அங்குலிமால்
புத்தபிரான் ஒரு முறை ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.ஊர் மக்கள் அவரிடம் வந்து அடுத்து உள்ள காட்டுப் பாதையில் அவர் போக வேண்டாமென வலியுறுத்தினர்.காரணம் கேட்க, அங்கு அங்குலிமால் என்ற பெயருடைய ஒரு பெரிய கொள்ளையன் இருப்பதாகக் கூறினார். அங்குலிமால் என்பது ஒரு காரணப்பெயர்.அங்குலி என்றால் விரல் மால் என்றால் மாலை.அவன் அக்காட்டுப் பக்கம் வருபவர்களைக் கொன்று அவர்களது விரல்களை வெட்டி மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்திருப்பானாம்.புத்த பிரான் அப்படிப்பட்ட ஆளைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கூறி அம்மக்களின் அன்பு வேண்டு கோளை மீறி சென்றார்.காட்டினுள் அவர் வருகையை அங்குலிமால் பார்த்தான். அவனுக்கு அளவு கடந்த கோபம் உண்டாயிற்று.யாரும் வர அஞ்சும் இக்காட்டுக்குள் ஒரு துறவி பயமின்றி வருவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அவன் புத்தரைப் பார்த்து,''அங்கேயே நில் அதற்கு மேல் வந்தால் உன் உயிர் உனக்கில்லை.ஏதோ ,துறவியாய் இருக்கிறாயேஎன்று பார்க்கிறேன்.இப்போதே ஓடிப் போய்விடு.''என்று கத்தினான்.புத்தரோ அஞ்சவில்லை.அவனுடைய அச்சுறுத்தல்களைக் கண்டு கொள்ளாமல் அவர் அவன் அருகே வந்தார்.அவன் கடுஞ்சினத்துடன்,''உன்னுடைய கடைசிப் பிரார்த்தனைகளை முடித்துக்கொள்,''என்றான்.சாக்கிய முனி சாந்தமாகச் சொன்னார்,''அப்பனே,என் உயிரைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
என் உயிரைப் பறிப்பதற்கு முன் ஒரு காரியம் செய்ய வேண்டும்,''என்றார்.அவன் என்னவென்று கேட்க,அவரும் அருகிலிருந்த மரத்தின் ஒரு கிளையை வெட்ட சொன்னார்.இது ஒரு வேலையா என்று ஏளனமாகக் கூறிக் கொண்டே மரத்தின் கிளையை அவன் வெட்டினான்.அப்போது புத்தர் சொன்னார்,''இப்போது அதே கிளையை மீண்டும் அந்த மரத்தில் ஒட்டவை,''என்றார்.கொள்ளையன் மலைத்துப் போய் ''அது எவ்வாறு முடியும்?''என்று கேட்டான்.புத்தபிரான் சொன்னார்,''இதோ பார்த்தாயா,அழிக்க முடிந்த உன்னால் ஆக்க முடியவில்லை.
எந்த முட்டாளாலும் அழிக்க முடியும் ஆனால் எந்த ஞானியாலும் கூட எதையும் ஆக்க முடியாது.ஆக்க முடியாத உனக்கு அழிக்க எந்த உரிமையுமில்லை.''அந்தக் கணமே அந்த அங்குலிமால் அவர் காலில் விழுந்து சரணடைந்து அவருடைய சீடனாகிவிட்டான்.