இங்கிலிசு

அப்பனையும் 'யு'என்றழைக்கிறது
மகனையும் 'யு'என்றழைக்கிறது.
அதனால்..
இது ஒரு மரியாதை தெரியாத மொழி.

தாய் மொழியில் அன்பை பொழிபவர்கள்
கோபத்தில் மட்டும் ஆங்கிலத்தில் கொட்டுகிறார்கள்
அதனால் ..
இது ஒரு கோபக்கார மொழி.

ரெண்டு பெக்கு உள்ளே போனவுடன்
குடிகாரனும் ஆங்கிலத்தில் உளறுகிறான்
அதனால்..
இது ஒரு போதை மொழி.

லேசாக அடுத்தவரின் மேல் கால் பட்டாலே
தொட்டு கும்பிடும் பழக்கமுள்ள நமக்கு
ஒரு உதை விட்டு விட்டு
சிரிச்சுகிட்டே 'ஸாரி 'சொன்னால்
அதை துடைச்சிகிட்டே அசடு வழிவதால் ..
அது ஒரு பசப்பு மொழி.

சித்தப்பாவையும் 'அங்கிள் 'என்றழைத்து
மாமாவையும் 'அங்கிள் 'என்றழைப்பதால்
அது ஒரு உறவு கெட்ட மொழி.

சிறு வயது அத்தையையும் 'ஆண்டி 'என்றழைத்து
வயசான அம்மணியையும் 'ஆண்ட்டி 'என்றழைப்பதால்
இது ஒரு விவரம் கெட்ட மொழி.

எல்லா திறமையும் பெற்று
ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தால்
அவமதிக்கப்படுவதால்
இது ஒரு அறிவு கெட்ட மொழி.

எந்த திறமையுமிலாமல் ,ஆங்கிலம் தெரிந்த ஒரே காரணத்தால்
ஒருவன் வாய்ப்பை பெற்று விடுவதால்
அது ஒரு ஏமாற்று மொழி.
........................
எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால்
இந்த பதிவை போடவில்லை.

எனக்கு ஆங்கிலம் தெரியும்.
ஆங்கிலத்துக்கு தான் என்னை தெரியவில்லை.
அவ்வளவு தெனாவட்டு மொழி அது.

எழுதியவர் : செல்வமணி ( முகநூல் : செந்தி (16-Sep-15, 10:06 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 114

மேலே