முதுமை பாவமா

முதியோர் இல்லங்களை காணும் போதெல்லாம் இதயமுள்ள ஒவ்வொருவருக்கும் நெருஞ்சி முள் தைத்தது போலவே இருக்கும். தங்களின் ஆசாபாசங்களை எல்லாம் விட்டொழிந்து,
குழந்தைகளுக்காகவே வாழ்ந்த பெற்றோர் பலரை, இன்று முதியோர் இல்லங்களில் பார்க்க முடிகிறது.

'சொந்தக் காலில் நின்று விட்டால் போதும்; யாருடைய தயவும் தேவையில்லை' என்ற மனோபாவமும், மாறி வரும் கலாசாரமும், இளைய தலை முறையினர், பெற்றோரை புறக்கணிக்க காரணமாகின்றன.உலக மக்கள் தொகையில், எட்டு சதவீதத்துக்கும் மேல் முதியோர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் ஏற்பட்டு வரும் அசுர வளர்ச்சி, சராசரி வயதை அதிகரிக்க செய்கிறது.

இந்தியாவில் மட்டும், 10 கோடி பேர், 60 வயதை கடந்தவர்களாக உள்ளனர். 70 வயதை தாண்டியவர்கள், நான்கு கோடி பேரும், 80 வயதை கடந்தவர்கள், 90 லட்சம் பேரும் இருக்கின்றனர். முதியவர்களில் 40 சதவீதம் பேர், வாரிசுகளால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இதுவே, தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் அமைந்திருப்பதற்கு காரணமாக இருக்கிறது.

முதியோரை கண்ணியமாகவும், கவுரவமாகவும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அக்., 1ல், சர்வதேச முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதன் முதலாக, 1991ல், சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கடை பிடிக்கப்பட்டது.கடந்த, 2002ல், சர்வதேச அளவில், முதியோருக்கான செயல்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை, உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கங்கள்.

ஐ.நா., கணக்கீட்டின்படி, உலகில் ஒவ்வொரு, 10 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். 2050ம் ஆண்டில், ஐந்துக்கு ஒன்று என்ற அடிப்படையிலும், 2150ல், மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதியோர் விகிதம் அதிகரிப்பதற்கு ஏற்ப, ஒவ்வொருவரும், தங்கள் பெற்றோரை அன்புடன் பராமரித்தாலே, முதியோர் இல்லங்கள் பெருக வாய்ப்பில்லை. தவறினால், 'மண்ணில்
ஒரு நரகம், முதியோர் இல்லம்' என்ற வாக்கியம் உண்மையாகி விடும்.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - Puradsifm (8-Oct-15, 7:00 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : muthumai paavamaa
பார்வை : 253

சிறந்த கட்டுரைகள்

மேலே