ஒரு ராஜாவுக்கு மூனு சம்சாரம்

ஒரு ராஜாவுக்கு மூனு சம்சாரம். மொதல் ரெண்டாவது சம்சாரங்களுக்கு ஆளுக்கொரு பையன். மூனாவதுக்கு ரெண்டு பசங்க. ராஜா என்னா செய்யிறாரு, மூத்த சம்சாரத்து மவனை ராஜாவாக்கிரலாம்னு பிளான் பண்றாப்ல. ரெண்டாவது சம்சாரம் கதை தெரில.

மூனாவது சம்சாரம் செம்ம டென்சனாயிருச்சி. நைஸா ராஜாவை அந்தப்புறத்துக்கு கூட்டியாந்து பஞ்சாயத்து பண்ணிச்சு. இந்த மாதிரி இந்தமாதிரி. எம்மவந்தான் அடுத்து ராஜாவா இருக்கனும். ஏற்பாடு பண்ணு. இல்லாட்டி அந்த மவனை போட்டுத்தள்ளிருவேன் அப்டீன்னு மெரட்டுச்சி.

மெரண்டுபோன ராஜா எவ்ளவோ சொல்லிப்பார்த்தாப்ல. ஊருஜனத்துக்கே அந்த மவனைத்தான் புடிச்சிருக்கு. அவந்தான் பெரியவன். நாயமா அவந்தான் ராஜாவாகனும் அப்டி இப்டின்னு. மவராசி கேக்கவேயில்ல.

ராஜாவுக்கு சோத்துல வெசத்தை வெச்சு சாப்பிடக்குடுத்துட்டு. அவன் நாட்டுல இருந்தாத்தான பஞ்சாயத்து. பேசாம அவனை காசுபணங்குடுத்து வேற எங்கியாச்சும் அனுப்பிவச்சிரு. இத்தன காலம் உன்னோட குப்பைகொட்டிருக்கேன். ஒருக்கா உன் உசுரக்கூட காப்பாத்திருக்கேன். ஒழுங்கா எம்மவனை ராஜாவாக்குன்னுச்சி.

நொந்துபோன ராஜாவும் வேற வழியில்லாம மூத்த மவனை கூப்பிட்டு. இதாம்பா விசயம். இங்கிருந்தா இந்த கைக்காரி உன்னை போட்டுத்தள்ளிருவா. பேசாம எங்கியாச்சும் போயிரு. வேனுங்குற பணங்காசை எடுத்துக்க அப்டீன்னாரு. மவனுக்கு அப்பாருன்னா அம்புட்டு உசுரு. அதோட அவுருக்கும் உள்ளூரு போரடிச்சிப்போச்சு.

சரி நம்ம தம்பிதான அப்டீன்னு டீலுக்கு ஒத்துக்கிறாப்ல. ரெண்டாவது சம்சாரம் மூத்த மவன கூப்பிட்டு சொல்றா. பாருப்பா ஒனக்கே இந்தகதி. இங்க இருந்தா அவ இவனையும் கொன்னாலும் கொன்றுவா. எதுக்கு வம்பு நீ இவனையும் உங்கூடவே கூட்டிட்டு போயிருங்குறா.

மூத்தமவனும் சரி சித்தி நா பாத்துக்கிறேன்னு அவனையும் கூப்பிட்டுக்கிறான். மூத்த மவனோட சம்சாரம் யோசிச்சா, புருசனே வேற ஊருக்கு போறான். நாம இங்க கெடந்து என்னத்த செய்ய அப்டீன்னு தானும் கூடக்கெளம்பினா. ஆச்சா ?

மூனுபேரும் ஒரு நா ராத்திரி மூட்டைமுடிச்சுகளோட கெளம்பிப்போயி ஊரெல்லைல பார்த்தா, ராஜா சொன்னாப்ல மூட்டைல பணங்காசு ஒன்னுத்தையும் காணோம். சரி சித்திக்காரி பிளான் பண்ணி அல்லாத்தையும் லவட்டிட்டான்னு தெரிஞ்சுபோச்சு. கைல கால்ல இருக்கிறதை வச்சு சமாளிச்சிக்கலாம்னு நடக்குறாங்க. வழில ஒரு ஆறு வருது.

