ஆயா

நேற்றைக்குப் பூங்காவில் ஒரு விநோதமான ஜோடியைப் பார்த்தேன்.

இருவரும் கை கோர்த்துக்கொண்டு ஒன்றாகதான் உள்ளே நுழைந்தார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுக்கிடையிலான வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது.

அந்தப் பெண்ணுக்கு வயது இருபத்தைந்து அல்லது முப்பது இருக்கலாம். கிராமத்து முகம், சற்றே உயர்த்திக் கட்டிய கண்டாங்கிச் சேலை, கையில் வயர் கூடை, கழுத்தில் மாட்டித் தொங்குகிற செல்ஃபோன் ஒன்றுதான் அவளிடம் நவீனமாகத் தென்பட்டது.

அவளோடு வந்த பையனுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும். கொழுகொழு தேகம், கண்களில் அளவில்லாத குறும்பு.

பூங்காவுக்குள் நுழைந்தவுடன், அந்தச் சிறுவன் மண் மேடையை நோக்கி ஓடினான். அங்கிருந்த சறுக்குமரத்தில் ஏறிச் சரேலென்று கீழே இறங்கினான்.

இந்தப் பெண் அலட்டிக்கொள்ளாமல் மெல்ல நடந்து சென்று ஒரு சிமெண்ட் நாற்காலியில் அமர்ந்தது. கூடையிலிருந்து பிளாஸ்டிக் டப்பா, ஸ்பூனை எடுத்துக்கொண்டது.

அதன்பிறகு, அந்தப் பையன் ஊஞ்சல், சீ-ஸா, A, B, C வடிவக் கம்பிக் கூண்டுகள், சறுக்குமரம், குரங்குத் தொங்கல் கம்பிகள் என்று மாறி மாறி விளையாட, இந்தப் பெண் பின்னாலேயே ஒவ்வோர் இடமாக ஓடியது. Go, Come, Play, House, Good, Yes, No என்பதுபோன்ற ஏழெட்டு ஆங்கில வார்த்தைகளைத் தமிழோடு கலந்துகட்டிப் பேசியபடி அவனைத் தாஜா செய்து சாப்பாடு ஊட்டியது.

பையன் பரவாயில்லை, ரொம்பப் படுத்தாமல் சாப்பிட்டான். ஐந்தாறு நிமிடங்களுக்குள் டப்பா காலி.

அதோடு, அந்தப் பெண்ணின் கடமை முடிந்தது. மணல் மேடையின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டு எங்கேயோ வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

சிறிது நேரம் கழித்து, அந்தச் சிறுவன் அவளைக் கூப்பிட்டான் (ஆங்கிலத்தில்), ‘ஏய் சத்யா, இங்கே வா!’

அவ்வளவுதான். அந்தப் பெண் வெடித்துவிட்டாள், ‘சத்யாவாம், சத்யா, என்னை அப்டிக் கூப்டாதேடா!’

அந்தப் பையன் பாவம். அவனுக்குத் தமிழ் தெரியவில்லை. ‘சத்யா’வாகப்பட்டவளின் கோபத்துக்குக் காரணம் புரியாமல் அப்பாவித்தனமாக விழித்தான்.

அவள் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருந்தாள். ‘உரிமையாக் கூப்பிடறதைப்பாரு, சத்யாவாம், நீயாடா பேர் வெச்சே? என் புருஷன்கூட என்னை இப்படிக் கூப்டது கிடையாது, தெரியுமா?’

அதுவரை ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருந்த எனக்கு, முதன்முறையாக இவர்கள் பேச்சில் சுவாரஸ்யம் தட்டியது. பேர்வைப்பதே கூப்பிடுவதற்காகதானே? தன்னை ஒருவன் பெயர் சொல்லி அழைத்தான் என்பதற்காக இந்தப் பெண் ஏன் கோபப்படுகிறாள்? இதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றியது. புத்தகத்தை மூடிவைக்காமல் ஒட்டுக்கேட்க ஆரம்பித்தேன்.

அவள் இன்னும் அந்தப் பையனைப் பாமரத் தமிழில் திட்டிக்கொண்டிருந்தாள், ‘தடிமாடுமாதிரி முழிக்கிறதைப்பாரு, உன்னை என் தலையில கட்டிட்டு உங்காத்தாவும் அப்பனும் (இப்படியேதான் சொன்னார்) ஜாலியா சினிமா பார்க்கப் போய்ட்டாங்க, எனக்கென்ன தலையெழுத்தா, இந்த வேகாத வெய்யில்ல உன் பின்னாடி லோலோ-ன்னு அலையணும்ன்னு?’

‘நான் ஏதும் வேலை இல்லாம அஞ்சு நிமிஷம் நிம்மதியா ரெஸ்ட் எடுத்தா உங்காத்தாக்காரிக்குப் பொறுக்காது, இன்னும் கொஞ்சம் சிரமப்படட்டும்ன்னு உன்னை என் கையில ஒப்படைச்சுட்டுப் போய்ட்டா மவராசி, ஏன், உன்னையும் சினிமாவுக்குக் கூட்டிகிட்டுப் போனா அவ மவுசு கொறஞ்சிடுமோ?’

அடுத்த இருபது நிமிடங்கள் (நான் அந்தப் பூங்காவில் இருந்தவரை) இந்தத் திட்டல் படலம் தொடர்ந்தது. அவளுடைய திட்டல் வார்த்தைகளில் ஒன்றுகூட அந்தப் பையனுக்குப் புரிந்திருக்காது. என்றாலும், அவன் முகம் லேசாகச் சுருங்கிப்போனதுபோல் தெரிந்தது – என்னுடைய பிரமையாகக்கூட இருக்கலாம்.

***

என். சொக்கன் …

05 04 2010

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொக்கன். (2-Oct-15, 12:40 pm)
Tanglish : aayaa
பார்வை : 157

மேலே