சா்வ சமய சமரசக் கீர்த்தனைகளின் சமுதாயப் பின்புலம் – ஓர் ஆய்வு

சா்வ சமய சமரசக் கீர்த்தனைகளின் சமுதாயப் பின்புலம் – ஓர் ஆய்வு” - ஆ.ஷைலா ஹெலின்
இலக்கியம் என்பது மனிதன் தனது சிந்தனைகளையும் எண்ணங்களையும் கற்பனைகளையும் சமூகத்திற்குக் கடத்த பயன்படும் ஓா் ஊடகம். சமுதாயத்தின் நிலைப்பாடுகளையும் அதன் பல்வேறு அங்கங்களையும் அதன் நிறுவனங்களையும் அதன் மரபுகளையும் சித்திரிப்பதும் விமா்சனம் செய்வதும் தொன்றுதொட்டு இலக்கியங்களில் பல வடிவங்களில் காணப்பட்டு வருகிறது.
இலக்கியம் என்றும் வெறும் வெட்ட வெளியிலிருந்து பிறப்பதில்லை. குறிப்பிட்ட சமுதாயச் சூழலில்தான் அது பிறக்கிறது. அவ்வாறு தோன்றும் இலக்கியம் ஒரு சமுதாய அமைப்பில் இயங்குகிறது, ஒரு சமுதாயத்தை நோக்கிச் செல்கிறது. அது சமுதாயத்தினால் ஏற்கப்படவோ புறக்கணிக்கப்படவோ செய்கிறது. ஒரு படைப்பாளியின் சமுதாய நோக்கம், தேவை முதலியன அவனுடைய இலக்கியத்தில் வெளிப்படுகின்றன. காலந்தோறும் அமைந்த பின்புலங்களால் உருவாகிய படைப்புகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு வகையான போக்கில் வளா்ந்தன.
எந்த கவிஞனும் தன் கால சமநிலையைப் பிரதிபலிப்பது போலவே, அதனைத் தன் போக்கில் மறுபடைப்பு செய்யவும் செய்கிறான். ஒரு படைப்பாளன் உருவாவதற்கு ஒரு பின்புலம் காரணமாக அமைவது போல இலக்கியப் படைப்பு தோன்றுவதற்கும் ஒரு குறிப்பிட்ட பின்புலம் அல்லது சூழல் காரணமாக அமைகிறது. பின்புலம் என்பது படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.
ஒரு சமுதாயப் பின்புலத்தில் பிறக்கின்ற இலக்கியம் அந்த சமுதாயத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ புலப்படுத்துகின்றது. இங்கே வேதநாயகம் பிள்ளை எழுதிய சர்வ சமய சமரசக் கீர்த்தனைகளின் சமுதாயப் பின்புலத்தை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
“சா்வ சமய சமரசக் கீர்த்தனைகளின் சமுதாயப் பின்புலம் – ஓர் ஆய்வு” என்பது ஆய்வின் தலைப்பாக அமைகிறது.

வேதநாயகம் பிள்ளையும் சர்வ சமய சமரசக் கீர்த்தனையும்
இசை, தமிழனின் வாழ்வோடு ஒன்றிச் சிறந்து விளங்குவது. சங்க காலத்திற்கு முன் எழுந்த தொல்காப்பியம் மற்றும் பரிபாடல் போன்ற சங்க இலக்கிய நூல்கள் இசையின் சிறப்பினை நன்கு உணர்த்துகின்றன. இத்தகைய ஏற்றம் பெற்ற தமிழ்நாட்டில் தேவாரம், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ் முதலியவற்றைத் தவிர சிறந்த தமிழ்க் கீர்த்தனைகளும் அருகியே காணப்பட்டது. தமிழில் கீர்த்தனைக்கு உரிய இலக்கண அமைப்பைக் கொண்டு வந்தவர் முத்துத்தாண்டவர் (1525-1625). அவரைத் தொடர்ந்து அருணாச்சலக் கவிராயர் (1711-1779). மாரிமுத்தாப்பிள்ளை (1712-1787) ஆகியோர் கீர்த்தனை வடிவில் பாடல்கள் இயற்றினர். இம்மூவரையும் கருநாடக இசையின் ஆதிமும்மூர்த்திகள் என்று பேராசிரியர் மு.அருணாச்சலம் குறிப்பிடுகின்றார். கோபாலகிருஷ்ண பாரதியாரும் தமிழில் கீர்த்தனை வடிவில் பாடல்கள் இயற்றியுள்ளார். இவர்களை அடிப்படையாகக் கொண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளையும் தமிழில் கீர்த்தனைகளை இயற்றினார்.

வேதநாயகம் பிள்ளையின் தோற்றமும் கல்வியும்
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் தந்தையார் சவரிமுத்து பிள்ளைக்கும், தாயார் ஆரோக்கிய மரிஅம்மையாருக்கும் அக்டோபர் 11-ஆம் நாள் 1826 -ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1878 -இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம், 1876-1888 ஆண்டுகளில் தமிழக்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். 62 ஆண்டுகள் (அக்டோபா் 11, 1826-ஜூலை 21, 1889) வாழ்ந்த பிள்ளை அவா்கள் சிறந்த எழுத்தாளா், சமூக முற்போக்கு சிந்தனையாளா், பெண்கள் வாழ்வின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டவருமாவார்.

வாழ்க்கை
தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளைத் திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்த தியாகராச பிள்ளை என்பவரிடம் பயின்றார். சிறுவயதிலையே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச் சுவைப் பாடல்களையும், கவிதைகளையும், அமைத்துப் பாடுவது இவரது வழக்கம். தனது 25-ஆம் வயதில் 1851-இல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையரைத் திருமணம் செய்தார்.
வேதநாயகம் அவர்கள் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும், பணியாற்றிய பின் 1856-இல் தரங்கம் பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயூரம் வேதநாயகம் பிள்ளை எனறே அழைக்கலாயினா். மாயவரத்தின் நகா் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அந்த காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். வீணை இசைப்பதில் வல்லமை பெற்றிருந்தார்.
அவரது சமகாலத் தோழா்களான தமிழறிஞா்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகா சன்னிதானம் சுப்பிரமணிய தேசிகா், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டினார்.

மொழிப்பெயர்ப்புப் பணி
கி.பி 1805 முதல் 1861 ஆம் ஆண்டுவரை ஆங்கில மொழியில் இருந்த சதா்ன் கோர்ட் தீா்ப்புகளைத் தமிழில் மொழி பெயா்த்து, “சித்தாந்த சங்கிரகம்“ என்ற நூலாக 1862-இல் வெளியிட்டார். இவ்வாறு தீா்ப்புகளை முதன் முதலில் மொழிபெயர்த்தத் தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார்.

வேதநாயகம் பிள்ளையின் படைப்புகள்

பெண்கல்வி
பெண்மானம்
பிரதாப முதலியார் சரித்திரம்
சுகுண சுந்தரி
நீதி நூல்
பெண் மதி மாலை
பொம்மைக் கலியாணம்
சோபன பாடல்கள்
தனிப் பாடல்கள்
சமய இலக்கியம் (கவிதை)
திருவருள் மாலை
திருவருள் அந்தாதி
தேவமாத அந்தாதி
தேவ தோத்திர மாலை
பெரிய நாயகி அம்மை பதிகம்

இசை
சா்வ சமய சமரசக் கீா்த்தனைகள்
சத்திய வேதக் கீா்த்தனைகள்

மொழிப்பெயா்ப்பு நூல்கள்
சித்தாந்த சங்கிரகம்
1850 -61 ஆண்டுகளின் நீதிமன்ற தீா்ப்புகள்

வேதநாயகரின் முதல் பாடல்
வேதநாயகர் திருசிரபுரத்திலே படித்துக் கொண்டிருந்தபோது, தன்னைக் காணவந்த தனது சகோதரர் அடைக்கலம் பிள்ளையை வரவேற்கும் முறையில் ஒருசெய்யுள் இயற்றினார்.
“சீர்பெருகு குளத்தூர் வாழ் அடைக்கல
அண்ணா கருணைத்தியாகா வா! வா!”
(சாமி சிதம்பரம்–முனிசிப் வேதநாயகம் பிள்ளை-பக்.20)
என்ற இப்பாடலே, வேதநாயகரின் முதல்பாடலாக இருக்கலாம் என்பது தமிழறிஞர் சுவாமி சிதம்பரனாரின் கருத்தாகும்.
வேதநாயகருக்கு இளம் பருவத்திலேயே பலவகையான செய்யுட்களைப் பாடும் திறமையும் இருந்தது. கும்மிப்பாட்டு, நலுங்குப் பாட்டு, பொம்மைக் கலியாணப்பாட்டு போன்ற எளிதான பாடல்களை இனிய தமிழிலே பாடுவார். வேடிக்கையான பாடல்களைப் பாடும் ஆற்றலையும் கொண்டிருந்தார்.

வேதநாயகரின் அலுவலகப் பணி
வேதநாயகம்பிள்ளைத் திருசிரபுரத்திலே நீதிமன்றத் தலைவராக இருந்த கார்டன் என்பவரிடம் ஆவணக் காப்பாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1850-இல் திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்தில் மொழிப் பெயர்ப்பாளராகப் பணியாற்றினார். 1857-ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் முன்சீப்பாக முதல் இந்திய நீதிபதியாக வேதநாயகர் பதவி ஏற்றார். பிறகு அவர் சீர்காழிக்கு மாற்றப்பட்டார். 1860 முதல் மாயூரத்திலும் மாவட்ட முறைமன்றத் தலைவராய் விளங்கினார். 1872- ஆம் ஆண்டில் முன்சீப் வேலையிலிருந்து விலகிக் கொண்டார்.

வேதநாயகரின் அரும்பணி
வேலையிலிருந்து விலகிய பிள்ளை அவர்கள் பல பொதுப்பணிகள் புரிந்து வந்தார். மயிலாடுதுறை மாநகராட்சியில் தலைவராகப் பொறுப்பேற்று குடிநீர் வசதி, குடியிருப்பு வசதி, பூங்காக்கள், கல்விச் சாலைகள், சிலம்பக் கூடங்கள் ஆகியவற்றை அமைத்து நகரை ஒளிமயமாக்கினார்.
1876-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாய் மூன்று ஆண்டுகள் நிகழ்ந்த தனிப்பெரும் பஞ்சத்தில் வேதநாயகர் மக்கள் பசியை ஆற்றிய மாண்புறு செய்கை மலைகளில் மேருமலை போல் தனிச்சிறப்பு எய்தியுள்ளது.
வேதநாயகர் பஞ்சத்தில் வாடியிருந்த மக்களுக்கு உதவி செய்வதைக் கண்டு, மனிதர் எவரையும் புகழ்ந்து பாடேன் என்று உறுதி கொண்டிருந்த கோபாலகிருஷ்ண பாரதியாரும் வேதநாயகரின் அரும்பணியைப் புகழ்ந்து உளமாரப் பாடியுள்ளார்.
‘கல்யாணி’இராகத்தில் ‘ஆதி’தாளத்தில் அமைந்த பாடலின் பல்லவியில்,
“நீயே புருஷமேரு – உலகில்
நிலைத்தது நின் பேரு – நீதிபதி”.
என்று வேதநாயகரைப் புகழ்ந்து பாடியுள்ளார் கோபாலகிருஷ்ண பாரதியார்.

