சாரல்

இப்போதெல்லாம் பெங்களூரில் தினசரி மழை பெய்கிறது.

அதுவும் சாதாரண மழை இல்லை. கன மழை, ஆலங்கட்டி மழை.

இந்த ஆலங்கட்டி மழையை நான் நேரில் பார்த்தது கிடையாது. பெங்களூரில் அது பெய்வதாக ஒரு நண்பர் ட்விட்டரில் சொல்ல, ஆவலுடன் அலுவலக ஜன்னல்களைத் திறந்து பார்த்தேன், வெறும் மழைதான் காணக் கிடைத்தது. கொஞ்சம் எக்கித் தேடினால் தற்கொலை நோக்கமோ என்று சந்தேகப்படுவார்கள், அல்லது ‘ஏஸி டிஸ்டர்ப் ஆகுது, ஜன்னலை மூடுய்யா’ என்று கண்டனம் எழும். ஏன் வம்பு? மூடிவிட்டேன்.

ட்விட்டர் நண்பர் ‘ஆலங்கட்டி மழை’ என்றதும், உங்களைப்போலவே எனக்கும் ‘தாலாட்ட வந்தாச்சோ’ என்கிற இதமான ரஹ்மான் கீதம்தான் காதில் ஒலித்தது. ஆனால் அது அத்தனை சுகமான மழை இல்லையாமே, ஆலங்கட்டி மழையால் அடிபட்டுப் பல அலுவலகங்கள், வீடுகளில் கண்ணாடிகள் உடைந்து சிதறியதாகச் சொன்னார்கள். தாலாட்டவேண்டிய மழைக்கு இப்படி ஒரு கோபமா? ஏன்?

முந்தாநாள் மழை தொடங்கிய நேரம், நான் ஒரு பூங்காவில் இருந்தேன். ஊதா நிறப் பூக்களைக் கொண்ட ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து மடிக்கணினியில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன்.

பொதுவாக நான் பூங்காவுக்குச் சென்றால் புத்தகங்களைமட்டுமே துணைக்கு அழைத்துப்போவது வழக்கம். அன்றைக்கு ஏனோ கம்ப்யூட்டரையும் தூக்கிப்போகிற ஆசை வந்தது.

காரணம், வைரமுத்து தொடங்கிப் பல கவிஞர்கள் பூங்காவில் கவிதை எழுதுவதாகச் சொல்லிவிட்டார்கள். நாம் ஒரு வித்தியாசத்துக்கு அதே பூங்காவில் கட்டுரை எழுதினால் என்ன? சரித்திரத்தில் நம் பெயருக்கும் ஒரு 30*40 இடம் இல்லாவிட்டாலும் மகாபாரதத்தில் துரியன் மறுத்த ஊசி முனையளவு நிலமாவது கிடைத்துவிடாதா என்கிற நப்பாசைதான்.

ஆனால், கவிதை எழுதத் தெரியாத ஒருவனைப் பூங்காக்கள் விரும்புவதில்லை என்று தெரிகிறது. நான் நுழைந்த விநாடிமுதல் அங்கிருந்த மரங்கள் அதிவேகமாகச் சுழன்றாட ஆரம்பித்துவிட்டன. மேல் கிளைகளில் தொடங்கிய அதிர்வு படிப்படியாகக் கீழே இறங்கி ஒட்டுமொத்த மரத்தையும் குழந்தை கைக் கிலுகிலுப்பைபோல ஆட்ட, எனக்குப் பயம் அதிகரித்தது.

பயத்துக்குக் காரணம், இரண்டு நாள் முன்னால்தான் மழைக் காற்றில் நூறுக்கும் மேற்பட்ட பெங்களூர் மரங்கள் முறிந்து விழுந்திருந்தன. அதனடியில் நசுங்கிய கார்களை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படம் பிடித்துப் போட்டிருந்தார்கள்.

மரத்தடியில் கார்கள் நசுங்கினால் பரவாயில்லை, கம்ப்யூட்டர் நசுங்கினால்? நான் நசுங்கினால்? ஒருவேளை நசுங்காவிட்டால்கூட, அத்தனை பெரிய மரம் என்மீது முறிந்து விழுந்தால், அதன் இண்டு இடுக்குகளில் புகுந்து வெளியே வருவது சிரமமாச்சே.

