டாஸ்மாக்கை மூடினால் நிதியில்லாமல் தமிழகம் தள்ளாடுமா

என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில்..?

டாஸ்மாக்கை மூடினால் நிதியில்லாமல் தமிழகம் தள்ளாடுமா?

நிதிப்பற்றாக்குறையைப் போக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பற்றாக்குறையை எப்படி சமாளிக்கலாம்?

திரும்பிய பக்கம் எல்லாம் வளங்கள்!

இயற்கை வளம் மற்ற மாநிலங்களில் பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கிறது. தமிழகத்திலோ அது பூமிக்கு மேலேயே கிரானைட் பாறையாகவும் கனிம மணலாகவும் ஆற்று மணலாகவும் குவிந்து கிடக்கிறது.

ஆனால், இந்த வளங்கள் மூலம் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் தனியார் வாய்களுக்கு போய்க்கொண்டிருக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பாக இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன.

மதுரையில் மூன்று ஊர்களில் மட்டும் கிரானைட் கொள்ளைபோன தொகை ரூ.16,338 எனச் சொல்கிறார் சகாயம். அவருடைய விசாரணை இப்போது தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தாது மணல் கொள்ளை தொடர்பாக ககன்தீப் சிங் பேடியின் விசாரணை அறிக்கை 2013 செப்டம்பர் 17ம் தேதி ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்டும் ஏன் வெளிவரவில்லை என்பது மர்மமாக இருக்கிறது.

தாதுமணல் :-

கார்னெட், இல்லுமனைட் ஆகியவை ஒரு டன் ரூ.5,000. சிர்கான் ஒரு டன் ரூ.42,000. ரூடைல் ஒரு டன் ரூ.43,000. இது அரசுக்குச் செல்லும் வருமானம்தான்.

சராசரியாக ஒரு டன் தாதுமணல் விலை ரூ.10,000 மட்டுமே. ஆனால், உண்மையில் சந்தை விலை, சராசரியாக ஒரு டன்னுக்கு ஒரு லட்சம் ரூபாய். கடற்கரையில் எடுக்கப்படும் தாதுமணலில் விற்கும் விலையில் 3 சதவிகிதம் மட்டுமே அரசுக்குக் கிடைக்கிறது.

தாது மணல் குவாரியின் மூலம் தினமும் சுமார் 2,500 லாரி லோடுகள் மூலம் சுமார் 10,000 டன் தாது மணல் எடுக்கப்படுகிறது. சந்தை விலையை ஒரு டன்னுக்கு மிகக் குறைவாக 50,000 விலை நிர்ணயித்தால்கூட கூடுதலாக ஒரு டன்னுக்கு 40,000 கிடைக்கிறது.

தினமும் குறைந்தபட்சம் 40 கோடி ரூபாய் வீதம் ஆண்டுதோறும் 14,560 கோடி ரூபாய் திரட்ட முடியும். தாதுமணல் பிசினஸ் தனியாருக்குத்தான் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.

அந்த நிறுவனங்கள் 30,000 கோடிக்கு மேல் ஆண்டுதோறும் வருவாய் கிடைப்பதாக மதிப்பிட்டிருக்கின்றன. இவ்வளவு கரன்ஸிகள் புரளும் தொழிலை அரசே செய்தால் தாதுமணல் கொள்ளை போவதை தடுப்பதோடு, அரசுக்கு வருவாயும் கிடைக்கும். வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும்.

மணல் குவாரிகள் :-

ஒரு லாரி லோடு மணலின் அரசு விலை (3 யூனிட்டுக்கு) 945 ரூபாய். லோடிங் அன்லோடிங் ஒரு லாரிக்கு 1,000 ரூபாய். 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரி வாடகை அதிகபட்சம் 5,000. மொத்தம் 7,000 ரூபாய். அதிகபட்சமாக வைத்துக்கொண்டால் ஒரு லாரி லோடு மணலின் விலை 8,000 மட்டுமே.