வேதநாயகம் பிள்ளையின் சா்வ சமய சமசரக் கீர்த்தனைகள்
இசைப்பாட்டு வடிவத்தின் முதிர்ந்த நிலையே கீா்த்தனைப் பாடல்களாகும். இப்பாடல்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று நிலைகளில் அமையப்பெறும். இவற்றை எடுப்பு, தொடுப்பு, படுப்பு என்ற பெயா்களில் அழைப்பர். இத்தகைய கீர்த்தனைப் பாடல்களைச் சமரச நோக்கோடு பாடியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆவார். இவா் பாடிய இசைப் பாடல்களுக்குச் ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’என்று பெயரிட்டழைத்தார். இதில் 192 கீா்த்தனைப் பாடல்கள் இடம் பெற்றன. இந்நூலின் பெயருக்கு ஏற்ப, எல்லா மதங்களுக்கும் பொதுவான எந்தக் கடவுளையும் சுட்டாத, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையியல் இசைப்பாடல்களாகப் பாடி இருப்பது சிறப்பிலும் சிறப்பாகும்.
1878–இல் இவர் “சர்வ சமய சமரசக் கீர்த்தனை” என்று தனது கீர்த்தனைப் பாடல்களின் தொகுப்பை முடித்து வெளியிட்டார். இவருக்கு முன்னெல்லாம் கீர்த்தனைகள் இறைவன் புகழைப் பாடுபவை. ஆனால் இந்த நூலே முதன்முதல் உலகினருக்கு நல்ல நீதியைப் புகட்டவென்று எழுந்த சிறப்புடைய நூலாகும்.
கீர்த்தனைகள் என்ற சொல்லின் பொருளே இறைவன் கீர்த்தியைச் சொல்வது. ஆனால் இவரது கீர்த்தனைகள் பல துறைகளுக்கும் உபயோகப்படுத்தியிருக்கிறார். உத்தியோக சங்கடம், கோள், லஞ்சம், மகளுக்கும் மகனுக்கும் புத்திமதி, பெண்பார்த்தல், கணவனுக்குக் கீழ்ப்படிதல், மைத்துனன் பரிகாசம் போன்ற பாடுபொருளில் கீர்த்தனைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

சர்வ சமய சமரசக் கீர்த்தனை எழுந்த நோக்கம்
வேதநாயகர் காலத்தில் சங்கீத வித்வான்கள் பெரும்பாலும் தெலுங்குப் பாடல்களைப் பாடி வந்தனர். தமிழில் பயன்படும் வகையில் சிறந்த கீர்த்தனைகளை இயற்ற வேண்டும். இசைக் கலையின் மூலம் நல்ல அறங்களையும், பக்தியையும் போதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல கீர்த்தனைகளை இயற்றி “சர்வ சமய சமரசக் கீர்த்தனை” எனும் நூலாக 1878 -ஆம் ஆண்டு வெளியிட்டார் வேதநாயகம் பிள்ளை. பாடல்களை இயற்றும் முறைகளை கோபாலகிருஷ்ண பாரதியாரிடமிருந்து நன்கு கற்றுக் கொண்டார். பாடல்களில் பல கோபாலகிருஷ்ண பாரதியாரின் வர்ண மெட்டுக்களிலேயே அமைந்துள்ளன. வேதநாயகம் பிள்ளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளதாகக் கருணாமிர்த சாகரம் நூலாசிரியர் ஆபிரகாம் பண்டிதர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
.
சர்வ சமய சமரசக் கீர்த்தனை நூலின் மரபிசை வடிவம்
சர்வ சமய சமரசக் கீர்த்தனை நூலின் முதற்பதிப்பு வேதநாயகர் வாழ்ந்த காலத்திலேயே 1878 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1895-ஆம் ஆண்டிலும், மூன்றாம் பதிப்பு 1916-ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டது. 1980-ஆம் ஆண்டு இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் அவர்களால் வெளிடப்பட்டது. 1986-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட லேனா தமிழ் வாணனின் தமிழிசைக்குத் தரமான பாடல்கள் நூலில் இராக தாளத்துடன் 10 பாடல்களும், 1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புகழ்பெற்ற கீர்த்தனைகள் நூலில் 10 பாடல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் சர்வ சமய சமரசக் கீர்த்தனையில் குன்றக்குடி வேங்கடராமய்யரால் 61 பாடல்கள் சுரதாளக் குறிப்பு அமைக்கப்பட்டு தமிழக அரசு சங்கீத நாடகச் சங்கத்தினால் 1970-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் தமிழ்த் தொகுதி மூன்று தமிழிசைச் பாடல்கள் நூலில் 7 பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்களில் சில பாடல்களைத் தவிர மற்றவை மரபு வழி வந்த இசை வடிவங்களாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

சர்வ சமய சமரசக் கீர்த்தனை நூலின் இயலமைப்பு
இந்நூலில் 192 கீர்த்தனைகளை இயற்றிப் பாடியுள்ளார். இப்பாடல்கள் சமுதாயக் கருத்து, அறநெறிக் கருத்து, தான் வாழ்ந்த காலத்துச் சூழல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு 5 விதங்களில் வகைப்படுத்தியுள்ளார். அவை வருமாறு:-
அ) தேவதோத்திரக் கீர்த்தனை
ஆ) ஈசுவர வருடத்துப் பஞ்சத்தைப் பற்றிய கீர்த்தனை
இ) ஹிதோபதேசக் கீர்த்தனைகள்
ஈ) உத்தியோக சம்பந்தக் கீர்த்தனைகள்
உ) குடும்ப சம்பந்தக் கீர்த்தனைகள் ஆகியவையாகும்.

பாடல்களில் எதுகை, மோனை, இயைபு, வழியெதுகை, வழியியைபு, உவமை, வருணனை, முத்திரை, அடுக்குத்தொடர், மணிப்பிரவாள நடை, பழமொழி ஆகிய அணி நயங்கள் இடம்பெற்றுள்ளன.

முத்திரைக்கு உதாரணம்:
உத்தியோக சம்பந்தக் கீர்த்தனையில் தல முத்திரையையும் தனது முத்திரையையும் கையாண்டுள்ளார். பியாகடை இராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த ஆர்வேணுமோ எனும் பாடலின் அனுபல்லவியில்,
சீர்வளரும் குளத்தூ ரெனும் பதிஉள்ளார்
செல்வன் வேதநாயகன் சொல்லும் உரையைக் கொள்வார் -(ச.ச.ச.கீ – 174)
என்ற இப்பாடலில் தனது பெயர் முத்திரையையும், ஊரின் முத்திரையையும் கையாண்டுள்ளார் வேதநாயகர்.

மணிப்பிரவாள நடைக்கு உதாரணம்:
நானே உன்னை நம்பினேன் எனும் சுத்த சாவேரி இராகத்தில், ஆதிதாளத்தில் அமைந்த பாடலின் சரணத்தில்,
“விபுதகணவந்திதச் சரணா – நாளும்
வேதநாயகன் அந்தக் கரணா
சுபமங்க ளதரணா சுஜநகுலா தரணா
தூயாகன – நேயாபுவித் – தாயான – சகாயர் நிதம்”(ச.ச.ச.கீ.89)

என்று மணிப்பிரவாள நடையிலும் அழகுபடப் பாடியுள்ளார் வேதநாயகர்.

பழமொழிக்கு உதாரணம்:
வேதநாயகர் தமது பாடல்களில் பல பழமொழிகளைக் கையாண்டுள்ளார்.
“சாஸ்திரஞ் சொல்லும் பல்லி கழுநீர் வீழ்ந்து சாகுதல் போல” (ச.ச.ச.கீ - 172)
“செவிடன் காதில் ஊதிய சங்கநாதம்” (ச.ச.ச.கீ - 68)
“நச்சு மரத்தையும் வைத்தவன் – தானே
நாள்தோறும் காவல் செய்யாமல் – இரானே” (ச.ச.ச.கீ - 13)

“கப்பல் இல்லாமலே எப்படியேனும்
கரையைக் கடக்க வொண்ணாதே” (ச.ச.ச.கீ - 18)
“இருதலைக் கொள்ளி எறும்பு போல” (ச.ச.ச.கீ -20)
சில பாடல்களில் நாட்டுப்புறச் சாயல் காணப்படுகிறது. அகப்பொருள் இலக்கணத்தில் தூது விடுதல், தோழிக்குரைத்தல் ஆகிய துறைகள் உண்டு. அதே போன்றத் துறைகள் வேதநாயகரின் கீர்த்தனையிலும் காணலாம். தோழிக்குக் கூறுதல் போன்ற நாட்டுப்புறச் சாயலைக் காணலாம். உதாரணம், இராகம் - பிலஹரி, திரிபுடை தாளம்
நாயகர் பக்ஷமடி – எனக்கது
ஆயிரம் லக்ஷமடி (ச.ச.ச.கீ - 183)

சர்வ சமய சமரசக் கீர்த்தனையின் இசையமைப்பு
இந்நூலின் கீர்த்தனைப் பாடல்களில் சங்கராபரணம், தோடி, கரகரப்ரியா, கல்யாணி, சரசாங்கி, பந்துவராளி முதலிய தாய் இராகங்களையும், அசாவேரி, அடாணா, அம்சத்தொனி, ஆஹிரி, ஆனந்தபைரவி, ஆரபி, ஈசமனோகரி, உசேனி, எதுகுலகாம்போதி, கண்டா, கமாஸ், கன்னட கௌளம், கேதாரம், கௌரிபந்து, சஹானா, சாமா, சுத்த சாவேரி, சுருட்டி, செஞ்சுருட்டி, சைந்தவி, சௌராஷ்டிரம், நாகத்தொனி, நாதநாமக்கிரியை, ஜயந்தஸ்ரீ, பரசு, பியாகடை, பியாக், பிலஹரி,பூரணச்சந்திரிகை, பூரணகௌளை, பூரிகல்யாணி, பைரவி, மத்யமாவதி, முகாரி, லலிதா, வசந்தா, ரீதிகௌளை போன்ற சேய் ராகங்களிலும், சாளகபைரவி, கற்கடா, ஜங்கலா, அபூர்வம், கனகவசந்தா, பங்கள, பந்து, சுப்பிரதீபம், கெங்காதரங்கிணி, மனோகரம், சாமந்தா, பலஹம்ச போன்ற அபூர்வ இராகங்களையும் இந்துஸ்தான் காப்பி, ஹமீர் கல்யாணி, தர்பார், துஜாவந்தி, மாஞ்சி, தேசமுகாரி, யமுனா கல்யாணி போன்ற இந்துஸ்தானி இராகங்களிலும் பாடல்கள் இயற்றியுள்ளார்.

சர்வ சமய சமரசக் கீர்த்தனைப் பாடல்களில் ஆதி, ரூபகம், திரிபுடைதாளம், அடதாளச்சாப்பு, ஏகதாளம், திசிரஜாதி மட்டியதாளம் ஆகிய தாளங்களைக் கையாண்டுள்ளார் வேதநாயகர். மத்யமகால சாஹித்யம், சந்தம் போன்ற இசையணிகள் வேதநாயகரின் பாடல்களில் காணப் படுகின்றன.

மத்யம கால சாஹித்யம் உதாரணம், இராகம் - சாவேரி, ஆதி தாளம்

ஏதோ இன்னம் வாதோ இரங்காதோ உன்மனமே
சரணம்
தரை முதலாக எங்கும் விரியும் சுந்தரமே
அரிய கருணை மழை சொரியுங் கந்தரமே - (ச.ச.ச.கீ. 105)

சந்த அமைப்பிற்கு உதாரணம், (கல்யாணி-ரூபக தாளம்)
தருணங் கருணை புரிகுவாய் – உனக்கனந்தங்கோடி
சரணஞ்சரணந் தெரிகுவாய் – மெய்யா - (ச.ச.ச.கீ.13)

சிட்டைசுரம்
சர்வ சமய சமரசக் கீர்த்தனையில் குன்றக்குடி வேங்கடராமைய்யரும் சில கீர்த்தனைகளில் சிட்டைசுரம் அமைத்துப் பாடியுள்ளார். உதாரணம், இராகம் - ஜயந்தஸ்ரீ – ஏகதாளத்தில்,
நாதா நிரந்தர விநோதா – உந்தன்
பாதார விந்தம்எனக் காதாரம் தா (ச.ச.ச.கீ – 33)

இராகமாலிகை
வேதநாயகரின் பாடல்கள் சில இராகமாலிகையாகப் பாடுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. டி.எம்.தியாகராசன் வேதநாயகரின் ‘வீண் கர்வமேன்’எனும் பாடலை இராகமாலிகையாக ஆதி தாளத்தில் பாடியுள்ளதை 1979-ஆம் ஆண்டு மியூசிக் அகாடெமி நூலின் வழி அறியப்படுகிறது.

இங்ஙனம் தமிழிசைக்கு அரும்பணியாற்றிய வேதநாயகர் 1886- ஆம் ஆண்டு, மண்ணுலகை விட்டு மறைந்தார். வேதநாயகர் தாம் வாழ்ந்த நாட்களில் தன் நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் பணி மிகச் சிறந்த பணியாகும். இங்ஙனம் வேதநாயகரின் வாழ்க்கை வரலாறு, அவரின் குணநலன்கள், நூல் இயற்றும் திறன் ஆகியவை நன்கு அறியப்பட்டன.

சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளின் சமூகப் பின்புலம்
எல்லா வகை இலக்கியங்களுக்கும் களமாகவும் வளமாகாவும் அமைவது சமூகம். இலக்கியப் படைப்பாளிகள் சமூகம் என்ற தளத்தில் நின்றே தம் படைப்புகளை இறக்கி வைக்கின்றனர். இங்ஙனம் வெளி வரும் படைப்புகள், சிலபோது மன எழுச்சியையும் முற்போக்குச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதுண்டு. அவற்றில் அவர்கள் அக்காலத்து சமுகத்தின் அவலப் போக்குகளையும் நோக்கங்களையும் செய்திகளையும் வருங்கால எதிர்பார்ப்புகளையும் முன்வைப்பதாக அமைவதுண்டு. சமுகத்தின் தேவைகளையும் இருளடைந்த பகுதிகளை வெளிச்சப்படுத்தவும் ஒரு நேர்பார்வையுடையப் படைப்பாளியினாலேயே நேர் கருத்துக்களை முன்வைக்ககூடும். வேதநாயகம் பிள்ளை பல்வேறு கருத்துக்களை முன்வைத்து எழுதியுள்ள கீர்த்தனைகளில் சமுகத்தின் தாக்கம் எவ்வாறு பின்புலமாக அமையப்பெற்றுள்ளது என்பதே இவ்வியலில் ஆயப்படுகிறது.

பஞ்சம்
வேதநாயகர் காலத்தில் தமிழகம் மிகப் பெரிய பஞ்சத்தைச் சந்திக்க நேரிட்டது. மக்களின் பசிதீர்க்க உணவினை அளித்து பேருதவிகளைப் பிள்ளை செய்ததோடு, மக்களின் வேதனையைக் கண்டு உள்ளம் குமறியதால், அவர்தம் கீர்த்தனைகளில் அவரது குமுரல்கள் பதிவாகி யுள்ளன. அவைவருமாரு,
ஊரும் இல்லாமல் – குடிக்க தண்
ணீரும் இல்லாமல் – அன்னமெனும்
பேரும் இல்லாமல் –பசிதீர்க்க
ஆரும் இல்லாமல்
பாரில் அநேகர் பரதேசி ஆனாரே
ஊரில் அநேகர் உயிர் மாண்டுபோனரே (ச.ச.ச.கீ – 139:1)
ஊர், தண்ணீர், அன்னம் எதுவும் இல்லாமல் பலர் பரதேசியாய் பஞ்சக் காலத்தில் மாண்டு போனதை நினைத்து மனம் வெதும்பி பாடியுள்ளார்.

துர்குணர்
மானிடன், சமூகத்தில் தன் துர்குணங்களை வெளிகாட்டுவதனை அனுபவத்தினால் கண்டு, கீர்த்தனைகளில் குறிப்பிட்டுள்ள வரிகளில் சில,
மேகநிழல்போல் மறையும் பொய் வாழ்வை
விரும்பி நலந் துறப்போம்
மோகவிகாரத்திலே தடுமாறுவோம்
ஏகமாய் எங்கும் பிறர்களைத் தூறுவோம்
எப்படி ஐயையோ நாம் கரை ஏறுவோம் (ச.ச.ச.கீ – 143:1)

மன மயக்கத்தோடு திரியும் லோபிகளுக்கு புத்திக் கூறுவதாக குறிப்பிட்டுள்ள வரிகள்,

நீ மலைக்காதே – நெஞ்சே – நீ மலைக்காதே
கோட்டைதருஞ்சோற்று – மூட்டைதனை ஒன்ப
தோட்டைப் பாண்டத்தைக்கற் – கோட்டையென நம்பி
சொத்துதமக்கென்று – கத்துவதன்றி
ஆபத்துக்குதவாத – புத்திரரை நம்பி (ச.ச.ச.கீ – 144:5,7)
என்பன குறிப்பிடத்தக்க சில வரிகளாகும்.

பெண்ணின் பண்பு நலன்கள்
சர்வ சமய சமரச் கீர்த்தனைகளில் நல்ல பெண்ணின் இலக்கணத்தை கூறுகிறார்.
உத்தம குணங்களே ஆபரணம் -ரத்ன
ஓலைமுதல் நகைகள் ஒருதிரணம்
பத்தாவை பிரிவது வேமரணம் - வரும்
பந்து ஜனங்கட்கெல்லாம் ஆதரணம்
சுத்தம் சித்தம் உடையாள் - தூய அன்ன நடையாள்
துதி கொள் சுந்தரி -சுபநிரந்தரி
மதியில்சுந்தரி –வசன தந்திரி (ச.ச.ச.கீ. 179)
பெண்கள் கொண்டு வரும் சீதனம், ஜாதகப் பொருத்தம், நிறம், புறத்தோற்றம் ஆகியன கொண்டுதான் மணப்பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறார்களே தவிர, ஒரு பெண்ணில் குண நலன்களை நினைத்துத் தேர்ந்தெடுப்பதில்லை என்பதை வேதநாயகர் குறிப்பிடுகின்றார்.
ஒருவன் தன் நண்பனை அனுப்பிப் பெண்பார்த்து வரச் சொல்லுகிறான். எந்த பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், எந்த பெண்ணை தேர்ந்தெடுக்க கூடாது என்றும் அவன் கூறுவதாக அவர் அமைத்த கீர்த்தனைகளின் வரிகள்,
அழகுங்குணமுள் ளவள் நல்லஜோடு
அழகில்லையாயினும் குணத்தையேதேடு
பழகுநற்குணமில்லா அழகியின் வீடு
பாம்பு புலி கரடி வாழ்ந்திடுங் காடு

நல்லவள் ஏழை யானாலுந்தட்டாதே
நானூறு போனாலும் நீபின்னிடாதே! (ச.ச.ச.கீ.180)

என்று பணத்தை விடக் குணமே பெரிது என்றும், பணத்தை கொடுத்தாகிலும் நல்ல பெண்ணைக் கொள்ள வேண்டும் என்று வேதநாயகர் குறிப்பிடுகின்றார்.

தீயப்பெண்களின் குணங்கள்
சங்க சமய சமரசக் கீர்த்தனைகளில் பெண்ணுக்குள்ள இழி குணங்கள் கூறப்படுகின்றன.
எழுத்துவாசம் அறியாதவள் மட்டி
ஏதும் அறியாள் அவள் சுரண்டுவாள் சட்டி
கழுத்திலோ அவளுக்குத் தாலியைக் கட்டி
காரியமிலை அது காசுக்கு நஷ்டி

உடைமைகளுடன் பணங் காசின்மேல் இச்சை
உள்ளவள் சண்டைக்கும் கட்டுவாள் கச்சை
இடைவிடாமல் கெடுமே என் லச்சை
இவளைக் கொள்ளுவதிலும் எடுக்கலாம் பிச்சை (ச.ச.ச.கீ.180)
என்று தீயப்பெண்ணின் குணங்களைக் கூறி, திருமணம் ஆயிரங்காலத்துப் பயிராகையால் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்குமாறு வேதநாயகர் குறிப்பிடுகின்றார்.

பெண்ணின் பெருமை
பெண்ணின் பண்பு நலனை – குறிப்பாகக் கற்பு பெருமையை அவர் வர்ணிக்கும் போக்கு சிறப்பாக அமைகிறது.
வெள்ளியும் தங்கமும் அள்ளிக்கொடுத்தாலும்
வேறொருவர் முகம் பாராள் - நல்ல
மேன்மை துரைமகள் ஆனாலும் வீட்டு
வேலைக்குப் பின்னிட்டுப் சேராள் -நிதம்

ஆபத்து வேளையில் அறிவு சொல் மந்திரி
அரும்பிணிக்கவளே சஞ்சீவி – துன்பம்
அணுகும் போதாறுதல் தரித்திர காலத்தில்
அருநிதியாம் அந்தத் தேவி - உம்மைப்
பாபத்தில் வீழாமல் போதிக்கும்சற்கு (ச.ச.ச.கீ.181)

ஆபத்து வேளைகளில் புத்தி சொல்பவளாகவும் தீரா வியாதியில் நல் மருந்தாகவும் அவளை அணுகும்போது ஆறுதல் அளிப்பவளாகவும் பண உதவி செய்பவளாகவும் பாவத்தில் விழாமல் காப்பவளாகவும் சிறந்த பெண் விளங்குவாள் என வேதநாயகர் கருத்து.

பெண்கல்வி
முதன் முதலாகப் பெண்கல்வியை வற்புறுத்தியவர் வேதநாயகர். பெண்கள் சுதந்திரம் பெற வேண்டுமென்றால் பெண்கல்வி இன்றியமையாதது என்று வற்புறுத்துகிறார். வேதநாயகர் காலமான 19-ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் ஆண்கள் வெள்ளையர்களிடம் அடிமைகளாக இருந்தனர். அன்று ஆண்களிடம் பெண்கள் அடிமைப்பட்டிருந்தனர். படிப்பிருந்தால் மனம் பண்படுவதோடு சிந்தனை துளிர் வரும். எனவே இருபாலருக்கும் முக்கியமானது கல்வி என்பதை விளங்கச் செய்தவர் வேதநாயகர்.

ஆடவர்கள்
ஆடவர்களை நோக்கி பெண்கள் கூறுவதாக இயற்றிய வேதநாயகரின் கீர்த்தனை வரிகளாவன:
விந்தையைப் படியுங்கள் - தயைசெய்து
விந்தையைப் படியுங்கள்

படியாத ஆண்களுடனேசம் பந்தம் - சற்றும்
பண்ண நீர் சம்மதியீர் லவலேசம் (ச.ச.ச.கீ. 188)
வியப்பானதைப் படியுங்கள், படிக்காத ஆண்களைத் திருமணம் செய்யாதீர் என பெண்களுக்கு அறிவுரைக் கூறுகின்றார்.மற்றும் ஆடவர்கள் பெண்களுக்குக் கல்வி கொடுத்திட வேண்டும் என்று எச்சரிக்கிறார் வேதநாயகர்.

குடும்ப சூழலில் பெண்
மாமி நாத்தியின் கொடுமையைப் பற்றி ஒரு பெண் முறையிடுவது போன்ற உருக்கமான கீர்த்தனைப் பாடல்களை அமைத்துள்ளார்.
ஒத்திருந்தால் அவட்கேன் மனஸ்தாபம்
ஓகோ சகியே இதுவென்ன பாபம்?.....
கலியாணம் செய்தும் உண்டோ சன்னியாசம்
கடனும் வாங்கியும் ஏன் உபவாசம்? (ச.ச.ச.கீ- 186)

மாமியார் நாத்தனாருடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றும் கல்யாணம் செய்து பின் சன்னியாசம் செய்யக்கூடாது என கூறியிருப்பினும் பின் ஒரு கீர்த்தனையில் வேதநாயகர் மகளுக்கு தந்தையாக இருந்து அறிவுரை கூறுவது போன்று,

மாமி நாத்திகளை மதித்துறவாடு
மகளுந் தாயும் போல மகிழ்ந்து நீகூடு (ச.ச.ச.கீ- 178)
என பாடியுள்ளார்.

