பிரிவும் கனமும்

நின்னை தொலைவிருத்தி நெஞ்சம் வலியெழுப்ப
நின்றேன் நிமிடம் நகராதோ
பொன்னை மணந்து ஒருபோதும்கலக்கமின்றிப்
போகும் வாழ்வு திரும்பாதோ
இன்னல் பலகொடுத்தேன் என்னை கரம்பிடித்தாய்
உந்தன் மகிழ்வு பெரிதாக
என்ன வழி புரிவேன் இந்தோர் உலகமதில்
ஏக்கம் என முடிவும் தகுமோ


செந்தேன் நிலவெழுந்து செல்லும் வானமதில்
சென்றே உனையடைவதென்றோ
தந்தேன் என அருகில் தழுவும் நிலையடைய
தாகமெடுப்ப தெந்தன் தவறோ
பொன்தேர் தனிலிருந்து போகும் வழியில் எழில்,
பொய்கை மலர் நிறைந்த சுனையில்
வந்தே யிருந்து மலர் வாசம்தனை நுகர்ந்து
வாழ்வைக் கழிக்க வருவாயோ

மந்தம் எழும் மனதில் மாயக் கனவுகளில்
மாற்றம் இனியும் வருமாமோ
சொந்தம் என உனையும் தொட்டே மகிழ்வுகொள்ள
நொல்லும் நாளுமென்றுதானோ
சந்தமிசைக்க கவி சோல்லும் மனதில் உந்தன்
சிந்தை மலர்ந்து விடுமாமோ
நந்திஎன விதியும் நடுவில் பிரித்த விதி
நல்லோர் முடிவைத் தருமாமோ

வந்தே என் அருகில் வாடும் மனதில் சுகம்
தந்தேன்என்றே மலருவாயோ
விந்தை எனதுவிரல் வீழும் கண்ணீர்துடைத்து
விம்மல்தனை நிறுத்துமாமோ
பந்தே என எறியும் பல்நேர் விளைமொழியும்
பதைக்கும் நிலை தருவதுண்டோ
நொந்தேன் மனம்வலித்து நெஞ்சம் அழுகைவிட்டு
நிகழும் வாழ்வும் திரும்பாதோ

எழுதியவர் : கிரிகாசன் (23-Sep-15, 10:12 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 92

மேலே