ஆனால், 15,000 வரை விற்கப்படுகிறது. சில மாவட்டங்களில் அதையும் தாண்டுகிறது. மணல் விற்பனையை அரசே தொடங்கிய 2003 அக்டோபர் முதல் 2010 மார்ச் வரையில் அரசுக்குக் கிடைத்த மொத்த மணல் விற்பனை வருவாய் எவ்வளவு தெரியுமா? வெறும் 840.37 கோடிதான். 2009

2010ம் ஆண்டில் 42.49 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. மணல் குவாரிகளை அரசு ஏற்றதில் தொடங்கி, இன்று வரையிலான 11 ஆண்டுகளில் மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகம். இதை மட்டும் அரசு தடுத்திருந்தால் தமிழக அரசின் 2 லட்சம் கோடி கடனை அடைத்திருக்க முடியும்.

மணல் கொள்ளையில் மட்டும் தமிழகத்தில் சுமார் 33,000 கோடி ரூபாய் ஆண்டுதோறும் அரசு அதிகாரிகள், மணல் மாஃபியாக்களுக்குக் கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது. ஒரு லோடுக்கு சராசரியாக 10,000 வரையில் கூடுதலாகக் கிடைக்கிறது.

அதைவிட குறைவாகவே கணக்கிட்டாலே லாபம் சம்பாதிக்க முடியும். தினமும் எடுக்கப்படும் 90,000 லாரி லோடுகளுக்கு கணக்குப் பார்த்தால், ஒரு லாரி லோடுக்கு சுமார் 4,000 கூடுதலாகக் கிடைக்கிறது. இப்படி தினமும் 36 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ.13,100 கோடி அரசுக்குக் கிடைக்கும்.

நீர்நிலைகள் :-

50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் அணைகள், நீர்நிலைகள் போன்றவை அரசால் தூர்வாரப்படாமல் இருக்கின்றன. 39,202 ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், 5,000 கோயில் குளங்கள், 33 ஆறுகளில் 100க்கும் அதிகமான அணைகளும் தடுப்பணைகளும் இருக்கின்றன.

இதைச் சரிப்படுத்தினால் மணல், வண்டல் மண் போன்றவை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 10,000 கோடி வரையில் கரன்ஸி கிடைப்பதோடு தண்ணீர் சேமிப்பையும் இரண்டு மடங்கு அதிகரிக்கலாம்.

கிரானைட் :-

கிரானைட் குவாரியின் மூலம் தினமும் 500 குவாரிகளில் 4 கற்கள் மூலம் சுமார் 2,000 கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. ஒரு கிரானைட் கல் சுமார் 5 கனமீட்டர் முதல் 12 கனமீட்டர் வரை இருக்கும். கிரானைட் கற்களின் வகை மூலம் ஒரு கிரானைட் கல் ஒரு கனமீட்டர் சராசரியாக 2,500 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுகிறது.

உண்மையில் இதன் சர்வதேச மார்க்கெட் விலை 50,000. தமிழகத்தில் தினமும் எடுக்கப்படும் 10,000 கனமீட்டர் கிரானைட் கல் மூலம் ஒரு கனமீட்டர் 33,000 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும்கூட ஒரு கனமீட்டர் 30,000 ரூபாய் கூடுதலாக விற்கப்படும். இதன்மூலம் தினமும் 30 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு 10,950 கோடி ரூபாய் கிடைக்கும்.

கிராவல் மண் :-

தினமும் 2 லட்சம் லாரி லோடுகள் மூலம் கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு லோடு கிராவல் மண்ணுக்கு அரசுக்குச் செலுத்தப்படும் தொகை வெறும் 90 ரூபாய்தான். பல வகைகளில் முறைகேடாக எடுக்கப்படும் கிராவல் மண் ஒரு லோடு 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டால் ஒரு நாளைக்குக் கூடுதலாக 110 வீதம் ரூ.2.20 கோடி கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.800 கோடி வரை கிடைக்கும்.