உத்தியோக சம்பந்தக் கீர்த்தனைகள்
மேனாட்டவரின் ஆதிக்கம் உச்ச நிலையில் இருந்த காலக்கட்டத்தில், தமிழர்களில் குறைந்த எண்ணிக்கையாளர்களே உயர் கல்வி பெற்று, உயர் பதவி வகித்து வரும் நிலையில் ஆங்கிலேயரின் ஆதிக்க அட்டகாசத்தின் அவதிக்குள்ளானபோது அதனைக் குறிப்பிடும்படியாகக் கீர்த்தனைகளில் அமைந்த சில வரிகள்,
எப்போதும் பொய்வழக்கர் கூட்டம் – அவர்க்
கிந்தரலோகங்கிடைத்தாலும் இன்னமுந்தான் வாட்டம் (ச.ச.ச.கீ- 164-3)
அழுதாலும் தொழுதாலும் அவர் துர்குணம்போமோ
கழுதைக்கு வாழ்க்கைப்பட்டுக் கடியுதைக் கஞ்சலாமோ (ச.ச.ச.கீ- 165-4)

பரிதான கண்டனம்
பரிதானம் வாங்கும் அதிகாரச் சூழலினால் துயரனுபவித்த மக்களின் அவலத்தைக் கண்டு அதிகாரிகளைச் சாடுவதாகப் பிள்ளை எழுதிய வரிகள்,
சம்பளமிருக்கப்பின் மேல்வருமானம்
தனைநாடி ஏன்அதன் மேல் நித்திய தியானம்
அயலார் பொருளின்மேல் நமக்கென்ன சொந்தம்
அகதியை மடிபடித்தேன் பலவந்தம் (ச.ச.ச.கீ- 174-1,3)

பலவந்தமாக ஏழைகளிடம் அதிகாரிகள் பரிதானம் வாங்குவதை சாடுகின்றார். அதிகாரிகளுக்கு சம்பளமிருக்க ஏன் மேலும் கிம்பளம் விரும்புகின்றனர் என மனம் நொந்து பாடியுள்ளார்.
வேதநாயகர் காலம், ஆங்கிலக் கல்வியும் அதன்வழி ஐரோப்பிய நாகரகமும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கிய காலம். மக்கள் நொந்தால் மாயூரம் பிள்ளையின் மனம் நோகவே, சமூக நடை முறைகளையே கீர்த்தனையின் கருபொருளாக்கி வடிவமைத்ததோடு, சமூக நல்லிணக்கத்திற்கு வழிவகுத்தவருமாவார். இவர் காலத்தில் பெண்கல்வி என்பது கனவிலும் கருதக்கூடாததாய் இருந்து வந்தது. இதைத் தமிழகத்தில் துணிந்து வற்புறுத்தியவர் வேதநாயகரே. எனவே இப்பேராண்மையாளரை பெண்ணுலகம் போற்றக் கடைமைப்பட்டுள்ளது.

சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளின் அரசியல் பின்புலம்
அரசியல்
அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம் அல்லது கொள்கை. சமுதாயத்தில் பலர் கூடி வாழ்வதற்கும், பொருளியல், ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழிவகுக்கிறது. நாட்டின் தன்மை, ஆட்சியின் இயல்பு ஆகியவற்றின் நிலைகளை எடுத்துக் கூறுவது அரசியலேயாகும். இது ஒரு சமூகத்துள் வாழும் மக்களின் செயல்களின் நிலையை எடுத்துக்காட்டும்.

19 -ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழக அரசியல்
கி.மு 500 முதல் கி.பி 500 வரை தொல்பழங்குடி மரபாக வளர்ச்சியுற்றது. நில உரிமையாளர், அரசின் கீழ், அவன் சொல்படி வாழும் மக்கள் கொண்ட சமூகமாக கி.பி. 5 முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை புதிய நிலைகள் தோன்றின. தொல்காப்பிய, சங்க இலக்கிய சமயச் சார்பற்ற மரபு சைவ, வைணவம் ஆட்சிக்கு வந்தபின் மதம் விதித்த மரபாக மாற்றப்படுகிறது. சமண, பௌத்தம் சார்ந்த உலகாயுதம் வைதிக, பிராமணீய ஆதிக்கத்தை எதிர் கொள்கிறது. 9 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் சோழா்களின் பிரமாண்டமான கட்டும் கலை உருபெறுகிறது. தஞ்சைப் பெரியகோவில் அதற்கு எடுத்துக்காட்டு. சாதாரண மக்கள் அரச குடிகளாகக் கோவில் நிலம், மடம் சார்ந்து வாழத்து வருகின்றனா். 12-ஆம் நூற்றாண்டு முதல் முகலாயர்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்கா் காலம் தொடங்கி, குட்டி அரசுகள், பாளையக்காரா்கள் என உருவாகி, வட்டாரம் சார்ந்த சிறிய சிறிய மன்னர்கள் தோன்றிய காலம் நிர்வாகச் சீா்படுத்தல் தேவைப்படுகிறது. விக்டோரிய மகாராணி கொடி நிறுவியதற்குப் பின் இதுவரை இல்லாத எழுத்தறிவை குறிப்பிட்ட பகுதி பண்டிதா் சாதி அதிகாரம் பெற்றது. பார்ப்பனர்களும், குறிப்பிட்ட பகுதி பண்டிதர்களும் அரசு வட்டாரத்தில் இடம் பெற்றனா். சித்த வைத்தியா், கணக்குபிள்ளை என்ற கிராமப்புற அமைப்பு, ஓலை வடிவம் என இருந்தவை 19-ஆம் நூற்றாண்டில் தலைகீழ் மாற்றமாகத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என உருவாகின. பின்னா் கல்விக்கூடங்கள் உருவாகின. அதனைத் தொடர்ந்து கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. புது எழுத்தறிவு முறை ஒடுக்கப்பட்டோருக்கு சாத்தியமானது. கல்வி எழுத்தறிவு கொடுத்தலில் கிறிஸ்தவத்துக்கு சமயப் பிரச்சார நோக்கம் இருப்பினும், அவர்கள் அளித்த கல்விமுறை சமூகத்தின் முகத்தையே மாற்றியது.
1840களில் தான் ஏழைக் குடும்பத்து மாணவர்கள் கல்வி பெறமுடிகிறது. பல்கலைக்கழகங்கள் உருவாக புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ‘சதி’ என்ற உடன்கட்டைக்குத் தடை, பலி கொடுக்கத் தடை என்பதாக மனிதனை மனிதன் மதிக்கும் சட்டங்கள், எல்லோரும் அச்சிடலாம், பத்திரிகை நடத்தலாம் என்பதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டன. எழுத்தறிவு பெற்றவா்களிடையே பத்திரிக்கை, புத்தகம் வாசிப்புப் பழக்கமும், பண்பும் வளா்ந்து பத்திரிக்கைத் துறையாக பரிணமித்தது. சிறுசிறு பகுதிகளில் வாழ்ந்த மனிதா்கள் ஜனநாயம் என்ற புதிய கருத்தாக்கத்துக்கு ஆட்பட்டனா். இப்படியே 40,50 ஆண்டுகள் கடந்தன. சமூக ஆதிக்க சாதியினா் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றனா். லண்டன் சென்று பயின்றனா். ஐரோப்பிய புத்தொளி அறிவு மரபு மேலோங்கியது. இதை நமது மரபாக வளா்தெடுக்க முயற்சிகளும் தோன்றின. அதற்கான சூழலும் நிலவியது.

வேதநாயகம் பிள்ளை காலத்து அரசியல் நிலை
1639-இல் ஆங்கிலேயா்கள் மதராஸில் (சென்னை) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது. தமிழ்நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவா்களைப் பிரித்தாண்டு அவா்களில் மேல் ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தினா். ஆங்கிலேயா் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலகட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளா்களும் கணிசமானோர் இருந்தனா்.
ஐரோப்பிய நாடுகளின் பாதிரிமார் நமது மொழி, மொழிக் குடும்பம் பற்றி ஆய்வுகளில் தோய்ந்தனா். ஓலைச்சுவடிகளை வாசித்தவா்களை லட்சக்கணக்கில் அச்சிட்ட பிரதிகளைப் படிக்க வைப்பவா்களாக மாற்றியது. நமது மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன.
1823-இல் சிதம்பரம் அருகிலுள்ள மருதூரில் பிறந்த இராமலிங்கம் 1858 வரை சென்னையிலும், பின்னா் வடலூரில் சென்று 1867-இல் சத்திய தருமச்சாலை எனும் மடத்தை நிறுவினான். அவரது இயக்கம் சைவ மரபு என்று சொல்லப்பட்டாலும், சாதிக்கொடுமைகளை வெறுத்த சைவம். அவரது ‘அருட்பெருஞ்சோதி’தனிப்பெரும் கருணை சைவ மதத்தின் இன்னொரு கட்டமைப்பாக மாறியது.
தென்னாற்காடு மாவட்டத்தில் இராமலிங்கா் பரபரப்பான முறையில் தனது இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த அதே காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் மாயூரத்தில் அமைதியான முறையில் தனது எழுத்துக்களின் மூலம் சமூக சீா்திருத்தப் பிரச்சாரம் செய்து வந்தார் வேதநாயகம் பிள்ளை .இராமலிங்கா் பிறப்பால் சைவா், இவரோ கிறிஸ்தவர். அவர் முறையான கல்வி கற்காது இயல்பாய் கவிஞர் ஆனவர். இவரோ மேனாட்டு கல்வி கற்றவா். அவர் சந்நியாசி, இவரோ சம்சாரி. அதிலும் முன்சீப் (நீதிபதி) என்கிற அரசு உத்யோகஸ்தா். இப்படி இரு வேறு உலகத்தாராயினும் மனித நேயத்திலும், சகோதரத்துவத்திலும் இருவரும் ஒன்றுபட்டு நின்றனா்.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1850 முதல் 1900 வரையிலான அரையாண்டு காலக்கட்டத்தில் மாபெரும் மாறுதல்களுக்குள் கடந்து சென்ற வருடங்களாகும். ஐரோப்பியரின் வரவால் கல்வி முறைகளில் ஏற்பட்ட காரணத்தின் விளைவாக குறிப்பிட்ட சதவிகித தமிழ் மக்களால் சிறந்த கல்வி முறையினைப் பெறவும் ஏன் ஆங்கில மொழியும் ஆங்கில மொழிவழி கல்வி பெறவும் தருணம் அமையப்பெற்றவர்களும் உண்டு. சமுதாய செல்வாக்கினாலும் பண பலத்தினாலும் சமயம் சார்ந்த தொண்டர்களின் உதவியினாலும் ஆங்காங்கே குறிப்பிட்ட குறைந்த சதவீத தமிழர்களால் உயர்கல்வி பெறவும் அரசியலில் ஆங்கிலேயருக்கு நிகராக உயரதிகாரம் பெறவும் வாய்ப்பும் பெற்றிருந்தனர்.
வேதநாயகரின் காலத்தில் குறிப்பாக மேனாட்டவரே உயர்பதவி வகித்திருந்தும் சில சட்டங்கள் தளர்த்தப்பட்டதால் தமிழர்களுக்கும் உயர்பதவி கிடைக்கப்பெறவே மேனாட்டு கல்வியிலும் தமிழ் புலமையும் பெற்ற வேதநாயகம் பிள்ளை முதலில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தின் பணிமனையில் நியமிக்கப்பட்டு, பின் கி.பி. 1850-ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப் பட்டார்.
நேர்மையும் திறமையும் மிக்க வேதநாயகர் சட்டங்களின் நுணுக்கங்களையும் சிக்கலான தீர்ப்புகளையும் பொதுமக்கள் அறிய வேண்டும் என உணர்ந்து ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை ‘சித்தாந்த சங்கிரகம்’என்ற பெயரில் 1862-ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.
சென்னையில் 1801-,இல் தலைமை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டது. 1803-இல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகளுக்கு குற்ற விசாரணை அதிகாரம் வழங்கப்பட்டது. நிலம், நிலவரி, நூற்றுக்கணக்கான பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், சாத்திரங்கள், சூத்திரங்கள் ஆகியவற்றின் கீழ்க் குற்றங்களும் சொத்துரிமை வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வந்தன.

