத்து : இரு பெயரொட்டு. வலிமை மிக்க எருதுமாம்.

கட்டுக் கடங்காத காளையால் உழுதல் துன்பம் என்பதாம். முதிர்ந்த எருதால் என்று பொருள் கூறுவாரும் உளர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Sep-15, 4:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 137

மேலே