யாராச்சும் வந்தா படகோட்டிட்டு போயி அக்கரைல விட்டுட்டு செலவுக்கு வாங்கிட்டு ஊட்டுக்குபோலாம்னு ஒக்காந்திருக்கான் ஒருத்தன். அண்ணந்தம்பிங்க போனதும், பார்த்தா ராஜாவுட்டு புள்ளைங்க மாதிரி இருக்கு. நல்ல வேட்டைதான் இன்னிக்கின்னு, சந்தோசமா படகுல ஏத்திக்கிட்டு பேசிக்கிட்டே போறாங்க.

அக்கரை போனதும் முத்தமவன் சொல்றாப்ல. சாரிப்பா எங்ககிட்ட அவ்ளவா வசதியில்ல. அப்பால இந்தப்பக்கம் வந்தா கவனிச்சிக்கிறேன் அப்டீன்னு. படகோட்டிக்கி செம்ம டென்சன். இருந்தாலும் சமாளிச்சிக்கிட்டு, பரவால்ல ப்ரோ. இதுல என்ன இருக்கு. உங்கள மாதிரி பெரிய மனுஷா சகவாசம் தான் பெரிசு எனக்கு. உங்க அன்பே எனக்கு போதும் அப்டீன்னு கட்டிப்புடிச்சி வழியனுப்பிட்டு படகோட்டிட்டே கெளம்புறாப்ல.

கொஞ்சம் தள்ளி வந்தப்பறம் தம்பி கேக்குறாப்ல. என்ன அண்ணே உன் கழுத்துல இருந்த பத்துப்பவுன் சங்கிலிய காங்கலைன்னு. அப்பத்தான் அவங்களுக்குப்புரிஞ்சது. படகோட்டி கட்டிப்புடிச்சது அன்புனால இல்ல, அந்த சங்கிலிய ஆட்டியப்போடத்தான் அப்டீன்னு. வேற என்ன செய்ய அப்டீன்னு நொந்துபோயி நடக்க ஆரம்பிச்சாங்க. அப்பல்லாம் விகேசி பேரகான் பேட்டா கம்பெனிலாம் வேற இல்லியா, வெறுங்கால்லயே காட்டுக்குள்ள நடந்து போறாங்க. தோதா ஒரு எடம் கெடைச்சதும் அங்கனக்குள்ளயே ஒரு குடிசையப்போட்டு தங்கிக்கிறாங்க.

அண்ணந்தம்பிங்க வேட்டைக்கிபோவ, அண்ணிக்காரி சமைக்கிறதுன்னு லைபு போவுது. ஒருநாள் ஒரு காட்டுவாசி பொண்ணு ஒன்னு இவுங்க குடிசை இருந்த ஏரியா பக்கம் வருது. அண்ணங்காரன் பார்க்க கொஞ்சம் பர்ஸனாலிட்டியா வேற இருக்கவும் புரப்போஸ் பண்றா.

அவன், இல்ல கண்ணு எனக்கு கலியாணம் ஆயிட்டு. ஊட்டுல என் சம்சாரம் இருக்காப்ல. மன்னிச்சிக்க அப்டீங்குறாப்ல. அவ பாவம் காட்டுவாசி தான ? அதனால என்ன என்னையும் சேர்த்துக்க அப்டீன்னு டார்ச்சர் பண்றா. ஆக்சுவலா தம்பிக்காரன் ஒருமாதிரி முசுடு. சட்டுன்னு டென்சனாயி அந்தப்புள்ள மூக்கை அறுத்துவிட்டுடறாப்ல.

அந்த காட்டுவாசிப்புள்ள என்ன பண்றா ? நேரா அவ அண்ணங்காரங்கிட்ட போயி பிராது வைக்கிறா. விசயம் இந்த மாதிரி அப்டீன்னு. அல்ரெடி அவங்க ரெண்டுபேரும் பாசமலரை விட டேஞ்சரான அண்ணந்தங்கச்சி வேற. கேக்கவா வேனும் ? தக்காளி யாருன்னு காட்டு அம்முனி பேசிக்கலாம் அப்டீன்னு கெளம்பி வந்து பார்த்தா ?