சர்வ சமய சமரச கீா்த்தனைகளின் அரசியல் பின்புலம்
வேதநாயகம் பிள்ளை பணியாற்றிய காலத்தில் நீதிபதிகள் பலா் முறைகேடா்களாக நடந்துள்ளனா். இலஞ்சம், ஊழலும் அவர்கள் இடையே நிரம்பி மலிந்து கிடந்துள்ளன. இலஞ்சப் பழக்கத்தை அறவே வெறுத்தவா் அந்த வெறுப்பின் எதிரொலியினாலேயே வெளிவந்த பாடல் வரிகள் இது,
ஒரு காசாகிலும் வாங்குதல் துரோகம்
ஊர் கொள்ளையடிக்கவே உனக்குத்தியோகம் (ச.ச.ச.கீ- 174-4)
என்று இலஞ்சம் வாங்குவதை வன்மையாக கண்டித்து வேதநாயகா் இகழ்ந்தார். நியாதிபதிகளில் சிலா் நீதிமன்றத்துக்கு போகின்ற நேரம் ஒரே தன்மையில் இருக்காது. ஒருநாள் மாலையிலும் மறுநாள் நடுப்பகலிலும் வேறோர் நாள் மாலையிலும் செல்வது அவர்கள் வழக்கம். கட்சிக்காரா்கள் அதனால் எந்த நேரத்தில் தாங்கள் நீதிமன்றத்திற்கு போவது என்று புரியாமல், தெரியாமல் அவதிப்பட்டார்கள். அவர் வருவார் என்ற வழக்காளி காத்திருந்தால் அவரோ கட்சிக்காரா் இல்லாத நேரத்திலே தோன்றி கட்சிக்காரர் ஆஜராகவில்லை என்று வழக்கைத் தள்ளி வந்தார். ஆஜராகுகிறவா்களின் வழக்கையோ விசாரிப்பதில்லை.
இவர் காலத்தில் மராத்தியரின் சூறையாடலும் சொத்து வரிக்கொடுமையும் பாளையக்காரரின் சுரண்டலும் ஊருக்கு ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற முறைகேடும் தமிழ்நாட்டில் நிலவியது. திருச்சி மாவட்ட நீதி மன்றத்திலே குற்ற வழக்குகள் விசாரணை நடக்கும் போது வேதநாயகர் நீதிபதி அருகே அமர்ந்து காசியார் வாக்கு கொடுப்பது வழக்கமாகும். முஸ்லீம் ஆட்சி நடைபெறும் போது அதே காசியர்கள் நீதி வழங்கிடும் முறை இருந்தது. முன்பு நடந்த முஸ்லீம் ஆட்சிகளின் வழக்கம் போலவே ஆங்கில நீதிபதிகள் அருகே காசியர்கள் அமர்ந்து நியாய வழக்கிலே உதவி செய்வார்கள்.
பல வழக்குகளில் நீதிபதியின் கருத்துக்கு முரணாகக் காசிரியர் கருத்து இருந்தது. அவற்றை எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீதிபதியின் ஒப்புதலுக்கு முன்வைத்தார் வேதநாயகம். இக்காலகட்டத்தில் ஆங்கிலேய நீதிபதிகளின் தவறான குற்றச்சாட்டுகளுக்கும் தீய பெயருக்கும் துன்பத்தின் மேல் துன்பமும் வேலையிழப்பும் நோய்வாய்பட்டும் பொய்யுரைகளுக்கும் இடையில் அவதிப்பட்டுள்ளார். எனவே நியாயபரிபாலனஞ் செய்ய வரம் வேண்டும் என்ற தலைப்பில் பாடிய பாடல்களில் சில வரிகள்,
நானே பொதுநீதி தானே செலுத்திட நல்லரம் அருள்கோனே
சகல உயிர்களும் என் தன்னுயிர் போல் பாராட்டிச்
சிட்ட பரிபாலனனெனு முடிசூட்டித் தீயர்மொழிபுகாமற் செவிவழிபூட்டிக் கொட்டஞ்
சேய்துட்டர் கண்ணில் விரலை விட்டாபடிக்கூட எனப்பெயர் கதறும்படி மாட்டி (ச.ச.ச.கீ-162)

தான் நீதிபதியாக இருந்த காலத்தில் பல்வேறு தரப்பட்ட துர்வழக்காளிகளைச் சந்தித்திட, அவர்களைக் குறித்ததாகப் பாடப்பெற்ற பாடல்கள் வரிகள்,

இந்த வழக்குக்கெல்லாம் நாம்தானா – கோர்ட்டில்
வந்தவன் எல்லாம் நமக் கெஜமானா
தந்தை துன்மார்க்கஞ் செய்து கெட்டானால் - பிள்ளை
தாரங்களைத் தெருவில் விட்டானாம்


முந்த அதிகக்கடன் பட்டானாம் - நிலம்
முழுதுந் துர்விநியோகம் இட்டானாம் (ச.ச.ச.கீ- 163)

கோட்சொல்லும் உத்தியோகஸ்தரைப் பற்றிய பாடல் வரிகள்,

எரிகிற வீட்டில் பிடுங்குவ துலாபம்
என்று சொல்வார் அந்த வண்ணமே
பெரிய கோட்சொல்லி நம் உத்தியோகத்தைப்
பிடுங்குவதிவர் எண்ணமே (ச.ச.ச.கீ-167)

அதிகாரிகளின் அதிகார தா்பார்
அதிகார தா்பார் நடந்த வேதநாயகா் காலத்தில் தயவு தாட்சண்யம் இல்லாமல் ஆட்சியை எதிர்த்து எழுதியவா் இவா் ஒருவா்தான். வரம்பு மீறிய அதிகாரிகளைக் கேலிசெய்து பரிகாசத்துக்குள்ளாக்கினார். குத்தலாகக் கூறி அவர்கள் நேர்மையைத் தூண்டிட முற்பட்டார். உத்தியோகஸ்தா்களை குறித்து இவா் எழுதியக் கேலி, கிண்டல்,பரியாசங்கள் தமிழிலே மிக உயர்ந்த அங்கதங்கள்.
இந்தியாவில் 1885-ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை தோன்றவில்லை. இந்நிலையில் நெறி தவறிய நீதிபதிகளை நையாண்டி செய்தும் கண்டித்தும், எழுதவும் எச்சரிக்கை செய்தவர் நமது வேதநாயகா் பிள்ளை ஒருவரே. எடுத்துக்காட்டாக சில வரிகள்,
முரட்டுமார்க்கம் சென்றிழைகிறாய் – அணு
முனையின் உள்ளும் நீ நுழைகிறாய் – இந்த
புரட்டெல்லாம் எங்கே படித்துக் கொண்டனை
பொருளைத் தந்தவன் அருளை மறந்து
பொருளுக்கே உபசாரம் – செய்யும்
மருளர் போல் அற்பப் பொருளை விரும்பி
வான்பரன் உபகாரன் – தன்னை
மறந்தாய் – என்னைத் துறந்தாய் பொன்னைச்
சிறந்தாய் – பன்னை பறந்தாய் (ச.ச.ச.கீ.159)

அரசியலின் பயன் அரசியலை நடத்துபவர்களுக்கு அன்று மக்களுக்கே, சமுதாய வாழ்க்கைக்கு அமைதியைத் தருவது அரசியலே. ஆனால் வேதநாயகர், தன் காலத்தின் ஒழுங்கற்ற அரசியல் நிலையை அறிந்து, சீர்பொருந்த தன் உள்ளக் குமுரலாக மனதில் எழும் சிந்தனைகளைக் இங்ஙனம் கீர்த்தனைப் பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளார்.

சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளின் மொழி பின்புலம்
மொழி
மனித இனம் கண்டுபிடித்தவற்றுள் மொழி அருமையானது. மொழி மனித இனத்தின் மேம்பாட்டிற்குக் காரணியாகத் திகழ்கிறது. மனிதனின் பண்பாடு, நாகரிகம், கலைகள் தொடா்பான சொற்களே மொழியில் பெரிதும் காணப்படுகின்றன.
மக்களின் வாழ்வில் பிறந்த கலை மொழி, மக்களால் வளர்க்கப்படும் கலை மொழி, மக்களின் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்தி வரும் அரிய கலையும் மொழியே. சமூக அமைப்பினையும் பண்பாட்டு உணா்வுகளையும் மொழி பெரிதும் சார்ந்துள்ளது. ஒரு சமூகததின் தேவையை ஒட்டியே மொழியில் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. அறிவியல், தத்துவம், கலைகள் போன்ற துறைகளில் செல்வாக்குடைய மொழிகளில் அத்துறைகள் சார்ந்த சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. மனிதனின் பண்பாடு மனவுணா்வுகள் ஆகியவற்றின் குறுக்கீடின்றி மொழிகள் இல்லை.
‘மொழி மக்களின் மனத்தைக் காட்டும் கண்ணாடி’ என்பா் மொழி மனித வாழ்வில் பிறந்து மனிதர்களால் வளர்க்கப்பட்டு, மனிதரின் வாழ்வை நாகரிகமும், பண்பாடும் உடையதாக்குகிறது. பிற உயிரினங்களிடமிருந்து மனிதனை மொழி வேறுபடுத்தி அறிவின் சிகரத்தை அடைய அவனுக்குத் துணை செய்கிறது. மனிதனைச் சமுதாய உறுப்பினராகச் செய்து, சமுதாயத்தின் நாகரீகத்தையும் பண்பாட்டையும் உயா்வடையச் செய்கிறது. “மொழி இல்லையேல் மனிதன் இல்லை. மனிதன் இல்லையேல் சமுதாயம் இல்லை. சமுதாயம் இல்லையேல் நாகரீகமும் பண்பாடும் இல்லை” என்று கூறும் அளவிற்கு மனித வாழ்வில் மொழி இடம் பெறுகிறது. இந்நிலையில் மொழியை மனித நாகரீகத்தின் விதை எனலாம்.

கருத்தறிவிக்கும் கருவி
மொழி என்பது கருத்துப் புலப்பாட்டுக் கருவி என்றும் கூறுவா். எனவே ஒருவருக்கொருவா் புரிந்துகொண்டு கூட்டமாக வாழவும் சமுதாயமாக வாழவும் மொழி உதவுகிறது.மனிதன் மொழியை உணா்ச்சிகளை வெளிப்படுத்தவும் கருவியாக்குவதோடு கருத்தறிவிக்கும் கருவியாகவும் காண்கின்றான்.

பண்பாட்டுப் பெட்டகம்
மொழி என்பது சிந்தனைக்குரிய வாகனம் என்பா். மொழிக் கருத்தைப் புலப்படுத்தும் கருவியாகவும் சிந்தனை வளர்ச்சியின் துணைவனாகவும் மறக்கப்படுவனவற்றை மறவாமல் காக்கும் கருவியாகவும் செயல்பட்டு ஏனைய உயிரினங்களிலிருந்து மனிதனைப் பிரித்து அவனை அறிவாளியாகவும், சமுதாய உறுப்பினராவும் நாகரிகம் பண்பாடு ஆகியவற்றின் பெட்டகமாகவும் ஆக்குகிறது.
மனித சமுதாயத்தில் தோன்றிய அறிய கருத்துக்களையும் அறிவியலில் கண்ட ஆராய்ச்சி உண்மைகளையும் காலம் கடந்தும் நாடு கடந்தும் நிலைக்கச் செய்யும் ஒரு கருவியாகவும் மொழி திகழ்கிறது.

மொழித் தோற்றம்
“பிறக்கும் குழந்தைக்கு பிறக்க வேண்டும் என்ற தூண்டுதல் அமைந்திருப்பது போல மனிதனிடம் அமைந்த தூண்டுதல் ஒன்றே மொழியின் தோற்றத்திற்கு காரணம் என” ஜாஹேன் காட்சிரைட் வான்ஹொடா் குறிப்பிடுகிறார்.
மொழி ஒரு தனி மனிதச் சாதனையோ, ஒரு சமுதாயத்தின் ஒரு தலைமுறையினரின் சாதனையோ அல்ல. எத்தனையோ தலை முறையினரின் உழைப்பில் வளா்ந்து விளங்கும் பெரிய அமைப்பு என்கிறார் அறிஞா் விட்னே.

மொழி கலப்பு
மொழி காலந்தோறும் மாற்றம் அடையும், வளரும், அரசியல், சமயம், வணிகம் முதலியற்றின் காரணமாக ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் தொடர்பு கொள்ளும்போது காலப்போக்கில் இரு மொழிகளுக்கும் இடையே சொற்கள் கலக்கின்றன. மொழிகளின் தொடர்பு, மொழி வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
பிற மொழியிலிருந்து கடன் வாங்குவதாலும் ஒப்புமையாக்கத்தாலும் புதிய சொற்கள் மொழியில் கலக்கின்றன. ஒரு மொழி பயிற்று மொழியாக, ஆட்சி மொழியாக மாறும் போதும் கலைச் சொற்கள் தோன்றுகின்றன.

