காதலாவது கத்தரிக்காயாவது

பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் பெண் குழந்தையைப் பெற்ற பெரும்பாலானவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் வாழ்க்கை நடத்தும் நிலை விரைவில் வந்துவிடும்.ஏன் , இப்பொழுதே அந்த நிலைதான் என்று கூட சொல்லலாம்.

“லிவிங் டுகெதர்” எல்லாம் சர்வ சாதாரணம்.கணவன் மனைவியைப் போல் வெளியில் செல்வார்கள் , கேட்டால் அவர்கள் “லிவிங் டுகெதர்” என்ற தகவல் கிடைக்கும்.வாடகைக்கு வீடு கொடுப்பவர்களுடம் கூட இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பது சிறப்புச் செய்தி .

ஐ .டி. துறையால் ஏற்பட்ட நாகரீக வளர்ச்சி உச்சக்கட்டத்தைத் தொட்டு இன்றைக்கு ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் ஒரே வீட்டில் வாழலாம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.ஏன் ஐ.டி. துறையை குறை சொல்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு இதை எழுதிக்கொண்டிருப்பவனும் அதே துறையைச் சார்ந்தவன்தான் என்பதே என் பதில்.

நான் பார்த்த வரையில் இந்த மாதிரியான கலாச்சார சீரழிவுகள் பெரும்பாலும் இந்தத் துறையைச் சார்ந்தவர்களாலேயே நடத்தப்படுகிறது.பக்கத்து அடுக்கு மாடிக்குடியிருப்பில்”லிவிங் டுகெதர்” தம்பதிகளால்(?) பயன்படுத்தி வீசி எறியப்பட்ட கருத்தடை சாதனம் எங்கள் வீட்டில் விழுந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை.அதையும் எடுத்து எங்கள் வீட்டு குப்பைத்தொட்டியில் போட்டு பிறகு குப்பை லாரியில் ஏற்றி விட்ட என்னை இந்தச் சமூகம் இளிச்சவாயன் என்று கூட சொல்லலாம்.

அதே துறையைச் சார்ந்தவன் என்பதற்காக அவர்களுக்காக வக்காலத்து வாங்க வேண்டும் என்று எனக்குத் தோணவில்லை.இதைத்தான் இந்தக் கூட்டம் நாகரீக வளர்ச்சி என்று கொண்டாடுகிறது.

சரி , இவர்களாவது காயாக இருந்து பழுத்த பிறகு பழமாகி இருக்கிறார்கள்.இங்கே பள்ளிக்கூடம் செல்லும் வயதிலேயே பிஞ்சில் பழுத்த கூட்டம் நிறைய இருக்கிறது.ஒன்பதாவது படிக்கும் வயதில் அப்படி என்ன காதலைப் பற்றிய புரிதல் இருந்து விடப்போகிறது இந்தப் பிஞ்சுகளுக்கு என்று தெரியவில்லை.அந்த வயதில் அதை காதல் என்று சொல்ல முடியுமா என்ன ? சினிமாவில் வரும் ஹீரோவைப் போல் தான் சந்திக்கும் ஆணையும் மனதில் கற்பனை செய்து கொண்டு “அவந்தான்டி என் லவ்வர்”என்று சாதாரணமாக தோழிகளிடம் சொல்லிக்கொள்ளும் நிலை இன்றைக்கு நகரத்தில் பள்ளி செல்லும் நிறையப் பெண்களிடம் காணமுடிகிறது.

நான் அஞ்சலியை ரமேஷுடன் முதன் முதலில் பார்த்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு.எங்கள் வீட்டருகில் இருக்கும் ஒரு குறுக்குச் சந்தில் இருவரும் இரவு எட்டு மணிக்கு பேசிக்கொண்டிருந்தார்கள்.அஞ்சலி அப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். பெங்களூரில் பத்து வருடத்திற்கும் மேல் வசிக்கும் எனக்கு அவர்கள் இருவரையும் பார்த்தபொழுது ஆச்சரியம் எதுவும் எழவில்லை. அவள் வசித்ததும் , தற்பொழுது வசிப்பதும் நாங்கள் குடியிருக்கும் தெருவின் பக்கத்து தெருவில்தான்.அவளுடைய அப்பாவை எனக்கு நன்கு தெரியும் என்பதால் அஞ்சலியையும் தெரிந்திருந்தது.அவளுடைய அப்பா நல்ல பண்பான மனிதர்.நல்ல கலாச்சாரமான நடுத்தர வகுப்பைச் சார்ந்த குடும்பம் அவர்களுடையது.

