காதல் பிரிவிலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

பிரிவு என்பது எல்லா உறவுகளிலும் ஏற்படும் ஒன்று தான் ஆனால், இது உங்கள் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கம் ஏற்படுத்துகிறது எனும் போது தான் காதல் முன்னிலை வகிக்கிறது.

காதல் ஒருவரது வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் போடலாம். இது உங்களை வானுயரம் எடுத்தும் செல்லலாம், அதலபாதாளத்தில் தள்ளியும் விடலாம்.

இது நீங்கள் அந்த பிரிவை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. மற்ற உறவுகளின் மூலம் ஏற்படும் பிரிவை விட, அதிகமாக பாடம் கற்பிப்பது காதல் தான்.

இந்த படிப்பினையை நீங்கள் உணர வேண்டும், வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால், உங்கள் நேற்றைய வாழ்க்கையை விட சிறந்த நாளைய வாழ்க்கையை வாழ முடியும்.....

முழுமையான திட்டமிட முடியாது

முழுமையாக ஒருவரது வாழ்க்கையை எவராலும் திட்டமிட முடியாது. எதிர்பாராத திருப்பங்களினால், மாற்றங்கள் ஏற்படுவது தான் வாழ்க்கையின் நியதி. இதிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது என்பது தான் உண்மை.

இவரில்லாமல் வாழமுடியாது என்பது பொய்

இவரில்லாமல் என்னால் எனது வாழ்க்கையை ஒருநாளும் வாழ முடியாது என்பது பொய் என்பது தான் ஓர் பிரிவு கற்றுக் கொடுக்கும் மிகப்பெரிய பாடம். பிரிவு எப்படி நிலையானதோ, அவ்வாறு தான் அதை கடந்து செல்வதும்.

நெருக்கமானவர் என்பவர் யாருமில்லை

நமக்கு இவர் நெருக்குமானவர் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. உங்கள் வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் இருக்கலாம், சில காலம் கழித்து அவரை முற்றிலுமாக மறக்கும் சூழலும் ஏற்படலாம்.

இது வாழ்க்கையின் முடிவல்ல

ஓர் உறவின் முடிவு என்பது உங்கள் இலட்சியத்தையோ, கனவுகளையோ சிதைத்துவிட முடியாது. சிறு தடையாக வேண்டுமானாலும் அமையலாம். நீங்கள் இதை விட பெரிய விஷயங்கள் பலவற்றை காண வேண்டியிருக்கிறது. ஓர் உறவின் பிரிவு, உங்கள் வாழ்க்கையின் முடிவாக அமைய வாய்ப்பே இல்லை.

உங்களை விட சிறந்த துணை யாரும் இல்லை

உங்களை விட வேறு யாரும் உங்களுக்கு பெரிய துணையாய் இருந்துவிட முடியாது என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். தனிமையை விட ஓர் சிறந்த ஆசிரியர் வேறு யாரும் இருக்க முடியாது. இந்த ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் பாடம் தான் உங்களுக்கு வாழ்க்கையின் சுயரூபத்தை வெளிக்காட்டும்.

உங்கள் வலிமை

உங்கள் மன வலிமை எவ்வளவு உயர்ந்தது என்பதை நீங்கள் இந்த காலத்தில் தெரிந்துக் கொள்ள முடியும். இந்த வலிமை உங்களுக்கு, முந்தைய நாட்களைவிட சிறந்த ஓர் எதிர்காலத்தை பரிசளிக்கும்.

படிப்பினை

ஒவ்வொரு நபரும் நமக்கு எதாவதை கற்பித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், அதை நாம் உணர்கிறோமா? இல்லையா என்பது தான் கேள்வி. ஓர் பிரிவு நமக்கு ஒருவரை பற்றிய குணம், பண்பு, நாம் எப்படி இருந்திருக்க வேண்டும் என பலவற்றை கற்பிக்கிறது. பிரிவுக்கு முன்பே நீங்கள் அந்த நபரிடம் இருந்து அவரை பற்றி கற்றிருந்தால் இந்த பிரிவே கூட வராமல் இருந்திருக்கலாம்.

நூறு சதவீதம் யாராலும் காதலிக்க முடியாது

இந்த உலகில் எவராலும் ஒருவரை நூறு சதவீதம் காதலிக்க முடியாது. ஒவ்வொரு நபரிடமும் ஏதாவது எதிர்வினை குணம் 1%-ஆவது இருக்கும். இது கண்டிப்பாக ஓர் எதிர்மறை எண்ணத்தை உங்கள் மேல் ஏற்படுத்தும். இது வெளிப்படாமல் இருக்காமல், ஆனால் கண்டிப்பாக ஒவ்வொருவரின் மனத்திலும் இருக்கும்.

எழுதியவர் : செல்வமணி - இணையம் (30-Sep-15, 2:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 184

சிறந்த கட்டுரைகள்

மேலே