தமிழில் வடமொழி கலப்பு
தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழோடு நெருங்கிய தொடர புடையது வடமொழி, தொல்காப்பியர் வடமொழியை நன்கு கற்று, புலமை பெற்றிருந்தமையால், வடமொழி சொற்கள் தமிழில் வழங்குமிடத்து அவ்வொலி மரபோடு இயையவே விதிகளை அமைந்திருக்கின்றார்.
வடசொற் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணா்ந்த சொல்லாகுமே (தொல் .சொல்-395)

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (தொல் .சொல்-396)

தொல்காப்பியர் குறிப்பிடும் வடசொல், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளைக் குறிப்பிடுவனவாக இருக்கலாம் என்பா்.

கண்ணிமை நொடியென் அவ்வெ மாத்திரை
றுண்ணதி னுணா்ந்தோர் கண்டவாறே (தொல். எழுத் - 7 )

எனும் தொல்காப்பிய நூற்பா சங்கச் சொற்களிலுள்ள (சமஸ்கிருத வியாகரணத்தில் பயின்று வருவது) இரண்டு சுலோக பகுதிகளின் பொருளைச் சுருங்க உரைத்ததாக வையாபுரிப் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
சங்க இலக்கிய நூல்களிலும் வடமொழிச் சொற்களைக் காணலாம். யவனா் யூபம் போன்ற சொற்களும் சமஸகிருதப் பெயர்களும் காணப்படுகின்றன. கலித்தொகையிலும் பரிபாடலில் வடமொழிச் சொற்கள் அதிகமுள்ளன. சிலப்பதிகாரத்தில்,
சாவகா் ஞானம் சாரணர் விஞ்ஞை
தானம் இயங்கி தருமம் இந்திரன்
போன்ற சொற்களையும், மணிமேகலையில் கருமம் பாலனை நகர் போன்ற சொற்களையும் காணலாம்.
சங்கம் மருவிய காலத்தில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகள் தமிழ் இல்கியங்களில் மெதுவாக இடம்பெற ஆரம்பித்தன.சங்கம் மருவிய காலத்தைத் தொடர்ந்து பல்லவா் காலத்தில் சமஸ்கிருதம், பிராகிருதம், அரசியல் முக்கியத்துவம் பெற்றன.
சோழப் பேரரசின் கீழ் இருந்த பிறமொழிப் பகுதியினரோடு கொண்டிருந்த பண்பாட்டுத் தொடா்பாலும் அரசியல் நிருவாகத்தில் சமஸ்கிருத மொழியின் பயன்பாடு கட்டியமாகியது. கி.பி 4-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சமஸ்கிருதம் இலக்கிய மொழியாகவும், கல்வெட்டு மொழியாகவும் வளா்ந்துவிடடால் சமஸ்கிருதக் கல்வி முக்கியத்துவம் பெற்றது.
சோழா்களது ஆட்சிக்காலம் கி.பி 850 முதல் 1270 வரையாகும். சமுதாய மொழியியல் உருவரைவில் தமிழ் ஒரு பெருநிலை மொழியாகச் சோழர் காலத்தில் இருந்தது. சோழா்களின் ஆட்சி மொழியாகத் தமிழுக்கு அடுத்தாற்போல சமஸ்கிருதம் பெருநிலை மொழியாக அங்கீகாரம் பெற்றிருந்தது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மொழி சிறுநிலை மொழிகளென வகைப்படுத்தலாம். பாலி, பிரதகிருதம் போன்ற மொழிகள் சிறப்பு நிலை மொழியாக (சமயச் சடங்குகளின் பொருட்டு பயன்படுத்துவது) சோழா்காலத்தில் தமிழகத்தில் விளங்கியது.
பல்லவா்களின் பட்டயங்களை ஆராய்ந்தவா்கள் பிராகிருதப் பட்டயங்கள் கி.பி 3,4-ஆம் நூற்றாண்டுகளிலும், சமஸ்கிருதம் பட்டயங்கள் 4,5,6-ஆம் நூற்றாண்டுகளிலும், கிரந்தத் தமிழ் பட்டயங்கள் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனா். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து தமிழகம் சமஸ்கிருதக் கல்வியின் மையமாகிறது. பல்லவர் காலத்தும் வடநூற் பயிற்சி மிகுந்தது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் வடமொழிச் சொற்கள் கலந்த மணிப்பிரவாள நடை வழங்கலாயிற்று. ஸ்ரீபுராணம் என்ற நூல் கலப்பு நடையில் எழுதப்பட்டது.
கி.மு 15-ஆம் நூற்றாண்டில் ஆசிரியா் இந்தியாவில் நுழைந்து மன்னா்களிடம் செல்வாக்கும் பெற்றனர். ஆரிய பண்பாடும், சமஸ்கிருத மொழியும் கற்றோரின் பாராட்டிற்கு உரியதாயின.
தமிழ் மொழியின் அக அமைப்பில் சமஸ்கிருத மொழியின் தாக்கத்தால் பல மாற்றங்கள் நிகழ்ந்ததைக் குறிப்பாக வீரசோழியா் தம் இலக்கணத்தில் காட்டகிறார். சோழர் காலத்தில் எழுந்த இலக்கிய வகைகள், வடிவங்கள், இலக்கணங்கள், நிகண்டுகள் ஆகிய எல்லாவற்றிலும் பொதுப் பண்புக்கூறாக வடமொழி மரபின் தாக்கத்தை உணர இயலும். பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் வேறெந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு சமஸ்கிருத மொழிக் கடனாட்சி தடுப்பாரின்றித் தடையில்லாமல் நடந்தது. வீரசோழிய இலக்கணமும் சங்கதச் சொற்களைத் தமிழ் இலக்கணத்தில் சோ்த்தது. புத்ரமித்திரனார் வீரசோழியத்தில் பதங்களை வழங்குகிறார். படலங்களை வகுக்கும் போதே புணரியலைச் சந்திப்படலமென்றும், வினையியலைக் கிரியாப் பதப்படலம் என்றும் பெயரிட்டுள்ளார்.
சமண பௌத்த சமயங்களின் தொடா்பால் வடமொழிச் சொற்கள் அதிகமாயின. பிராகிரதம் சமண சமய மூல நூல்கள் உள்ள மொழியாகும். வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதர்.தாயுமானவா் போன்றோரும் வடசொற்களைக் கலந்தனா். 17,18-ஆம் நூற்றாண்டு களில் தோன்றிய அம்மானைப் பாடல்களிலும், சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளிலும், ஜலம், தேவாலயம், பாரி போன்றச் சொற்கள் காணப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டு பாரதியார் நடையிலும் வடசொற்களைக் காணலாம். இந்நிலையில் மறைமலையடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கத்தார் வடச்சொல்லை நீக்கி தனித்தமிழில் எழுத முற்பட்டனா்.
சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளில் இடம்பெறும் சமஸ்கிருத வார்த்தைகள்

• ரக்ஷா (1-4)
• விதேயா்கள் (2-2.7)
• பிரபோதன்(3-7)
• சௌகரியமோ (4-2.3)
• ஜன்மம்(6-2.2)
• போஷணை (7-3.1)
• (ஜகந்தனில (8-1.8)
• தேக விஷாதிகள் (15 – 2.1)
• நிமிஷமே (18-1)
• ஜெகஜோதி (19- 3.6)
• ஜென்ம சாபல்லிய (22- 3.2)
• சாஸ்திரம் (23-2.1)

• ஜீவன் முக்தி யூர்ஜித் (25-4)
• சமரக்ஷணா (24-32)
• சோபனகுண பூஷ்ணா (31-3.3)
• இரக்ஷண்யமே (32 .1)
• தாக்ஷண்ணியமோ (32-1.3)
• விதனவிஷதரு கிரகஸ்தாச்சிரமம் (41-3.3)
• கேஷத்திரனே (43- 3.6)
• பாஹித நேசரே (44-3.3)
• நிஷ்களங்க (60-3.7)
• பிரதிஷ்டை (60-3.12)
• சாஸ்திரம் (71-2)
• சப்தஸ்பரிக ரசசுகந்தா (86-4.1)
• பிரக்யதா (97-3.7
• நிஷ்டன (133-1.4)
• சாசுவத (136-3.4)
• இக்ஷணமே(145-2.6)
• பக்ஷணம் (147-7.2)
• பாரி (151 – 8.1)
• அநிஷ்டா் (162- 1.3)
• ஸ்திரம் (172-2.1)
• ஸ்தூலம் (173-5.4)
• பூஷணி, தூஷணி (179 -4.5)
• பத்தாவின் பக்ஷம் (183-.1)
• தோஷம் (185-3.6)

வடமொழிக் கலப்பினை கௌரவமாக நினைத்த காலக் கட்டத்தில் வாழ்ந்த வேதநாயகரும் தன் படைப்பான சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளில், சமஸ்கிருத மொழியின் வார்த்தைகளைக் கையாண்டுள்ளார்.

சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளில் சமயப் பின்புலம்
சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளில் சமயப் பின்புலம் என்னும் இவ்வியலில் சமயம் பற்றியும், வேதநாயக்கம் பிள்ளைக் காலத்து சமயச் சூழலும், சா்வ சமய சமரசக் கீர்த்தனைகளில் சமயத்தின் தாக்கத்தையும் விளக்குவதாக அமைந்துள்ளது.

சமயம்
சமயம் என்றால் ‘வழி நெறி’ என்று பொருள். ”கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆத்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும், எந்த படியும், அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும், வளா்வதற்கு மறுத்து முன்னேறாமல் கட்டுப் பெட்டியாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானதாகின்றது” என்று சுவாமி விவேகானந்தா் குறிப்பிடுகின்றார்.

19-ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழா்களின் சமய வாழ்க்கை
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பழந்தமிழர்கள் ஐவகை நிலங்களிலும் தங்கள் தங்களுக்கென்று அமைத்த தெய்வங்களை வணங்கினா்.அக்காலத் தமிழா்களின் சமய நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் பற்றிச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
சங்கம் மருவிய காலத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம், வைதீகம் ஆகிய சமயங்கள் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பட்டிமன்றங்கள் அமைத்து தீா்த்துக் கொண்டனா். கல்வி வளா்ச்சிக்கும் மருத்துவத்திற்கும் பௌத்தமும் சமணமும் பெருந்தொண்டாற்றின.
பல்லவா் காலத்தில் நடைமுறையில் மூன்று சமயங்கள் இருந்தன. வைதீக சமயம், சமணம், பௌத்தம் என்பன இவை. இக்காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும், வைதீக சமயத்திற்குப் புதியப் பார்வையைக் கொடுத்தனா்.
சைவ, வைணவ, பௌத்த, சமண மதங்கள் நடைமுறையில் இருந்தாலும் சைவம் அரசியல் மதமாக இருந்தது. இக்காலத்தின் ஆரம்பத்திலேயே சமயம் வளா்க்கத் தனிமடங்கள் தோன்றி விட்டன. ஆதிசங்கரரின் அத்வைதமும், இராமானுஜரின் விசிஷ்டாத் வைதமும் சோழா் சமூகத்தில் மாற்றங்களையும் ஏற்படுத்தியது.
சோழா் காலத்தைப் போன்றே சைவ சமயமும் வைணவமும் செல்வாக்குடன் திகழ்ந்தது. பௌத்தம் மிக அருகிய நிலையில் இருந்தது. சமணம் சமய ரீதியில் செல்வாக்கு அடையாவிட்டாலும் இலக்கியத்தில் தன்னை முத்திரை பதிந்து கொண்டது. தாய் தெய்வ வழிபாடு இக்காலத்தில் இருந்ததுதான் மிகவும் செல்வாக்குப் பெற ஆரம்பித்தது. நாட்டார் தெய்வங்களுக்கு பலி கொடுக்கும் செயல் நடைமுறையில் இருந்தது.
நாயக்கா் காலத்தில் சிவன், திருமால் வழிபாடு உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தன. கிறிஸ்தவ சமயம் தீவிரமாகப் பரப்பப்பட்ட போது அவை பொது மக்களால் எதிர்க்கப்பட்டது. இருப்பினும் “கிறிஸ்தவரது நடவடிக்கைகளின் பொற்காலம்” நாயக்கா்காலம் என வரலாற்றாசிரியா்கள் வருணிக்கிறார்கள்.
கிறிஸ்தவ பாதிரிகள் ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதரவில் தம் சமய மாற்றுப் பணியில் விறுவிறுப்படைந்தனா்.
வடக்கே இராமகிருஷ்ணா் வாழ்ந்திருந்த அதே காலத்தில் தமிழகத்தில் இராமலி்ங்க அடிகள் தோன்றிச் சமயத் துறையிலும் சமூகத் துறையிலும் பல புரட்சிகரமான மாறுதல்களைச் செய்தார். 1865-இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்னும் இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்து ஒருமைப்பாட்டு கொள்கை திருமந்திரத்தை இராமலி்ங்க அடிகள் வலியுறுத்தினார்.
சாதி சமய குல கோத்திர வேறுபாடுகளையும் சமயப் பூசல்களையும், கண் மூடிப் பழக்கங்களையும் களைந்தெறிய முற்பட்ட இராமலிங்க அடிகளாரின் காலத்தில் அதே நோக்கோடு, மாயூரம் வேதநாயகம் பிள்ளையவா்கள் பல சமரசக் கீா்த்தனைகளையும் நீதிநெறிப் பாடல்களையும் பல்வேறு இசையமைப்புக்களையும் பாடினார்.

