ஒற்றை மீன்

போன வாரத்தில் ஒருநாள், ராத்திரி ஒன்பதரை மணி. வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். எங்களுடைய பேச்சுச் சத்தத்தைக் கண்டிப்பதுபோல் வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

என் மனைவி உட்கார்ந்தவாக்கில் நிமிர்ந்து பார்த்தார், அழைப்பு மணியோடு இணைந்த கறுப்பு வெள்ளைக் குட்டித் திரையில் மசங்கலாக ஏதோ ஓர் உருவம் தெரிந்தது.

அரை விநாடியில், வந்திருப்பது யார் என்று அவருக்குப் புரிந்துவிட்டது, ‘ஹையா, மீன் வருது’ என்றபடி துள்ளி எழுந்தார்.

எனக்கு ஆச்சர்யம். மீன் தண்ணீரில் வாழும் பிராணியாச்சே, அது எப்படி எங்கள் வீட்டு வாசலில் நிற்கமுடியும்? அப்படியே வந்து நின்றாலும், அழைப்பு மணியை அழுத்துவதற்கு மீனுக்குக் கை உண்டா? விரல் உண்டா?

என்னுடைய கிறுக்குத்தனமான கற்பனைகள் தறிகெட்டு ஓடுவதற்குள் என் மனைவி கதவைத் திறந்துவிட்டார். உள்ளே நுழைந்தது மீன் அல்ல, மேல் மாடியில் குடியிருக்கிற மிஸ். மனோகரி.

மன்னிக்கவும், அவர் ‘மிஸ்’ அல்ல, ஒரு மாதம் முன்புதான் அவருக்குத் திருமணமாகிவிட்டது, ‘மிஸஸ். மனோகரி’ என்று திருத்தி வாசிக்கவும்.

மிஸஸ் மனோகரி கையில் ஒரு கண்ணாடிப் பாத்திரம். அதற்குள் ஒரு குட்டித் தங்க மீன் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தது.

’வாங்க, வாங்க’ என்று மனோகரியை வரவேற்றபடி அவர் கையிலிருந்த தொட்டிக்குள் எட்டிப் பார்த்தார் என் மனைவி, ’ஒரு மீன்தானா?’

’ஆமா, இன்னொண்ணு இன்னிக்குதான் செத்துப்போச்சு’ என்றவர் முகத்தில் துளியும் வருத்தம் இல்லை, ‘இதை நான் எங்கே வைக்கட்டும்?’

தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே இருந்த வெற்றிடத்தைக் காண்பித்தார் என் மனைவி, ‘இங்கே வெச்சுடுங்க, நாங்க பார்த்துக்கறோம்’

எனக்கு இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எதற்காக மனோகரியின் மீன் எங்கள் வீட்டுக்கு இடம்பெயர்கிறது?

நல்லவேளையாக, மனோகரியே என்னுடைய குழப்பத்தைத் தெளிவித்துவிட்டார், ‘நாங்க ஒரு வாரம் ஊருக்குப் போறோம், அதுவரைக்கும் எங்க மீனைக் கொஞ்சம் பார்த்துக்கமுடியுமா?’

மீனைத் தொட்டியோடு கொண்டுவந்து நடு ஹாலில் வைத்துவிட்டு இப்படி அனுமதி கேட்டால் என்ன பதில் சொல்வது? எச்சில் கையோடு ராஜேந்திரகுமார் பாணியில் ‘ஙே’ என்று விழித்தேன்.

’ஏற்கெனவே உங்க வொய்ஃப்கிட்டே பேசிட்டேன், அவங்க ஓகேன்னு சொல்லிட்டாங்க, இருந்தாலும் உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாமேன்னுதான் …’ என்று இழுத்தார் அவர்.

அப்புறமென்ன அம்மணி? மேலிடத்திடம் அனுமதி வாங்கியாகிவிட்டது, இப்போது நான் தலையசைப்பதா முக்கியம்? தவிர, ஒற்றை மீன் பிரச்னைக்காக ஒரு ஜோடியின் ஹனி மூனைக் கெடுத்தவன் என்கிற பாவம் எனக்கு வேண்டாம். நீங்கள் சந்தோஷமாகப் போய்வாருங்கள்.

அன்று இரவே, மனோகரி தம்பதியர் புறப்பட்டுச் சென்றார்கள். அடுத்த ஒரு வாரம், அந்த மீன் எங்களுடைய பொறுப்பாகிவிட்டது.

இதுவரை, நாங்கள் வீட்டில் நாய், பூனை, கோழி, ஆடு, மாடு, மீன் எதுவும் வளர்த்தது கிடையாது. ஆகவே, திடுதிப்பென்று எங்கள் வீட்டுக்கு நடுவே ஒரு மீன் சுற்றிவருவது கொஞ்சம் விநோதமாக இருந்தது.

