டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்லும் அரசாங்கம் கொள்கை மற்றும் தொழில்நுட்ப அளவில் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் பின் தங்கியே இருக்கிறது

அரசாங்கம் என்க்ரிப்ஷன் தொடர்பான புதிய கொள்கையை வகுக்க முனைகிறது.

அதன் வரைவு மாதிரியை மக்கள் பார்வைக்கு வெளியிட்ட போது அரசுக்கு அறிவுரை சொல்ல அங்கே தொழில்நுட்ப நிபுணர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதன்படி என்க்ரிப்ஷன் தொடர்பான அல்காரிதம் உள்ளிட்ட பல விஷயங்களை அரசே முடிவு செய்யும். அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை அவர்களே அவ்வப்போது வெளியிடுவார்களாம்.

அதாவது உங்கள் வீட்டின் பூட்டு எந்த மாடல் என்று அரசு முடிவு செய்யும். அதற்கு யாராவது கள்ளச்சாவி கண்டுபிடித்து விட்டாலும் புதிய பூட்டு மாடலை அரசாங்கம் கண்டு பிடிக்கும் வரை அதே பூட்டைத்தான் நீங்கள் உபயோகிக்க வேண்டும்.

அதைத் தாண்டி ஒரு முக்கியமான விஷயம்.

நீங்கள் அனுப்பிய உங்கள் தனிப்பட்ட ஈமெயில்கள் சாட் செய்திகள் என்று அனைத்தையும் 90 நாட்களுக்கு நீங்கள் பாதுகாத்து வைக்க வேண்டும். அரசாங்கம் கேட்டால் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் கைது செய்ய அரசாங்கத்துக்கு அதிகாரம் இருக்கிறது.

யப்பா கொள்கை வகுக்கும் கோமான்களா...

முதலில் என்க்ரிப்ஷன் குறித்து எத்தனை இணைய பயனாளிகளுக்குத் தெரியும் என்று புள்ளி விவரம் இருக்கிறதா?

ஒருவர் ஜிமெயில் கணக்கில் சேமிக்கும் அத்தனையும் என்க்ரிப்ட் ஆகித்தான் இருக்கும். உன்னுடைய பாஸ்வேர்டைக் கொடு என்று கேட்பதைத்தான் இப்படி சுற்றி வளைத்துக் கேட்கிறீர்களா?

அரசாங்கத்திடம் தனிப்பட்ட தகவல்களை உவந்து வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கான நம்பிக்கை மக்களுக்கு வரும் அளவு அரசுகள் இதுவரை நடந்துகொள்ளவில்லை.

டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்லும் அரசாங்கம் கொள்கை மற்றும் தொழில்நுட்ப அளவில் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் பின் தங்கியே இருக்கிறது.

பாதுகாப்பு என்ற பெயரில் கொத்துச்சாவியைக் கேட்பவர்களின் யோக்கியதைதான் எங்களுக்கு இங்கே பிரச்னை.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது முக (22-Sep-15, 11:46 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 204

மேலே