தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்

1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம்
பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் அன்னையாக
விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (ஏனைய மொழிகளுக்கு
இல்லாத சிறப்பு)

8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து
நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள்
அடங்கியது

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க,
செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும்
இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும்
இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச்
சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை
பாராட்டும் தமிழ்)

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்

13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும்
கொண்டு ஒளிதரும் தமிழ்)

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச்
சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த
நிலையிலும் கற்க கற்க மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும்
இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள்
அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை,
கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை
உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ்
எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ்:- தன்னிகரில்லாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ்:- நமக்கும், உலக மொழிகளுக்கும் தாயாக
மூலமாக விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்
26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை
பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும்
தமிழ்

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத
தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும்
சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை
தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும்
கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத்
துணைபுரிவது

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின்
மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும்
பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப்
பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு
அமைந்த தமிழ்

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்

எழுதியவர் : படித்து பிடித்தது (30-Sep-15, 3:06 pm)
சேர்த்தது : அகர தமிழன்
பார்வை : 88

மேலே