தொடைநடுங்குகையில் மடிக்கணினியை உபயோகிப்பது உசிதமில்லை. மூடிவைத்தேன். அதனைப் பையில் போட்டுத் தோளில் மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

நான் அந்த மர நிழலில் இருந்து வெளியேறியவுடன், மழைச் சாரல் (தூறல்? என்ன வித்தியாசம்?) தொடங்கியது. சில விநாடிகளில் படபடவென்று பெரிதாகிவிட்டது.

அவசரமாக ஓடி அந்தப் பூங்காவின் இன்னொரு மூலையிலிருந்த மேடையில் ஏறிக்கொண்டேன். அங்கே தகரக் காப்பு போட்டிருந்தபடியால் தலை நனையாமல் பிழைக்கமுடிந்தது.

என்னைப்போலவே இன்னும் நான்கைந்து பேர் அங்கே தஞ்சம் புகுந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்ஃபோனை அணைத்துவைத்தார்.

அப்போதும், பூங்காவில் செங்கல் ஸ்டம்ப் வைத்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பையன்கள் அசரவில்லை. அடாது மழை பெய்தாலும் விடாது சிக்ஸரடிப்போம் என்று முயன்றார்கள். பேட் செய்த பையனின் காலில் பந்து தொட்டதும் எல்லோரும் ஒரே குரலில் ‘எல்பிடபிள்யூ’ என்று அலறினார்கள்.

பாவம் அந்தப் பையன், பந்து பாய்ந்த கோட்டிற்கும் ஸ்டம்பிற்கும் சம்பந்தமே இல்லை. ஆனாலும் பந்து காலில் பட்டவுடன் எல்பிடபிள்யூ என தீர்ப்பாகிவிட்டது.

அவுட் ஆன மறுவிநாடி, அவனுக்கு மழை உறுத்தியிருக்கவேண்டும். ஆடினது போதும் என்று பேட்டைத் தூக்கிக்கொண்டு எங்கள் மேடைக்கு வந்துவிட்டான். மற்ற பையன்களும் சூழ்ச்சி அறியாது அவன்பின்னே ஓடிவந்தார்கள்.

இங்கே வந்தபிறகும் அவர்கள் சும்மா இல்லை. அந்தக் குட்டியூண்டு மேடையிலேயே பந்து வீசி பேட் செய்வதும், சுவரில் பந்தை அடித்துப் பிடிப்பதுமாகப் பயிற்சியைத் தொடர்ந்தார்கள்.

அப்போது மணி ஐந்தரை. நான் ஆறு மணிக்கு வீடு திரும்பவேண்டிய கட்டாயம்.

என் அவசரம் மழைக்குப் புரியவில்லை. விடாமல் வெட்டியடித்துக்கொண்டிருந்தது. சுழன்று தாக்கும் காற்றில் மரங்கள் ஊசலாடுவதை லேசான நடுக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.

’வெட்டியடித்தல்’ என்றவுடன் பாரதியார் வரிகள் சில ஞாபகம் வருகிறது. நீங்கள் வாசித்திருக்கிறீர்களா தெரியாது, ஆனால் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். ‘பாரதி’ படத்தில் இளையராஜா இசையமைப்பில் கே. ஜே. யேசுதாஸ் பாடியது:

வெட்டி அடிக்குது மின்னல் – கடல்

வீரத் திரை கொண்டு விண்ணை இடிக்குது;

கொட்டி இடிக்குது மேகம் – கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று

’சட்டச்சட சட்டச்சட டட்டா’ என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்.

மழையின் தாளத்துக்கு ‘சட்டச்சட சட்டச்சட டட்டா’ என்று பாரதி கொடுத்த பின்னணி இசையை அப்படியே பயன்படுத்திக்கொண்ட ராஜா, இந்தப் பாட்டில் ஒரு புதுமை செய்திருந்தார். வேறொரு சந்தர்ப்பத்தில் (அதுவும் முழுக்க வேறுபட்ட contextல்) பாரதியார் எழுதிய ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்ற பாடல் வரிகளை இந்த மழைப் பாட்டோடு இணைத்து ஒரே தாளக்கட்டில் தந்திருப்பார்.

