காதலியே

இன்பங்கள் நிறைந்திருக்கும் இளையநிலா - அவள்
கன்னங்கள் கனிந்திருக்கும் காதல்பலா
கண்டவுடன் வந்திடுமே காதல்கிருக்கு - அவள்
கண்கொண்டு போட்டிடுவாள் ஆசைசுருக்கு

நட்சத்திரம் கண்ணிரண்டில் நாட்டியம் செய்யும் - அந்த
விசித்திரம் எந்தன்நெஞ்சை வாட்டிவதைக்கும்
பார்வையிலே பின்னிடுவாள் காதல்வலை - அவள்
பார்த்தவுடன் போதைதரும் பருவச்சிலை

தேனடையை ஆடைகொண்டு மறைத்திடுவாள் - அவள்
தேகமெங்கும் பூகம்பம் மூடிமறைப்பாள்
தேவதையைப் போலவந்து நெஞ்சைக்கவர்வாள் - என்
தேவையெல்லாம் தீர்த்துவைத்து தாகம்தணிப்பாள்

புன்னகையை காட்டிஎன்னை சிறையிடுவாள் - அவள்
பொற்சிலையைத் தோற்கடித்து மறைந்திடுவாள்
முத்துச்சரம் கோர்த்ததுபோல் சிரிப்பிருக்கும் - அந்த
மோகனத்தைக் கண்டுஎந்தன் மதிமயங்கும்

கோவையிதழ் கொண்டுஎன்னை முத்தமிடுவாள் - அந்த
பாவைஎந்தன் பருவமதைக் கொத்தித்தின்பாள்
ஏங்கிநிற்கும் என்மனதைப் பொறுத்தமட்டில் - அவள்
ஏக்கத்தைத் தீர்த்துவைக்கும் காதல்கட்டில்

சின்னஇடை கண்பறிக்கும் மின்னல்கொடியோ - அதன்
சிங்காரம் காண்பதற்கு என்னவிலையோ
நினைத்தபடி நடந்துவிட்டால் நெஞ்சமினிக்கும் - என்னை
நாள்தோறும் இன்பம்காண மஞ்சமழைக்கும்.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (16-Sep-15, 9:18 pm)
பார்வை : 76

மேலே