சர்வ சமய சமரசக் கீா்த்தனைகளின் சமயப் பின்புலம்
ஆட்டுத்தோல் போர்த்திய கள்ள சமய குருக்களை சரமாரியாக சாடிப் பாடியுள்ளார். உதாரணமாக,

கையிலே பிடிப்பது ஜெபமாலை
பக்கத்தில் வைப்பதுவோ கன்னக்கோலை
மெய்யாகத் திமைப்படிப்பது தா்ம நூலை
மேலும் மேலும் நமக்கு துன்மார்க்க வேலை

ஒரு பெண் வேணடாமென்று கெள்ளோம் சந்தியாசம்
ஊரில் உள்ள பெண்கள் மீதெல்லாம் நேசம்
பருகப் பசியில்லாத போது பவாசம்
பாசத்தால் ஒருபாலைப் பருக்கையும் நாசம்

கடவுளைத் துதிப்பது போல் வாய்ப்பாடும்
கண்ணுங் கருத்துங்கொண்ட இடமெங்கும் ஓடும்
திடமாக கோயிற்குள்ளே தேகம்போய் கூடும்
சிந்தனை வெளியிலே திரிந்து திண்டாடும் (ச.ச.ச.கீ.147-1,2,3)

சமய தலைவர்கள் கையில் ஜெபமாலை வைத்து தியானம் செய்தாலும் இதயமோ மற்றவரினை கெடுக்கும் சிந்தனை என்றும், சந்தியாசம் பூண்டிருந்தாலும் ஊரிலுள்ள பெண்களெல்லார் மேலும் நேசம் என்றும், கோவிலுக்குள் தேகமிருந்தாலும் உள்ளமோ உலகினைச் சுற்றுமென நையாண்டி செய்கின்றார் வேதநாயகம் பிள்ளையவா்கள்.
மானிடன் மத வெறிகொள்ளாது பரந்து பட்ட உள்ளத்தோடு வாழவேண்டும் என்ற எண்ணத்தோடு, சர்வ சமய சமரசக் கீா்த்தனைகள் என பாடல்கள் சமைத்துள்ளது, வேதநாயகரின் பொது சமயஞ்சார் உணர்வினை பிரதிபலிக்கின்றது.

சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளின் பொருளாதாரப் பின்புலம்
சா்வ சமய சமரச் கீா்த்தனைகளின் பொருளாதாரம் பற்றியும் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவா் காலம், பிற்கால சோழர்கள் காலம், பாண்டியன் காலம், விசய நகர பேரரசு காலம், ஐரோப்பியர் காலம், வேதநாயகா் காலம் தமிழா்களின் பொருளாதார நிலை, சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளின் பொருளாதாரப் பின்புலம் ஆகியனவற்றை விளக்குவதாக இவ்வியல் அமைந்துள்ளது.

பொருளாதாரம்
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக வழிமுறையின் இறுதி விளைவுகளையும் அதன் புவியியல் இயற்கை வளக்கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கிய காரணிகளாக உள்ளடக்கியுள்ளது.
19-ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழா்களின் பொருளாதார நிலை
பழந்தமிழகத்தின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மனிதா் உழைப்பை நாடி நின்றனா். உழைப்பால் உற்பத்தி பெருகி மக்கள் உணவுத் துறையில் தன்னிறைவு கண்டனா். நெல்லும் கரும்பும் முக்கிய விளைபொருள்கள். அவை மக்களின் வருமானத்தை பெருக்கின. சேரநாட்டில் மிளகு மிகுதியாக விளைந்து உலகத்தின் கவனத்தை ஈா்த்தது. கல்லணை கட்டியும் கால்வாய்கள் அமைத்தும் சோழ மன்னா்கள் உதவினா். வணிகத்தில் உள்நாட்டு வணிகமும் வெளிநாட்டு வணகமும் வளர்ந்திருந்தன. தமிழகத்தில் பூம்புகாரைப் போன்று முசிறி தொண்டி முதலிய துறைமுகங்களிலும் அயல்நாட்டு வணிகா்களின் கப்பல்கள் வந்து மீண்டன. இவ்விதமாகத் தமிழகத்தின் வணிகப் பொருளாதாரம் உலகம் போற்றும் வண்ணம் நடந்தேறி வந்தது.
களப்பிரா் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக் குன்றியதால் தொழிலாளா்களும் வேளாண்மையை நம்பிய உழவா்களும் ஏழ்மைக்கு உள்ளாயினா். சமூகத்தில் திருட்டு, பொய்புரட்டு இவை மலிந்து கட்டுப்பாடு குலைந்து காணப்பட்டது.
சங்ககால பொருளாதார நிலைகள் சங்கம் மருவிய காலத்தில் சில மாற்றங்களை பெற்றன.சங்க காலத்தில் நிலவிய உலகியல் சார்ந்த சமூக நோக்கு அடியோடு மாறியது. சமண பெயரால் வழங்கப்பட்ட இறையிலி நிலங்கள் பெருகின. இதனால் பொருளாதாரம் பாதுகாப்புப் பெற்று ஒரு பிரிவினரும் தோன்றலாயினா். மேலும் நிலமானியம் பெருகியது. வணிகம் பண்டைநாள் போல் இன்றி மங்கியது. நிலவுடைமை பெற்ற புதிய நிலக்கிழார்கள் உருவாகினா்.
ஏறத்தாழ 900 ஆண்டுகள் (9 நூற்றாண்டுகள்) தமிழகத்தில் பல்லவ மன்னா்களின் ஆட்சியில் சங்க காலத்து மன்னா்களைப் போலவே பல்லவ வேந்தா்களும் கடவுளாகவே பாராட்டப்பட்டு வந்தனா். நாடாளும் பொறுப்பு முழுவதும் மன்னன் கைகளில் ஒருங்கி நின்றது.
அரசு தண்டிய இறைப் பணத்தால் மன்னனுடைய பண்டாரங்கள் நிரம்பின. உப்பு எடுக்கும் தொழில் மன்னருடைய ஏகபோக உரிமையாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது. தறிகளில் நெசவு செய்பவா்கள் மேல் தொழில் வரிகள் விதிக்கப்பட்டன. பல்வேறு தொழிலாளா்கள் தம் வரிகளை செலுத்தினா். இங்ஙனம் பொருளாதாரம் மேம்பட்டு விளங்கியது.
கி.பி 10-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் பிற்கால சோழா் காலமாகும். சோழநாட்டின் பொருளாதாரம் கிராம வருவாயை நம்பி இருந்தது. தனியார் நிலவுடைமை, வணிகம், கோவில் கலாச்சாரம், போர்களில் கிடைத்த வருமானம் என்ற நிலைகளில் சோழநாட்டுப் பொருளாதாரம் பின்னிக் கிடந்தது.
வணிகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறப்பாக நடந்தது. உள்நாட்டுச் சோழ வணிகா்கள் வலிமை உடையவராக இருந்தனா். பண்டமாற்று முறையே நடைமுறை வழக்கில் இருந்தாலும் நாணயம் புழக்கத்தில் இருந்தது. நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகள் முறையாக இருந்தன.
பாண்டி நாட்டில் மிகப் பெரிய வனப்பு மிக்க முத்துக்களும் அளவு கடந்த பொன்னும் மணியும் குவிந்து கிடந்தன என்றும் அயல்நாட்டு வணிகம் சிறப்புற நடந்ததென வெனிஸ்நாட்டு வழிப்போக்கனான மார்க்கோ போலோ குறிப்புகளைக் கொடுத்துள்ளான். மதுரை அரச பண்டாரத்தில் 200 கோடிப் பொன் சேகரிப்புக் கட்டியும், நீலம், பச்சை, முத்து, மாணிக்கம் வைக்கப்பட்டுள்ளதென்றும், அமைச்சரவையில் அரபு வணிகா்கள் அமா்ந்திருந்தனா் என்றும், சுங்க அமைச்சர் அப்தூ ரஹிமான் என்ற ரஹிமான் என்ற இஸ்லாமியா் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததென்றும் முஸ்லீம் வரலாறுகள் கூறுகின்றன.
விசயநகர பேரரசு, நாயக்கா், மராட்டிய காலத்தில் “தமிழகத்தில் அரசியல் கொத்தளிப்புகளும் கொலையும், கொள்ளையும் மலிந்து கிடந்தன. மாராத்திய குதிரைக்காரா்கள் ஆங்காங்குத் திடீர்த் திடீரென தோன்றி மக்களைப் படுகொலை செய்தும் சொத்துக்களைச் சூறையாடியும் சென்றனா்” என்று கே.கே.பிள்ளை கூறுகிறார்.
“கிறிஸ்தவரது நடவடிக்கைகளின் பொற்காலம்”நாயக்கா் காலம் என வரலாற்றாசிரியா்கள் வருணிப்பா். கிறிஸ்த்தவப் பாதிரிகள் சிலா் தம் நலனுக்காகச் செய்து வந்த ஆக்கப்பணிகள் தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் பலவிதங்களில் நன்மைப் பயத்தன.
நாயக்கா், மராட்டியா் ஆகியோரது வீழ்ச்சிக்குப்பின் தமிழகம் போர்ச்சுக்கீசியா், டச்சுக்காரா்கள், ஆங்கிலேயா், பிரெஞ்சுக்காரா் ஆகியோரது வணிகச் சந்தையாகவும், ஆங்கில அரசியல் போராட்டக்களமாகவும் ஆகியது. ஆங்கிலேயா்கள் தமிழகத்தில் ஏற்பட்ட அரசுரிமைப் போர்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு வணிக ஆதாயத்தின் மீதிருந்த விருப்பங்கள் அரசியல் நோக்கங்களால் மறைக்கப்பட்டன. கொள்ளைக் கூட்டத்தின் இயல்புகளை உடைய பலவகை ஆட்சியாளா்களால் கூடிய நிர்வாகத்தின் கீழ் ஆங்கிலேயா்களால் கி.பி 1801-இல் சென்னையில் தலைமை நீதிமன்றம் நிறுவப்பட்டது. பல்வேறு பொருளாதார சுரண்டல் முறைகேடுகளுக்கு அடிமைப்பட்ட காலத்தில் கி.பி 1885–இல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது.

