நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் நூல்ஆசிரியர் கவிஞர் ஈழபாரதி நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள்
நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்கார தெரு, உறையூர், திருச்சி – 620 003.
பேச : 94432 84823 ; விலை : ரூ. 50/-

*****

நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது. நூலாசிரியர் கவிஞர் ஈழபாரதி அவர்களின் காதல் கவிதை நூல் இந்த நூலை, தங்களுக்காகவே தியாக வாழவை வாழும் அம்மாவின் பிறந்த நாளில் வெளியிட்டுள்ளார், பாராட்டுக்கள்.


காதல் என்பது அன்றும், இன்றும், என்றும் ரசிக்கப்படும் உணர்வு. காதல் உணர்வு உணர்ந்தவர்களுக்கு மட்டும் கூடுதலான உணர்வு தரும். காதல் கவிதை பரவலாக எல்லோராலும் ரசிக்கப்படும். மற்ற கவிஞர்கள் முதலில் காதல் கவிதை தொடங்கி பிறகு மற்ற கவிதைக்கு வருவார்கள். இவர், முதலில் மற்ற கவிதைகள் எழுதி, பிறகு காதல் கவிதை எழுதி உள்ளார்.


இனிய நண்பர் நந்தவனம் மாத இதழ் ஆசிரியர் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் பதிப்புரை நன்று. நூலை நேர்த்தியாக பதிப்பும் செய்துள்ளார். பாராட்டுக்கள். புதுக்கோட்டை ஹைக்கூ கோட்டை என்பார்கள். புதுக்கோட்டை ஹைக்கூ கோட்டை என்பார்கள் .புதுக்கோட்டை மண்ணின் மைந்தர்களான இனிய நண்பர்கள்,கவிஞர்கள்

மு. முருகேஸ், ஏழைதாசன் மாத இதழ் ஆசிரியர் எஸ். விசயகுமார், தங்கம் மூர்த்தி வரிசையில் புகழ்பெற்ற ஹைக்கூ கவிஞர் ரமா. ராமநாதன் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று.


மற்றவர்கள்

திருமண அழைப்பிதழ்களைக்
காணும் போதெல்லாம்

நம் பெயரை
சேர்த்து வைத்து

சொல்லிப் பார்க்கிறேன்
சில நேரங்களில்

சப்தமாகவும்
மனதுக்குள்

மவுனமாகவும் !


உண்மையான காதல் வயப்பட்ட காதலர்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டுமென்ற விருப்பம் வரும். விருப்பத்தின் விளைவாக மற்றவர் திருமண அழைப்பிதழ் காணும் போதெல்லாம் தங்கள் பெயரை கற்பனை செய்து பார்க்கும் உள்ளத்து உணர்வை கவிதையில் படம் பிடித்துக் காட்டி உள்ளார் நூலாசிரியர் கவிஞர் ஈழபாரதி.


காதல் வயப்பட்டவர்கள் கல்வி மறந்து, வேலை தேடாமல் நாட்களை விரயமாக கழித்த அனுபவத்தை ஒப்புதல் வாக்குமூலமாக நன்கு பதிவு செய்துள்ளார் பாருங்கள்.


சில பேரிடம்

பல வரவுகளை
பரிசாகப் பெற்றுத் தந்தாய்

பாவம் அப்போது புரியவில்லை
இப்போது தான் புரிகிறது

உன் பின்னாடித் திரிந்த
நாட்களில்

வேலை தேடியிருந்தால்
ஒருவேளை

வேலை கிடைத்திருக்கக் கூடும்.


ஆம், வேலையைத் தேடி, வேலையில் அமர்ந்து விட்டு காதலிப்பது நல்லது என்பதை அறிவுரையாகக் கூறுவது போல உள்ளது.


மழைக்குக் குடையாக வருவதில்
விருப்பம் இல்லை எனக்கு!
வெய்யில்

நிழலாக வரவே

விரும்புகின்றேன்.


வித்தியாசமாக எழுதி உள்ளார். மழைக்கு குடை என்பது மழையின் போது மட்டுமே பயன்படும். ஆனால் நிழல் எப்பொதும் உடன் இருக்கும்.


