கண்ணீரின் சப்தம்

கவனம் பிசகும் கணமொன்றில்
ஒரு புறக்கணிப்பென
முகம் சுழித்து வெளியேறுகிறது
மனம் உடைக்கும் சொல்.

வருத்தம் கவிழ்ந்து
சிதைந்த நிம்மதி
ஆழிக்குள் புதைக்கிறது
அன்பின் வரைபடத்தை.

அற்பச் சொல்லொன்றின்
வலிய பாதங்கள்
நசுக்கிப் பறக்கிறது
வற்றும் வாழ்வின்
தண்ணீர்க் கூச்சலை
நிராகரித்தபடி.

எரியும் வன்மத் தீயில்
வாழ்வின் மொழி திரிந்துவிட
விக்கித்து நிற்கிறது
விதியின் திசை.

பயணத்தின் திசையற்ற
பாதையொன்றில்
தங்கிச் செல்லும்
பறவைக்காகக் காத்திருக்கிறது
வாழ்வின் கிளை முறிந்த மரம்.


அதிர்ந்து ஒலிக்கிறது
நீள முடியாத பெருங்கடலில்
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்குள்
என் கண்ணீரின் சப்தம்.

எழுதியவர் : rameshalam (3-Oct-15, 7:05 pm)
Tanglish : kaneerin saptham
பார்வை : 183

மேலே