அண்ணந்தம்பிங்க ரெண்டுபேரும் இல்ல. அண்ணிக்காரிய பார்த்தா அவனுக்கு எங்கியோ பார்த்தாப்ல ஒரு பீலிங்கு. அவனுக்குள்ள டாட்டாய்ஸ் சுத்துது. அதாக்கண்டி இருவது வருசம் முன்னாடி சின்னப்புள்ளைல காணாமப்போன தன்னோட இன்னொரு தங்கச்சிதான் அவ அப்டீன்னு ஞாபகம் வருது.

அவகிட்ட எல்லா விசயத்தையும் சொல்றான். அதுக்கு அண்ணிக்காரி சொல்றா. நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம். ஆனா புருசன் கொளுந்தன்லாம் வெளிய போயிருக்காங்க. அவங்க வந்தப்பறம் பேசிக்கலாம் அப்டீன்னு சொல்றா. காட்டுவாசிக்கானா டென்சன். எங்க அவ புருசங்காரன் வந்து விடமாட்டேன்னு சொல்லிட்டா என்ன செய்யிறது அப்டீன்னு அவளைக் கடத்திரலாம்னு முடிவு பண்றான். என்னடா பண்லாம்னு யோசிச்சு அங்கிருந்து கெளம்பி கொஞ்சம் தள்ளிப்போயி, ஒரு மானை குடிசைபக்கம் விரட்டிவிடுறான்.

மானைப்பார்த்த அண்ணிக்காரிக்கு நாக்குல எச்சில் ஊருது. அடடா நம்ம புருசனுக்குதான் மான்கறின்னா புடிக்குமே. புடிச்சி சமைச்சி வச்சிருவம் அப்டீன்னு ஐடியா பண்றா.

வாசலுக்கு வந்தப்பறந்தான் தெரியுது கொளுந்தன் காரன் குடிசையச்சுத்தி ஒரு கோடு போட்டுருக்கான். குடிசைக்குள்ள எறும்பெல்லாம் வரக்கூடாதுன்னு எறும்பு சாக்பீஸால போட்ட கோடு அது. அதை அழிக்காம தாண்டி வெளியவந்ததும் காத்திருந்த காட்டுவாசி குளோரோபார்ம் கர்ச்சிப்பை மூக்குல வச்சி தூக்கிடறான்.

வழில அவ வளர்க்கிற கழுகு வந்து அவளுக்கு ஏதோ ஆபத்துன்னு புரிஞ்சிக்கிட்டு காட்டுவாசிய கொத்த வருது. காட்டுவாசி டென்சனாயி குச்சியாலயே ஒரு போட்டுபோட, அது கீயாங்கியான்னு கத்தி ரெக்கை கட்டாயி கீழ விழுது. காட்டுவாசி அவன் எடத்துக்கு அவளைத் தூக்கிட்டு போயிடறான்.

குடிசைக்கு திரும்பிவந்த அண்ணந்தம்பிங்க அண்ணிக்காரிய காணமேன்னு காடுபுல்லாத் தேடுறாங்க. அப்பத்தான் வழில அந்த கழுகு விசயத்தை சொல்லுது. தம்பியோட கண்ணு ரெண்டும் கேப்டன் கணக்கா கோவத்துல செவக்குது. காட்டுவாசிய போட்டுத்தள்ளனும்ணே அப்டீன்னு கெளம்பினான். அண்ணங்காரன் சொல்றாப்ள. பொறுமையா இரு தம்பி. ஒடனே அவனை போட்டுத்தள்ளிட்ட கதை ஒடனே முடிஞ்சிரும். இந்தக்காட்டுல நமக்கும் பொழுதுபோவனும்ல. பொறுமையா இரு. நமக்குன்னு யாராச்சும் அடிமை சிக்குவான். அவனை வச்சு இவனை செய்வோம் அப்டீன்னதும் தம்பியும் ஒத்துக்குறான்.