முதலாவதாக, அந்த மீனை எங்கள் இளைய மகள் பிடியிலிருந்து காப்பாற்றவேண்டும். அவள்மட்டும் அந்தத் தொட்டியை எட்டிப் பிடித்துவிட்டாள் என்றால், அவ்வளவுதான். கொஞ்சமும் தயங்காமல் உள்ளே கை விட்டு மீனைக் கையில் எடுத்துப் பிதுக்கிவிடுவாள், பாவம்!

நல்லவேளையாக, எங்களுடைய தொலைக்காட்சி மேஜை கொஞ்சம் பெரியது. அதன் இன்னொரு முனையில் சுவர் ஓரமாக மீனை நகர்த்தி வைத்துவிட்டால் போதும், எல்லோரும் மீனைப் பார்க்கலாம், அத்தனை சுலபத்தில் தொட்டுவிடமுடியாது, ஓரளவு பத்திரம்.

அடுத்தபடியாக, மீனுக்குச் சாப்பாடு போடும் பொறுப்பு.

மீன் என்ன தலை வாழை விரித்து விருந்துச் சாப்பாடா கேட்கப்போகிறது? கலர் கலராகக் கொஞ்சம் பெரிய சைஸ் கடுகு, அல்லது சின்ன சைஸ் மிளகுபோல் சில உருண்டைகள், அதில் தினத்துக்கு ஒன்றாகத் தண்ணீரில் போட்டால் மீனே தேடி வந்து சாப்பிட்டு ஏப்பம் விடுமாம்.

மனிதர்களுக்கும் இப்படி ஒரு மாத்திரை இருந்தால் நன்றாக இருக்கும் என்று என் மனைவி கருத்துத் தெரிவித்தார். தினமும் சமைக்கிற, பாத்திரம் கழுவுகிற தொல்லையே இருக்காதாம்.

நியாயம்தான். ஆனால், என்னதான் ஒற்றை மாத்திரையில் வயிறு நிரம்பினாலும், மனித நாக்குக்கு அது திருப்தியாக இருக்குமா? எனக்கென்னவோ சந்தேகமாகவே இருக்கிறது.

நல்லவேளை, மீனுக்கு அறுசுவை உணவெல்லாம் பழக்கமில்லைபோல, அந்தக் கடுகு சைஸ் உருண்டையைச் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாகச் சுற்றிவந்துகொண்டிருந்தது.

வழக்கமாக எங்கள் வீட்டுக்கு வரும் குட்டிக் குட்டி பொம்மைகளுக்குக்கூடப் பெயர் சூட்டிவிடுகிற நங்கை, இந்த மீனைமட்டும் ஏனோ பெயரிடாமலே கொஞ்சத் தொடங்கிவிட்டாள். காலை எழுந்தவுடன் மீனுக்குச் சாப்பாடு போடும் வேலையை அவளே ஏற்றுக்கொண்டுவிட்டதால் எங்களுக்கு ஒரு தலைவலி தீர்ந்தது.

சாப்பாடு போடும்போதுமட்டுமில்லை, கால் மணி நேரத்துக்கு ஒருமுறை மீன் குடுவை அருகே ஓடி வந்து அது என்ன செய்கிறது என்பதை வேடிக்கை பார்ப்பது அவளுடைய பிரியமான பொழுதுபோக்காக மாறிவிட்டது, ‘இத்தனை பெரிய மீனுக்கு இந்தக் கொஞ்சூண்டு சாப்பாடு போதுமா?’, ‘மீன் ஏன் அடிக்கடி வாயைத் திறந்து மூடுது?’, ‘ஏன் நேரா நீந்தாம சுத்திச் சுத்தி வருது?’, ‘இந்த மீன் ஏன் தங்கக் கலர்ல இருக்கு? யார் அதுக்குப் பெயின்ட் அடிச்சாங்க?’ என்றெல்லாம் மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள்.

எங்களுக்கும் அந்த மீன் ஒரு விநோதமான, உயிருள்ள விளையாட்டு பொம்மையாகத் தோன்றியது. முக்கியமாக, வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறபோது அந்த மீன் பெரியதாகவும் சின்னதாகவும் மாறி மாறித் தெரிவதை ஆச்சர்யத்துடன் ரசித்தேன்.

முதல் இரண்டு நாள் எந்தப் பிரச்னையும் இல்லை, மூன்றாவது நாள், மீனின் வேகம் லேசாகக் குறைவதுபோல் தோன்றியது. சும்மா மனப் பிரம்மை என்று நினைத்துச் சமாதானப்படுத்திக்கொண்டேன்.