ரமேஷ் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று கேட்பவர்களுக்கு என்னிடம் சரியான பதில் இல்லை.கல்லூரி வரை சென்று படித்திருக்கின்றானா என்பது சந்தேகம்.அவன் வசிப்பதும் பக்கத்து தெருவில்தான்.விசாரித்ததில் அவன் எங்கே , என்ன வேலை செய்கிறான் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.ஆக , சொல்லிக்கொள்ளும் அளவிற்கெல்லாம் இல்லை அவனுடைய உத்தியோகம்.இந்த நிலையில்தான் அஞ்சலிக்கு ரமேஷின் மேல் காதல் வந்துவிட்டது.அதுவும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வயதில்.

தற்பொழுது +1 படித்துக்கொண்டிருக்கிறாள் அஞ்சலி(PUC முதலாம் ஆண்டு). இரண்டு ஆண்டுகளாக பெற்றோர்களுக்குத் தெரியாமல் நடந்த அஞ்சலியின் காதல் கதை சமீபத்தில்தெரிந்துவிட்டது.அவளுடைய அப்பா அதிர்ச்சியாகி விட்டார் என்று நான் இங்கே குறிப்பிடத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன்.

கிட்டத்தட்ட “காதல்” படம் மாதிரியான கதைதான் என்றாலும் அஞ்சலியின் அப்பா காதலுக்கு எதிரானவர் இல்லை என்பதை நான் தெரிந்துகொண்டேன்.ஆனால் , பள்ளிக்கூடம் படிக்கும் வயதில் வந்த காதலும், சொல்லிக்கொள்ளும்படியான உத்தியோகம் ரமேஷிற்கு இல்லாததும் அஞ்சலியின் அப்பாவிற்கு கோபத்தை அதிகப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.படித்து முடித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கும் ஒருவனை கை காட்டி இருந்தால் சம்மதம் தெரிவிக்கும் தகப்பனாகத்தான் எனக்குத் தெரிந்தார் அஞ்சலியின் அப்பா.அதுவும் கூட இவள் படித்து முடித்த பிறகுதான்.

தன் மகளை கெஞ்சிப் பார்த்தார் பலனில்லை , புரிய வைக்க முயற்சித்தார் முடியவில்லை , திட்டிப் பார்த்தார் அவள் காதில் வாங்கவில்லை என்று நிறைய முயற்சிகள் செய்து அனைத்திலும் தோல்வியைக் கண்டார் அஞ்சலியைப் பெற்றவர்.

மனிதர் முற்பிறவியில் ஏதேனும் பெரிய பாவம் செய்திருக்கக்கூடும்.இதற்கிடையில் காதலர்கள் இருவரும் தற்கொலை முயற்சி வேறு செய்திருக்கிறார்கள்.எப்படியாவது அவளைத் திருத்தி விடலாம் என்ற எண்ணத்தில் தற்பொழுது மகளை தன் தங்கை வீட்டில் தங்கவைத்துள்ளார்.காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில்தான் இருக்கிறது பெரு நகர வாழ்க்கையும் பல பெற்றோர்களின் நிலையும்.ஏன் கிராமத்தில் எல்லாம் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதில்லையா என்றுகூடநீங்கள் கேட்கலாம்.அங்கேயும் நடக்கிறது , இருந்தாலும் சதவீகிதம் மிக குறைவுதான்.பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண்களும் , ஆண்களும் கிராமத்தில் இன்னும் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அஞ்சலியின் சீரழிவிற்கு முக்கிய காரணம் நகர வாழ்க்கையின் பின்னணியும் , வளர்ந்து வரும் கேடுகெட்ட நாகரீக வளர்ச்சியின் தாக்கமும்தான் என்று எளிதில்சொல்லிவிடலாம் என்றாலும் பெற்றோர்கள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு தங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது என்ற வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது.

இதற்கு தீர்வு என்று சொன்னால் , குழந்தைகளுக்கு சிறுவயது முதல் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு அழைத்துச்செல்வதில் இருந்து வீட்டில் தாத்தா பாட்டியிடம் இருந்து கற்றுக்கொள்வது வரை நிறையச் சொல்லலாம்.ஆனால் , இன்றைக்கு நகர வாழ்க்கையில் தாத்தா , பாட்டியுடன் எத்துனை குழந்தைகள் வாழ்கிறார்கள் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.மொத்தத்தில் குழந்தை வளர்ப்பில் முன்பை விட இப்பொழுது பெற்றோர்கள் கற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாகவே தெரிகிறது.

ஆற்றல்மிக்க இளைஞர்களைக் கொண்ட , கலாச்சாரத்தை பாதுகாக்கும் நல்லதொரு சமூகம் அமைய வேண்டும் என்ற குறைந்த பட்ச ஆசையை மட்டும் நமக்கு சொந்தமாக்கிக் கொள்வோம்.அது மட்டுமே நம்மால் முடிந்த ஒன்று. மீண்டும் சந்திப்போம்.

———— கதிர்

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ஈரோடு க (25-Sep-15, 10:13 am)
பார்வை : 149

மேலே