அப்டியே பராக்கு பார்த்துட்டே ரெண்டுபேரும் போயிட்ருக்கும்போது வழில ஒரு கொரங்கு அழுதிட்ருக்கு. கண்ணுமூக்கெல்லாம் காயம். என்னாச்சு சாமி ஏன் இப்டி அழுவுற ? ஒடம்பெல்லாம் இத்தனை காயமாயிருக்கே எந்த மூத்திர சந்தில யாருகிட்ட மாட்டின அப்டீன்னதும் அது இன்னும் ஜாஸ்தியா அழுதிட்டு தன்னோட கதையச் சொல்லுது. இந்தமாதிரி என் அண்ணங்காரன் என் வாழப்பழத்தை புடுங்கிட்டு தரமாட்ரான். கேட்டதுக்கு என்னிய அடிச்சு தொறத்திட்டான் அப்டீன்னுது.

அண்ணன் தம்பிகிட்ட கண்னாலயே சொல்றாப்ள. பாத்தியா நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டாப்லன்னு. கொரங்குக்கு ஹெல்ப் பண்றோம் அப்டீன்னு சொல்லி கூட கூப்டுகிட்டாங்க. அதுகூட பிரன்ஸா இருந்த அத்தன கொரங்கும் சேர்ந்துகிச்சு. அண்ணங்கொரங்கு தலைலயே ரெண்டு தட்டுதட்ட அது பழத்தை குடுத்துட்டு காட்டை காலி பண்ணிருச்சி. அதுல ஒரு டெரர் கொரங்கு சொல்லிச்சு. அந்த காட்டுவாசி ஒரு டேஞ்சரான ஆளு. அவனுக்கு நாம போவோம்னு தெரியும். எப்டியும் சண்டைக்குத் தயாரா இருப்பான். எதுக்கும் நா முன்னாடி போயி அவிங்க எத்தனை பேரு இருக்காங்க. அதுல சப்பை எத்தனை டெரர் பீஸ் எத்தனைன்னு பார்த்துட்டு வரேன் அப்டீங்குது. அதோட யோசனை புடிச்சுப்போகவும் சரின்னு அதையே காட்டுவாசியோட எடத்துக்கு அனுப்பி வைக்கிறாங்க.

நேரா காட்டுவாசிகிட்ட போயி அந்த கொரங்கு சொல்லுது. யோவ் நமக்குள்ள ஒரு டீல் பேசிக்கலாம். உன் ஏரியால ஒரு வாழைத்தோப்பு இருக்கு. அதை எனக்கு ரிஜிஸ்டர் பண்ணிக்குடுத்துரு. நா எப்பவேனாலும் வந்து தின்னுக்குவேன்னு. நா அந்தக்காவை சண்ட சச்சரவுலாம் இல்லாம கூலா கூட்டிட்டு போயிடறேன்னு. காட்டுவாசிக்கு மரண பிரஷர் ஏறிடுச்சி. ஏற்கனவே அவனுக்கு சுகர்வேற. பதிலுக்கு கொரங்குகிட்ட திட்டுறான். ஏய் முட்டாக்கொரங்கே... அவளை கூட்டியாந்தது என்னமோ நாந்தான். ஆனா இப்போ நா போவச்சொன்னாலும் போவமாட்டேன்னு அடம்புடிக்கிறா. நல்லா மூனுநேரமும் கெழங்கு கேழ்வரகு கம்பு சோளம் தேனு திணை மாவுன்னு மூக்கப்புடிக்கத்தின்னு சொகுசா இருக்கா. எப்டியாச்சும் அவளை இங்கிருந்து கூட்டிட்டு போயிரு. வாழத்தோட்டமென்ன கரும்புத்தோட்டத்தையும் சேர்த்து எழுதிவைக்கிறேன் அப்டீன்னான்.

