என் மன வானில்

விழியே விழியே
என்மேல் உனக்கென்ன கோவம்?
இருந்தும் திறந்திட மறந்தாய்
நான் என்ன செய்தேன் பாவம்..?

கருவறைப் புனித இருட்டிலே
ஈரைந்து மாதம் தங்கி வந்த எனக்கு
நிரந்தர இவ்விருட்டு
புனிதமாய் இல்லை ஏனோ..?

வானவில்லின் ஏழுவண்ணம்
இதுவரை நானறியேன்
என் மன வானின்
வானவில்லை யார் அறிவார்..?

சூரியனைக் காண்கின்றேன் வெம்மையாய்
வெண்ணிலவைக் காண்கின்றேன் தண்மையாய்
விழியில்லா என் முகத்தை
நான் காண்பது எப்போது..?

கருவிழியில் தான் இல்லை ஒளி
மனக்கண்ணால் கண்டிடுவேன் என் வழி
ஒலி கேட்டிடும் காதுகளே
ஒளி காட்டும் கண்கள் ஆனதேனோ..?

இரவு வந்து கனவு கண்ட பின்
விழித்த பிறகும் இரவாகவே உள்ளதே
உறக்கத்தில் மட்டுமே வந்திடும் கனவு
வாழ்கையாகவும் அமைந்த அர்த்தம் என்ன..?

இவ்வாறு தோன்றும் கேள்விகளை
கறுப்புக் கண்ணாடியணிந்து மறைத்துவிட்டு
இன்றைய நாளை எதிர்நோக்கிடும் எனக்கு
உடல் முழுவதும் கோடி கண்கள்...!!!

~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (8-Oct-15, 3:03 pm)
Tanglish : en mana vaanil
பார்வை : 159

மேலே