நான்காவது நாள், கண்ணாடிக் குடுவையில் இருக்கும் நீர் ரொம்பக் கலங்கலாக மாறியிருந்தது. தண்ணீரை மாற்றவேண்டும்.

அதற்காகவே, ஒரு குட்டி வலை கொடுத்திருந்தார்கள். ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி, மீனை வலையில் பிடித்து அதற்குள் போட்டோம். பிறகு கண்ணாடிப் பாத்திரத்தைக் கழுவிச் சுத்தமான தண்ணீர் நிரப்பினோம்.

நாங்கள் இந்த வேலையில் ‘பிஸி’யாக இருந்தபோது, எங்களுடைய இளைய மகள் அந்த பக்கெட்டைக் கவனித்துவிட்டாள், நேராக ஓடி வந்து தண்ணீருக்குள் கை விட்டு மீனைப் பிடிக்க முயன்றாள்.

நல்ல வேளை, கடைசி நிமிடத்தில் நான் சுதாரித்துக்கொண்டு அவளைத் தூக்கிவிட்டேன். இல்லாவிட்டால் அந்தத் தங்க மீனின் கதி அவ்வளவுதான்.

ஒருவழியாக, பாத்திரம், தண்ணீர் சுத்தமாகிவிட்டது, மீன் மீண்டும் பழைய குடுவைக்குள் சென்று சுற்றிவர ஆரம்பித்தது.

திடீரென்று என் மனைவிக்கு ஒரு சந்தேகம், ‘இந்தத் தண்ணியில உப்புப் போடணுமா?’

‘உப்பா? அது எதுக்கு?’

‘கடல்ல மீனெல்லாம் உப்புத் தண்ணியிலதானே உயிர் வாழும்?’

’யம்மாடி, இதெல்லாம் வீட்ல வளர்க்கறதுக்காகவே உருவாக்கப்பட்ட Factory மீன், இதெல்லாம் எப்பவும் கடலைப் பார்த்திருக்காது, இதுக்கு உப்புத் தண்ணியெல்லாம் தேவையில்லை’

இப்படிப் பெரிய மேதைமாதிரி பதில் சொல்லிவிட்டேனேதவிர, எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. அப்புறமாக இணையத்தில் தேடிப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

பளபளா பாத்திரத்தில் மீன் உற்சாகமாகச் சுற்றிவந்தது. டிவியில் ஏதாவது குத்துப் பாட்டு போட்டால் ஸ்பீக்கர் அதிர்வை உணர்ந்து முன்பைவிட அதிவேகமாகச் சுற்றியது, நங்கை பழையபடி நாள்முழுக்க அதையே வேடிக்கை பார்த்துக்கொண்டும் செல்லம் கொஞ்சிக்கொண்டும் நேரத்தைச் செலவிட்டாள்.

ஆனால், தண்ணீர் மாற்றியபிறகு, மீனின் நீச்சல் வேகம் இன்னும் குறைந்துவிட்டதுபோல் தோன்றியது. பல சந்தர்ப்பங்களில் நீந்தாமல் சும்மா அப்படியே still ஆக நின்றுகொண்டு பயமுறுத்தியது.

அப்போதெல்லாம், மீன் உண்மையாகவே உயிரோடு இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக பாத்திரத்தின் ஓரத்தில் தட்ட ஆரம்பித்தோம். எங்கள் சத்தம் கேட்டதும் அது விழித்துக்கொண்டு லேசாக துடுப்பை அசைக்கும், எங்களுக்கு நிம்மதி.

‘ஏன் இப்படி சோர்ந்துபோய்க் கிடக்கு?’

‘தெரியலையே, நம்ம வீட்டுக்கு வந்த நேரம், நம்மோட சோம்பேறிக்குணம் அதுக்கும் தொத்திகிச்சோ?’

வெளியே கிண்டலடித்தாலும், உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகதான் இருந்தது. அவர்கள் நம்பிக் கொடுத்த மீனை நாம் சரியாகப் பராமரிக்கவில்லையோ என்கிற பதற்றம்.

ஆனால், நாங்கள் என்ன செய்திருக்கமுடியும்? தினமும் ஓர் உருண்டை சாப்பாடு போடச் சொன்னார்கள், போட்டோம். தண்ணீர் கலங்கினால் மாற்றச் சொன்னார்கள், மாற்றினோம், அதற்குமேல் அதற்கு என்ன பிரச்னை என்று diagnose / debug செய்ய எங்களுக்குத் தெரியவில்லையே.

மீனுக்கெல்லாம் வியாதி வருமா? அதைப் பரிசோதித்து மருந்து கொடுக்கக் கால்நடை(?) மருத்துவர்கள் இருப்பார்களா? சாப்பாடே கடுகு சைஸ் என்றால், அந்த மருந்து என்ன சைஸ் இருக்கும்?