கொரங்குக்கு அய்யோ பாவம்னு ஆயிருச்சி. டப்புனு ஒரு ஐடியா பண்ணிட்டு காட்டுவாசிகிட்ட சொல்லிச்சு. சரிய்யா விடு அழுவாத. பேசாம ஒன்னு செய். இந்த எடத்தில நெருப்பை பத்தவச்சு விட்ரு. அதுக்கு பயந்து எல்லாரும் ஓடுறமாதிரி நடிங்க. அந்தக்காவும் ஓடிரும் அப்டீங்குது. நல்ல ஐடியான்னு கை குடுத்ததோட அதோட வால்லயே நெருப்பை வச்சுவிட, அது குய்யோமுறையோ கத்தி ஏரியா புல்லா ரவுண்டடிச்சுது. ஒன்னும் பாச்சா பலிக்க. சொகுசா ஒக்காந்து சோளக்கருது சாப்டிட்ருக்கு அந்த அண்ணிக்காரி. சரின்னு தோல்விய ஒப்புத்துக்கிட்டு கொரங்கு அவ கால்ல விழுந்திருச்சி.

கூட வரச்சொல்லி கேட்டப்ப அவ கேட்டா, நீ என் புருசன் அனுப்பித்தான் வந்தன்னு எப்டி நம்புறது. ஏற்கனவே காலங்கெட்டுப்போச்சு. அங்கங்க கேங்க் ரேப்பு கிட்நாப்ன்னு காடு நாசமாயிருச்சி அப்டீன்னதும் கொரங்கு என்ன பண்ணிச்சு, இருவது சவரன் நெக்லஸ் ஒன்னை குடுக்குது. இதை உங்க ஊட்டுக்காரருதான் குடுத்தாங்க அக்கா அப்டீன்னது. அதை கண்ணால பார்த்ததுமே வாங்கி தொலைவா விட்டெறிஞ்சா. எம்புருசன் வெள்ளிக்கொலுசு கேட்டதுக்கே மூக்கால அழுதாப்ல. அவுராவது இருவது சவரனாவது அப்டீன்னதும் வழியில்லாம கொரங்கு நெசத்தை சொல்லுது. யக்கா நீ ரெம்பத்தான் வெவரம் அப்டீன்னு ஒரு மோதிரத்தை எடுத்து குடுத்திச்சு. அவளும் அதை அப்டி இப்டி பார்த்துட்டு கல்யாணி கவரிங் சீல் இருக்கவும் ஒத்துக்கிட்டு வாங்கி விரல்ல மாட்டிக்கிட்டு சொல்லிச்சு.

இந்த காட்டுவாசி ஒரு டம்மி பீஸு. நா இன்னும் ஒருமாசம் இங்க தங்கி நாலுகிலோ வெய்ட் ஏத்திட்டு அப்பறந்தான் வருவேன். நீவேனா கெளம்பிக்க அப்டீன்னு. வேற வழியில்லாம கொரங்கும் திரும்பபோயி அண்ணந்தம்பிங்ககிட்ட விசயத்தை சொல்ல, ரெண்டுபேருக்கும் சரியான கடுப்பாயிருச்சி. அப்ப நாங்கன்னா மட்டும் மனுசங்க இல்லியா. ஒழுங்கா எங்களையும் வச்சு சாப்பாடு போடச்சொல்லு அந்த காட்டுவாசிய அப்டீன்னு டென்சன். இது இப்டியே போவ, காட்டுவாசி முடியவே முடியாது, ஏற்கனவே உன் சம்சாரத்தால ஏரியா மொத்தமும் காலியாயிட்டு. நீங்களும் வந்தா எம்பொழப்பு நாறிடும் மரியாதையா கெளம்பிருங்கன்னு சொல்ல, ரெண்டு தரப்புக்கும் செம்ம சண்டை.

கடைசீல காட்டுவாசி இவிங்களுக்கு சோறுபோட்டு வாழுறதுக்கு நாண்டுக்கிட்டே சாவலாம் அப்டீன்னும் செத்தும் போயிடறதோட கதையோட மொத பாகம் முடியுது.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - மாதவன் ஸ (28-Sep-15, 8:56 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 479

மேலே