ஆச்சர்யமான விஷயம், அக்கினிக் குஞ்சு எரிந்து ’வெந்து தணிந்தது காடு’ என்று சொல்லும் பாரதி, ’தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ என்று கேட்டுவிட்டு, ‘தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’ என்று நெருப்புக்கும் தாளகதி சொல்கிறான். அந்த ஆக்ரோஷமான தீயோடு, அதன் தன்மைக்கு நேர் எதிரான தண்ணீரை, அதாவது தாளம் கொட்டிக் கனைக்கும் வானத்தின் மழையை ஒரே பாட்டில், கிட்டத்தட்ட ஒரேமாதிரியான மெட்டில், தாளக்கட்டில் இணைக்கவேண்டும் என்று இளையராஜாவுக்கோ, அந்தப் படத்தில் பணியாற்றிய சுஜாதாவுக்கோ, இயக்குனர் ஞான ராஜசேகரனுக்கோ, அல்லது இவர்கள் அல்லாத வேறு யாருக்கோ தோன்றியிருக்கிறது. அந்த மஹானுபாவர் எவராக இருப்பினும், அந்தரிகி வந்தனமு!

அது நிற்க. மீண்டும் மழைக்குத் திரும்புகிறேன். கொஞ்சம் அவசரம்.

மணி ஐந்து ஐம்பதாகியும் மழை நிற்கவில்லை. என்னிடமோ குடை எதுவும் இல்லை. வேறு வழியில்லாமல், நடந்தே வீட்டுக்குப் போகலாம் என்று கிளம்பிவிட்டேன். வழியில் ஆட்டோ கிடைத்தால் நல்லது, இல்லாவிட்டால் நனையவேண்டியதுதான்.

கிடைக்கவில்லை. ரொம்ப நாளைக்குப்பிறகு தொப்பலாக நனைந்தபடி வீடு திரும்பினேன். துவட்டிக்கொண்டு வேலையைப் பார்த்தேன்.

இந்த அனுபவத்தால், இன்று வெளியே கிளம்பும்போதே கையில் குடையுடன் புறப்பட்டேன். வீட்டு வாசலில் கால் வைத்தவுடன் மழை பிடித்துக்கொண்டது.

நான் அப்போதே திரும்பிச் சென்றிருக்கவேண்டும். ஏதோ தைரியத்தில் தொடர்ந்து நடந்தேன். மழை வலுத்தது.

பேருந்துக்குக் காத்திருந்த சில நிமிடங்களுக்குள் என் குடை முழுவதும் நனைந்து உள்ளே ஈரம் சிந்துவதுபோல் ஒரு பிரமை. ‘திரும்பிப் போய்விடலாமா’ என்று நான் நினைத்த விநாடியில் பஸ் வந்தது.

வெளியே கொட்டித் தீர்க்கும் மழைக்கு நேரேதிராக, பஸ்ஸினுள் உலர்ந்த சூழ்நிலை. காரணம், பெங்களூர் புது பஸ்கள் ஒழுகுவதில்லை.

ஆனால், நாங்கள் சிலர் குடைகளை மடக்கியபடி மேலேற, பஸ்ஸிலும் ஈரம் சொட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே அங்கிருந்த இருக்கைகளில் சவுகர்யமாக உட்கார்ந்திருந்தவர்கள் எங்களை எரிச்சலோடு பார்த்தார்கள், என்னவோ நாங்கள்தான் மழையைப் பாக்கெட்டில் போட்டுவந்தமாதிரி.

அப்புறம் யோசித்தபோது, அவர்களுடைய எரிச்சலுக்கு வேறொரு காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றியது. இப்போது எங்கள் கையில் குடை இருக்கிறது. அடுத்த ஸ்டாப்பில் இறங்கியவுடன் மழையில் நனையாமல் சௌக்கியமாக நடக்கலாம். ஆனால் அவர்கள், மழை இல்லாத நேரத்தில் கிளம்பியதால் குடை கொண்டுவரவில்லை. அந்தக் கடுப்புதான் இப்படி வேறுவிதமாக வெளிப்படுகிறதோ என்னவோ.

பஸ்ஸில் இடம் கிடைத்து உட்கார்ந்தபோது, எனக்குள் ஒரு நப்பாசை. நான் இறங்கவேண்டிய இடம் வருவதற்குள் மழை நின்றுவிட்டால் நன்றாக இருக்குமே.

ம்ஹூம், அது நடக்கவில்லை. மீண்டும் குடையை விரித்துப் பிடித்தபடி கீழே இறங்கினேன். சாலையைக் கடந்து நடக்க ஆரம்பித்தேன்.

அப்போது, அந்த நிழற்பாதையின் மூலையிலிருந்த பூங்கா ஒன்று கண்ணில் பட்டது. அதனுள் மனித நடமாட்டமே இல்லை. அங்கேயும் நான்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

***

என். சொக்கன் …

25 04 2010

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொக்கன். (2-Oct-15, 11:37 am)
Tanglish : saaral
பார்வை : 138

மேலே