சென்ற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அந்த அழகிய தங்க மீன் துவண்டுபோய்க்கொண்டிருந்தது. நாங்கள் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தோம்.

திங்கள்கிழமை நங்கை போட்ட சாப்பாட்டைக்கூட அது ஏற்றுக்கொள்ளவில்லை, கடுகு உருண்டை அப்படியே தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது, உள்ளே மீனும் அதற்கு இணையாக உயிரற்றதுபோல் கிடந்தது, எப்போதாவது துடுப்புகள் லேசாக அசைந்தன, மற்றபடி நீச்சலெல்லாம் அதிகம் இல்லை.

’பாவம்ப்பா, மீனுக்கு என்னவோ ஆயிடுச்சு’ என்று புலம்பத் தொடங்கினாள் நங்கை. ‘நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா, எல்லாம் சரியாயிடும்’ என்று அவளுக்குப் பொய் ஆறுதல் சொன்னபடி நாங்கள் மனோகரி குடும்பத்தார் திரும்பி வரும் நாளை எதிர்நோக்க ஆரம்பித்தோம்.

அவர்கள் கிளம்பியபோது, ‘எப்போது திரும்பி வருவீர்கள்’ என்று கேட்டுக்கொள்ளத் தோன்றவில்லை. தவிர, ஹனி மூன் கிளம்புகிறவர்களிடம் அப்படிக் கேட்பதும் நாகரிகமாக இருக்காது.

ஆனால் இப்போது, அவர்கள் இன்றைக்கே திரும்பி வந்துவிட்டால் பரவாயில்லை என்று நாங்கள் தவிக்க ஆரம்பித்தோம். எப்படியாவது மீனை அவர்களிடம் உயிரோடு ஒப்படைத்துவிடவேண்டும். அதன்பிறகு, அது அவர்களுடைய பிரச்னையாகிவிடும், எப்படியோ வைத்தியம் பார்த்துக் காப்பாற்றிக்கொள்ளட்டும்.

அதுமட்டுமில்லை. ஒருவேளை இந்த மீன் உயிரை விட்டுவிட்டால், இத்தனை நாள் நாங்கள் அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டோம் என்பதற்கு என்ன அத்தாட்சி? நாங்கள் அலட்சியமாக இருந்து அதைக் கொன்றுவிட்டோம் என்றுதானே மனோகரி நினைப்பார்? எங்கள்மேல் எந்தத் தவறும் இல்லை, we tried our best என்பதை அவருக்கு எப்படி நிரூபிப்பது?

நேற்று மாலை, அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கழுத்துப் பட்டையைக் கழற்றும்போதே, டிவி அருகில் என்னவோ உறுத்துவதுபோல் உணர்ந்தேன். நெருங்கிப் பார்த்தபோது, அந்த ஒற்றை மீன் செத்துப்போய் மிதந்துகொண்டிருந்தது.

இந்த ஒரு வாரம், பத்து நாளில் அந்த மீனுடன் எங்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டுவிட்டதாகவெல்லாம் ஜல்லியடிக்கமாட்டேன். ஆனால், நம் கண்ணெதிரே ஓடி விளையாடிக்கொண்டிருந்த ஓர் உயிர் இப்படி மரக்கட்டைபோல் செத்து மிதக்கும்போது, மிகவும் மன வருத்தமாக இருந்தது.

இன்று காலை, மனோகரி திரும்பி வந்திருக்கிறார். மாலை மீனை வாங்க வருகிறவர் கையில் வெறும் தொட்டியை எப்படிக் கொடுப்பது? வேறொரு தங்க மீனை விலைக்கு வாங்கிப் போட்டுக் கொடுத்துவிடலாமா? அவர் அடையாளம் கண்டுபிடித்துவிடுவாரா? உண்மை தெரிந்து எங்களைக் கோபிப்பாரா? கோர்ட்டுக்குப் போவாரா? பெங்களூரில் எது நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

வழக்கம்போல், இந்தப் பிரச்னையை என் மனைவி தலையில் சுமத்திவிட்டு, நான் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டேன். மாலை நான் வீடு திரும்புவதற்குள் மீன் தொட்டி காணாமல் போயிருந்தால் நிம்மதி!

ஆனால் ஒன்று, எங்கள் அடுக்ககத்தில் இன்னொரு ஹனி மூன் தம்பதியின் மீனுக்கோ, மானுக்கோ தாற்காலிகப் புகலிடம் ஒன்று தேவைப்பட்டால், நிச்சயமாக எங்கள் வீட்டுக் கதவைத் தட்டமாட்டார்கள். அதற்காக சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்றுதான் தெரியவில்லை.

***

என். சொக்கன் …

03 06 2009

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (17-Sep-15, 10:54 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : otrai meen
பார்வை : 159

மேலே