காதலை உணர்ந்து, ரசித்து, ருசித்து, அனுபவித்து எழுதி உள்ளார். நூலாசிரியர் கவிஞர் ஈழபாரதிக்கு காதல் அனுபவம் இல்லாமல் இப்படி கவிதை எழுத முடியாது. கவிதையில், உண்மை இருப்பதால் படிக்கும் வாசகர்கள் மனதில் அவரவர் காதலை மலர்வித்து வெற்றி பெறுகின்றன கவிதைகள். காதலில் தோல்வி அடைந்தவர்கள் உணரும் வைர வரிகள் இதோ:


எல்லாரையும் மறந்து விட்டு
உன்னை மட்டுமே
நேசித்தேன்...
இப்போது தான் புரிகிறது
உன்னைத் தவிர
எல்லோரும் என்னை
நேசிப்பது ...!


காதலனுக்கு காதலி அருகில் இருந்தால் நேரம் போவது தெரியாது. அந்த நேரங்களில் காதலி தவிர வேறு எதுவும் முக்கியமாகத் தெரியாது. அந்த உணர்வை நன்கு உணர்த்திடும் கவிதை ஒன்று.


கவிதைகள்

எவ்வளவு

அழகாய் இருந்தாலும்
படிக்கப் பிடிப்பதில்லை

அவள்
அருகில் இருக்கும் போது மட்டும்.


மழையில் நனைந்து நடப்பதும் ஓர் அழகு தான். மழைக்குப் பயந்து ஒதுங்குபவர்கள் தான் பலர். சிலர் மட்டுமே மழையில் நனைந்து பரவசம் அடைவார்கள். மகிழ்வான தருணமாக அமையும். காதலைப் போலவே, உணர்ந்தவர்கள் மட்டும் உணர்ந்திடும் உன்னத உணர்வு. அதனை உணர்த்தும் கவிதை.


நனைந்து பார்

ஒரு நாள்

மழையில்
குடை எதற்கு

என்பாய்...!


நூலாசிரியருக்கு மழை மீது காதலியைப் போலவே அன்பு உள்ள காரணத்தால் மழை பற்றி பல கவிதைகள் உள்ளன. காதல் தோல்வி காரணமாக காதலியை திட்டித் தீர்க்காமல் தோல்வியையும், நேர்மறை சிந்தனையுடன் ஏற்றுக் கொள்கிறார்.



உன்னைக்

காதலித்ததில் கூட

மகிழ்ச்சி தான்
காரணம்

வாழ்வின் வலிகளை

கற்றுத் தந்தவள் நீ
உன் காதலில்

மிச்சமானது

இந்த கவிதைகள் மட்டும் தான் !


காதலில் தோல்வியடைந்தாலும் காதல் கவிதைகள் கிடைத்து விடுகின்றன. நூலாகவும் வந்து விடுகின்றன. நூல் முழுவதும் காதல், காதல், காதல், காதல் தவிர வேறில்லை. காதல் கவிதைகள் படிக்கச் சலிப்பதே இல்லை. நிலவு போன்றவை.


கரையோர பாத சுவடுகள்
கனவில்

உன்னைக் காணும் போது
கனவு

அழகானது !
கற்பனையில்

உன்னை நினைக்கும் போது
கற்பனை அழகானது.


சில கவிதைகள் படிக்கும் போது வாசகர்களின் சொந்த அனுபவத்தையும் நினைவூட்டி வெற்றி பெறுகின்றன. பாராட்டுக்கள்.


விடுமுறைக்காக இறந்த பின்னும்

பலமுறை இறந்த
தாத்தா... பாட்டிகள் ...

விடுமுறையில் வீட்டுப்பாடம்
செய்யாமல்

காய்ச்சல் வந்த தாய்

நடித்த நாட்கள்
தேர்வு நாட்களில்

மழை வர வேண்டும்

மழை வர வேண்டும்
என்று

மன்றாடிய நாட்கள்

மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும்

நாங்கள் சூட்டிய பெயர்கள்
என் வயது தோழிக்காக

தோழனுடன்
வந்து போன மோதல்கள்

எல்லாமே
ஞாபகத்தில் வந்து போனது

என் மகனை
பள்ளியில் சேர்க்க வந்த போது ...!


நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் வித்தியாசமானவை. எழுதி வைக்காமல் மனதில் பதித்து வைத்த நினைவுகளை கவிதைகளாக்கி உள்ளார். நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .காதல் கவிதைகள் போதும் அடுத்த நூல் சமுதாய சிந்தனை நூலாக இருக்கட்டும்


--

.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (7-Oct-15, 8:32 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 140

மேலே