கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி.. கலாச்சாரம், பண்பாடு, விருந்தோம்பல், பிறருக்குக் கற்றுக் கொடுத்தல் என எல்லா வகையிலும் முன்னேறியிருந்த சமுதாயம் தமிழ்ச்சமுதாயம். சிற்பம், கட்டிடம், கலை, இசை 'யூ நேம் இட்' அதை நாம் கொண்டிருந்தோம்.

வெறும் பழம்பெருமை மட்டுமே பேசிப் பேசி நம் முன்னேற்றத்தை நாமே கெடுத்துக் கொள்கிறோமோ என்கிற ஐயங்கள் பல சமயங்களில் என்னை ஆட்கொண்டதுண்டு.

எந்தச் சமுதாயத்தில் வரிசையில் நிற்க மனிதன் கூச்சப் படுவதில்லையோ, அதுவே முன்னேறிய சமுதாயத்திற்கான சோதனையில் அடுத்த கட்ட வடிகட்டலுக்கு உட்படுத்தப்படும். இவ்வாறான அளவுகோளின் படி நாம் எங்கிருக்கிறோம் எனச் சிந்தித்துப் பார்த்தால் கீழ்த்தரமாக உள்ளது.
சுய மதிப்பீடுகளின் வாயிலாக இதே மாதிரியான பலதரப்பட்ட அம்சங்களை சுட்டிக் காட்டலாம். அவற்றில் முக்கியமான கலாச்சார அடையாளமான ஒரு குணாதிசிய வெளிப்பாட்டைக் குறித்து ஏற்பட்ட விரக்தியைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அது தான் மொழி விருந்தோம்பல்.

கீஸ் டீ யாங், அவ்ரது மனைவி, 4 குழந்தைகளுடன் இரவு உணவுண்ண இல்லத்திற்கு அழைத்திருந்தார். உணவு மேசையில் படைக்கப்பட்டதைத் தொடும் முன், இறைவனுக்கு நன்றி சொல்லுதல் அவரது நெதர்லாந்துக் கத்தொலிக்க மதநம்பிக்கை. என்றைக்கும் 'டச்சு' மொழியில் பிரார்த்திப்பவர் அன்றைக்கு ஆங்கிலத்தில் ஆரம்பித்தவுடம் குழந்தைகள் புரியாமல் குழம்பின.

அவரது வாசகங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

"எல்லா வல்லவரே! எங்களுக்கு உண்ண இந்த உணவைக் கொடுத்தமைக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அதை விட, இந்தியாவில் இருந்து வந்திருக்கும் நண்பர் குப்பு எங்களோடு இந்த மாலையைக் கழிக்கச் செய்த உமக்கு கோடானகோடி காணிக்கைகள்" எனத் தொடங்கி என் புகழ் பாடவே பல நேரம் ஆனது.

நான் ஒரு இந்தியன், தமிழன், இந்து. கிறித்துவ பிரார்த்தனையில் எனக்குப் பொருளில்லை. அவர் பாட்டுக்கு டச்சில் தொழுது விட்டுச் சாப்பிடிருக்கலாம். மேலும், அரைகுறை ஆங்கிலம் பேசும் அவர்கள் எனக்காக 4 வாரம் அலுவலகத்தில் ஆங்கிலம் மட்டுமே பேசினர். டச்சுக்காரர் விருந்தோம்பலுக்கு இது சான்று.

"நான் மும்பையில் வேலை பார்க்கும் போது அங்கே அத்தனை பயலுவலும் இந்தியில் பேசி என்னைக் கடுப்பு ஏத்திட்டே இருப்பானுவுக" என்பதால், 10 பேர் கொண்ட குழுவில் 3 வட இந்தியர் இருக்கும் போது குழு விவாதங்களை வேண்டுமென்றே தமிழில் செய்யும் சிலரை நான் அறிவேன். அமெரிக்காவில் போய் சிலிக்கான் பள்ளத்தாக்கில் தெலுங்கில் உரக்க மாட்லாடும் கொல்டிகளும் உண்டு. ஒரு தேசத்தின் தூதுவர்களாக வந்திருக்கிறோம் என்பது இந்த மாக்களுக்கு நினைவே இருப்பதில்லை.

கூட்டமாக இருக்கும் போது ஆங்கிலம் தான் பேச வேண்டும் என்பதில்லை. இருக்கிற அனைவருக்கும் பொதுவான மொழியில் பேசுவது நாகரீகம். அவன் செய்தான் என்பதற்காக நாமும் அதைச் செய்ய வேண்டுமென்பதில்லை. குரைக்கும் நாயிடம் திரும்பப் போய்க் குரைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

வேற்று மொழிகள் பலவந்தமாகத் திணிக்கப் படும் போது போராடும் நாம், மொழி விருந்தோம்பலை கடைபிடித்துக் காட்ட வேண்டியதும் முக்கியம். முதலில் நாம் கற்போம், பிறகு உலகிற்குக் கற்பிப்போம்..

தமிழர்கள் மேல் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லும் சிலருக்கு இந்தப் பதிவு மகிழ்ச்சி கொடுக்கலாம். நாம் என்றில்லை, அனேகமாக எல்லா இடங்களிலும் பக்குவமின்மை தோற்றிவிக்கும் செயல் இவை. நாம் பக்குவப்பட்டவர்கள்; பிறருக்கு முன் மாதிரியாகத் திகழ்வோம்.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - குப்புச (26-Sep-15, 8:23 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 193

மேலே