பருத்தி எடுக்கையிலே - கட்டாரி
அன்றைய நாட்களில்
கட்டிக்கப் போறவளாய்
அறிமுகப்படுத்தப்பட அவளுக்கும்
இவளையா... எனச்
சுழித்து நகர்ந்த எனக்கும்
கட்டிக்கப் போறதின் அர்த்தமென்பது
தெரிந்திருக்கவில்லை.....!
திருக்கொடை மதியப்பந்திகளில்
தண்ணீர் வைத்துப் போக..
கைவளையல்கள் ரசித்திருந்ததைப்
போலவே...
நிலைக்கட்டுப் பின்ஒளிந்து
என் பக்கவாட்டையும்
அவள் ரசித்திருந்திருக்கலாம்....!!
ஈரம் சொட்டிய
பூப்பாவாடைகளோடு
குளக்கரை ஒற்றையடிப் பாதைகளில்
எதிர்க்கடந்து போன
நாளொன்றிற்குப் பிறகு...
இவ்வருடக் கொடையின்போதும்
சுகம் விசாரித்து... அக்காவைக்
கேட்டதாகச் சொல்லியபடி
குரலுடைந்த அவளின்....
வெட்கத்திற்கு.......
காதோரம் கொஞ்சமாய்
நரைத்து.... பாசமென வயதாகி
விட்டிருந்தது.....!!