இலவசத் திட்டங்கள்:-

1,47,297 கோடி ரூபாய் அளவுக்கு 2015 - 2016ம் ஆண்டு தமிழக பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது. இதில் இலவசங்கள், மானியங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை மட்டும் 40 சதவிகிதம். இலவசங்களை விநியோகிக்கவும் அதைப் பராமரிக்கவும் ஆகும் செலவுகள் ஏழு சதவிகிதம்.

மொத்த பட்ஜெட்டில் 12 சதவிகிதம் வங்கிக் கடனுக்கு வட்டியாகக் கட்டப்படுகிறது. இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கும் 2015 - 2016ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை 59,185 கோடி. இது மொத்த பட்ஜெட்டில் 40 சதவிகிதம்.

பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப்,கல்வி உபகரணங்கள் வழங்குதல், முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் போன்றவை தொடருவதில் பிரச்னை இல்லை.

மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், ஆடு மாடு, போன்ற திட்டங்களைத் தவிர்த்தாலே பெருமளவில் பணம் மிச்சமாகும்.

2011 முதல் 2016 வரையான காலகட்டத்தில் இந்தத் திட்டங்களுக்கு மட்டும் செலவழிக்கப்பட்ட தொகை 18,749 கோடி ரூபாய்.

சராசரியாக ஒரு வருடத்துக்கு 3,750 கோடி ரூபாய் இதற்காக செலவு பிடிக்கிறது. இந்தத் திட்டங்களை முறைப்படுத்த வேண்டும்.

உணவு மானியம்

ரேஷன் பொருட்கள் வழங்குவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உணவு மானியமாக சுமார் 5,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

போலி ரேஷன் கார்டுகளை ஒழித்து உணவுப் பொருட்கள் மற்றும் இலவச ரேஷன் அரிசி கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தினால் மானியத்தை 1,000 கோடி வரையில் குறைக்கலாம்.

கடனுக்கு வட்டி

தமிழக அரசின் 2015 - 16ம் ஆண்டின் நேரடிக் கடன் சுமை 2.06 லட்சம் கோடி. பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தனியாக 2 லட்சம் கோடி கடன் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடன்சுமை ரூ. 4,07,748 கோடியாக அதிகரித்திருக்கிறது. நேரடிக் கடனுக்காக மட்டும் நடப்பாண்டில் 17,945 கோடி வட்டி செலுத்த வேண்டியிருக்கிறது. பொதுத்துறை நிறுவன கடனுக்காக ஆண்டுக்கு 17,446 கோடி வட்டி செலுத்த வேண்டியிருக்கிறது.

தமிழக அரசின் வருவாயில் 12.28 சதவிகிதம் வட்டிக்கே போய்விடுகிறது.

பன்னாட்டு நிதி நிறுவனங்கள், உலக வங்கியிலிருந்து கடன் வாங்குவதை குறைத்துவிட்டு எல்.ஐ.சி., நபார்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் வாங்கினால் வட்டி கணிசமாகக் குறையலாம்.

ஏற்கெனவே வாங்கிய கடனில் முழுமையாக மாற்றம் செய்ய முடியாது. ஆகவே, இனிவரும் காலங்களிலாவது இதை தவிர்க்கலாம். 2015 - 2016ல் 30,446 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.

இதனை அமல்படுத்தினால் ஆண்டுக்கு பலநூறு கோடிகள் மிச்சமாகும். தோராய மதிப்பீட்டின் அடிப்படையில் 2015 - 2016ம் ஆண்டு கட்டப்படவுள்ள ரூ.17,856 கோடியில் ஐந்து சதவிகிதம் குறைந்தால்கூட அதிலிருந்து ஆண்டுக்கு ரூ.893 கோடி மிச்சமாகும்.

எழுதியவர் : செல்வமணி ( முகநூல் : தமிழ் ச (20-Sep-15, 9:21 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 207

மேலே