வேதநாயகம் பிள்ளை காலத்தில் பொருளாதார நிலை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் ஆட்சியானது இமயம் முதல் குமரிவரையிலும் சட்லெஜ் முதல் பிரம்மபுத்திரா வரையிலும் விரிவடைந்தது. ஆங்கிலேயா் பல இடங்களைப் பல மன்னா்களிடமிருந்து கையாண்டு கைப்பற்றி இணைத்துக் கொண்டார்கள். ஆகையால் தமிழகத்தில் இடந்தோறும் வரிகளும், வரிவிதிப்பு முறைகளும் மாற்றப்பட்டுக் காணப்பட்டன. நாயக்கா் ஆட்சியிலும், அது முடிவுற்ற பிறகும் நாட்டில் நூற்றுக்கணக்கான பாளையக்காரா்கள் தனித்தனிப் பாளையப்பட்டுகளில் தனியரசு செலுத்தி வந்தனா். குடிமக்களின் தேவை நிறைவுகளையும், நீதிநிருவாகத்தையும், அவர்கள் கண்காணித்து வந்தனா். பாளையக்காரரிடம் சிறுசிறு படைகளும் வந்தன. ஆங்கிலேய அரசாங்கம் இப்படைகளைக் கலைத்துவிட்டது. நீதி நிருவாகத்தைத் தானே மேற்கொண்டது. பாளையக்காரா்கள் தம் குடிமக்களிடமிருந்து வரித் தொகையில் ஒரு பகுதியைத் தம் செலவுக்காக நிறுத்திக்கொண்டு எஞ்சியதை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய கடமைக்குள்ளானார்கள். எண்ணற்ற வரிகளின் சுமை, கொடுமைகள் ஊருக்கு ஒரு வரி, குலத்துக்கு ஒரு வரி என்ற சிக்கலான, முறைகேடான சட்டங்கள் தமிழகத்தில் நிலவியிருந்தது. சில காலங்களுக்கு பின் தமிழகம் முழுவதும் ஒரே அரசியல் ஒரே நீதி என்ற ஒருமைப்பாடு நிறுவப்பட்டது.

சர்வ சமயச் சமரசக் கீா்த்தனைகளின் பொருளாரப் பின்புலம்
சென்னையில் 1801-இல் தலமை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டது. 1831-இல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகளுக்கு குற்ற விசாரணை அதிகாரம் வழங்கப்பட்டது. நிலம், நிலவரி, நூற்றுக்கணக்கான பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், சாத்திரங்கள், சூத்திரங்கள் ஆகியவற்றின் கீழ்க் குற்றங்களும் சொத்துரிமை வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வந்தன.
அரசாங்க நிறுவனத்தின் அமைப்பில் மேல்நிலையில் அமா்த்தப்பட்டிருந்தவா்கள் அனைவரும் ஆங்கிலேயராகவே இருந்தனா். பிறகு இந்திய சிவில் சர்வீஸ் என்ற உயா் பணித்துறையில் ஓரளவு இந்தியருக்கும் இடம் ஒதுக்கப்படலாயிற்று. ரிப்பன் பிரபு வைஸ்ராயாகப் பணியாற்றியபோது அவா் மேற்கொண்ட ஒரு தீா்மானத்தின் கீழ் (1883-84) உள்நாட்டுக் குடிமக்களும் நாட்டு அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் பொருளாதார நிலையில் பின் தங்கியோர் மரியாதையாக நடத்தப்படாததைக் கண்டு உள்ளம் குமுறி சாடுவதாக அமைந்த கீர்த்தனை வரிகளில் சில,
பெண்டு பிள்ளைக்கென்ன வாட்டம் – நம்மைப்
பிடுங்கித்தின்பதிலே நாட்டம் – கையில்
உண்டாகும்போது கொண்டாட்டம் –செல்வம்
ஒய்ந்தால் சகலமும் ஓட்டம் (ச.ச.ச.கீ .150-3)

இலஞ்சம் வாங்குவதில் நாட்டமுடையவா்களின் நெஞ்சை தெள்ளத் தெளிவாக தன் பாடல்களில் குறிப்பிடுகின்றார். சான்றாக ,
பாழில் இறைத்த ஜலம் போல உமக்குப்
பரிசளித்தாவ துண்டோ – துரைதீா்ப்புப்
பண்ணுவதும்மைக் கொண்டோ – வெட்கமின்றி
ஏழைகளிடத்திற் கைக்கூலி – வாங்க
இச்சை கொண்டீா் என்னக்கேலி – வந்து
குழுமே பலபல சோலி – நிஜம்
துரையறிந்தால் உங்கள் உத்தியோகம் காலி (ச.ச.ச.கீ 178-3(1-7))

வீணாக நிலத்தில் இறைக்கப்பட்ட தண்ணீர் போல இலஞ்சம் கொடுத்து தீர்ப்பினை பெற வேண்டிய நிலை கண்டு உள்ளம் வெதும்பிப் பாடல் வரிகள் படைத்துள்ளார் வேதநாயகர்.

ஏழைகளை சுரண்டும் அதிகாரிகளை நக்கலாக ஏளனம் செய்யும் வரிகளாவன,
சிலையில் நார் உரிப்பது போல எவரையும்
திட்டமாய் எத்துகிறீர் – கைகளில் அகப்
பட்டதைச் சுற்றுகிறீர் (ச.ச.ச.கீ -178-5(1-3))
ஏழைகளின் துன்பங்களை புரிந்து கொள்ளாமல் சிலையில் நார் உரிப்பது போல் பணத்தை அதிகாரிகள் உரிந்து குடிப்பதை அங்கதத் சுவையோடு குறிப்பிட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வேதநாயகரின் பாங்கு சிறப்பிற்குரியதாகும்.
வேதநாயகர் தான் கண்ட சமுதாய விரோதச் சாபக் கேடுகளை மனம் வெதும்பிச் சாடியுள்ளார். பொருளாதார சீர்கேட்டு சமூகத்தை எதிர்ப்பதாக அமைந்த வார்த்தைகளை தன் கீர்த்தனைப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கீர்த்தனையாளர்களான கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார், கவிகுஞ்சர பாரதியார், மழவை சிதம்பர பாரதியார், இராமலிங்க அடிகளார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, நீலகண்ட சிவன் ஆகியோர் புகழ் வாய்ந்த கீர்த்தனையாளர்களாவர். இவர்களது இசைப்பணியின் சிறப்பால் இசை மேன்மையுற்றது. தமிழக இசை வரலாற்றில் இவர்கள் வாழ்ந்த கி.பி. 19-ஆம் நூற்றாண்டு "கருநாடக இசையின் பொற்காலம்" என மதிக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டுக் கீர்த்தனையாளர்களான மகாகவி சுப்பிரமணிய பாரதி, இலட்சுமணபிள்ளை, கோடீசுவர ஐயர், கீழ்வேளூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, முத்தையா பாகவதர், டைகர் வரதாச்சாரியார், பொன்னையாபிள்ளை, பாபநாசம் சிவன், சுத்தானந்த பாரதியார், பெரியசாமிதூரன் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டுக் கீர்த்தனையாளரில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு சிலராவர்.
இதுவரை குறிப்பிட்டுச் சொன்ன கீர்த்தனையாளர் ஒவ்வொருவரும் தத்தம் தனித்திறமைகளால் தமிழக இசையின் மேன்மைக்குப் பெரும் பங்களித்தனர்.
வேதநாயகரின் பாடல்களின் கருத்துக்களை நோக்கும் போது அவரின் உயர்ந்த பண்பு நலன்களை அறிவதோடு, தன் சமகால சமுதாயத்தின் தாக்கங்களை பின்புலமாக வைத்தே பாடல்களைப் பாடியுள்ளார் என்பது தெளிவாகின்றது.
வேதநாயகரின் பாடல்கள் சமுதாயக் கருத்துக்கள், பெண்கல்வி ஆகிய பல பொதுக் கருத்துக்களுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றன. பெண்மை காவலர்களின் வரிசையில் முதலிடம் பெறுபவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையும் ஒருவர். அவர் பெண்கள் சமுதாயத்தைப் பற்றி நன்கு சிந்தித்து, உயர்த்த விரும்பியவர்களான தந்தை பெரியார், தமிழ்த்தென்றல் திரு.வி.க, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர்களின் வரிசையில் முதன்மையானவர்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக முதன் முதலில் குரல் எழுப்பியவர் மாயூரம் நீதிபதி வேதநாயகம் பிள்ளை ஆவார். இவர் தாம் இயற்றிய பெரும்பாலான நூல்களில் பெண்களின் நலனுக்காகக் குரல் கொடுக்கிறார். மேலும் இரண்டு நாவல்களிலும் பெண்களை மையப்படுத்தியே எழுதியுள்ளார். இரு நாவல்களிலுமே கதைத் தலைவர்களைவிட, கதைத் தலைவியர்களைச் சிறந்தவர்களாகச் சித்திரித்த விதம் பெண்களிடத்தே வேதநாயகம் கொண்ட உயர்வையும் நம்பிக்கையையும் புலப்படுத்துகிறது.
இராகத்துடன் பாடக்கூடிய அமைப்பினைக் கொண்ட சர்வ சமயக் கீர்த்தனைகளில், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். பெண்கள் தங்களைப் படிக்க வைக்கும்படித் தந்தையை வேண்டுவதாக உள்ள பகுதி பெண்கல்வி குறித்த சிந்தனையைப் பெண்களிடத்தே தூண்டுகிறது.
வேதநாயகரின் கீர்த்தனைப் பாடல்கள் சமூகம், அரசியல், சமயம், பொருளாதாரம், மொழி தாக்கங்களை பின்புலமாக வைத்தே அமைந்துள்ளன என்பதனை பல்வேறு கீர்த்தனைகளின் வரிகள் தெளிவிக்கின்றன.
இவருடைய கீர்த்தனைகள் இசையோடும், தாளத்தோடும் பாடும் சிறப்பின. ஒவ்வொரு கீர்த்தனைக்கும் பாடப்பட வேண்டிய இராகமும் தாளமும் கொடுக்கப்பட்டுள்ளன. வேதநாயகரின் பாடல் அமைப்பையும், இசை முறைகளையும், தாளமுறைகளையும் நோக்கும்போது, மரபிசைப்படி தனக்கே உரிய பாணியில் பாடல்களை செம்மைப்படுத்தி இயற்றியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.
இவ்விதம் தமிழிசைக்குத் தொண்டாற்றிய வேதநாயகருக்கு சென்னை, மாயவரம் போன்ற ஊர்களில் மன்றங்கள் அமைத்து ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தி வருகின்றனர். வேதநாயகரின் பாடல்கள் இசைக் கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் இடம்பெற்று மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
மேலும் வேதநாயகரின் பாடல்களில் காணப்படும் நாட்டுப்புற அமைப்பு, நாட்டுப்புறக் கூறுகள் பற்றிய உயர் ஆய்வு மேற்கொள்ள உறுதுணையாக அமைவதையும் அறியமுடிகிறது. சமூகவியல் பெண்ணியம் போன்ற பல்துறை இணைவு ஆய்வுகளுக்குரிய களமாக அமைகிறது.
அனைத்து சமயத்தினரும் போற்றும் வகையில் அமைந்த சர்வ சமய சமரசக் கீர்த்தனையில் இடம்பெறும் அனைத்துப் பாடல் களையும் பாடி உலகெங்கும் பாடிப் பரவிடச் செய்யவேண்டியது வேதநாயகம் பிள்ளை போன்ற தமிழிசை வளர்த்தோருக்கும் தமிழிசைக்கலைக்கும் நாம் ஆற்றும் சீரிய பணியாகும்.

துணைநூற்பட்டியல்
1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை -சா்வ சமய சமரசக் கீர்த்தனைகள்,
திருமகள் விலாச அச்சகம்,
சென்னை – 1.

2. புலவர் என். வி. கலைமணி - மாயூரம் வேதநாயகம் பிள்ளை,
சிவகாசி புக் பப்ளிகேஷன்ஸ்,
160, பெரிய தெரு, திருவல்லிக்கேணி,
சென்னை – 5.

3. முனைவர்.சரளாகோபாலன் - வேதநாயகரும் பெண்மையும்,
ஒளிப் பதிப்பகம்,
63, ரங்காச்சாரி சாலை,
சென்னை – 18.

4. டாக்டர். கே.கே.பிள்ளை - தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை- 13.
5. முனைவர்.சு.இராசாராம் - வீரசோழிய இலக்கணக் கோட்பாடுகள்,
இந்திய மொழிகள் பள்ளி,
தமிழ் பல்கலைக் கழகம்.

6. நா.மம்மது - தமிழிசைப் பேரகராதி,
இன்னிசை அறக்கட்டளை,
மதுரை.
7. வீ.ப.க.சுந்தரம் - தமிழிசைக் கலைக்களஞ்சியம்,
பாரதிதாசன் பல்கலைக் கழகம்,
திருச்சிராப்பள்ளி.

எழுதியவர் : ஆ.ஷைலா ஹெலின் (17-Sep-15, 3:15 pm)
பார்வை : 2449

மேலே