காலம் தப்பிய ஞானம்

காலம் தப்பிய ஞானம்.


அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்தப் பெரிய மனிதரின் வீட்டில் கூடி இருந்தனர். ஒரு காலத்தில் அந்த ஊர் சிவன் கோவிலில் தலைமை அர்சகராக இருந்த அந்த பெரிய மனிதரின் உயிர் போகாமல் இழுத்துக் கொண்டே இருந்தது. அவர் ஏதோ சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் தொண்டை அடைத்து குளறலாய் சொலவது எவர்க்கும் புரியவில்லை.

”ஏதோ ஒரு பெரிய குற்றம் அவரை வாட்டுகிறது. எவரிடமும் சொல்லாமல் மறைத்த அது இந்த கடைசி நேரத்தில் அவரை குற்ற உணர்வாய் வாட்டி வதைக்கிறது”
என அந்த ஊர் பள்ளிக் கூடத்தின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் அந்த பெரியவரின் பள்ளித் தோழருமான சுவாமினாத ஐயர் வெளியில் வந்து அவரது பெரிய பிள்ளையிடம் தனியே கூப்பிட்டுச் சொன்னார்.

”பாலை ஊற்றிப் பாருங்கள்” எனச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதமாய் இப்படி இதோ அதோ இன்று போய் விடும் என்று எதிர்பார்த்த பிள்ளைகள் அலுத்துப் போன நிலையில் ஊருக்குத் திரும்பலாமா என அவர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

அந்தப் பெரியவர் மனதிலோ, பழைய நினைவுகள் நிழற்படமாய் வந்து கண் முன் வந்து ஓடின. தான் இருக்கும் வீட்டை தன் தம்பிக்குப் பங்கு தராமல் அவன் தன்னை ஆள் வைத்து அடித்ததாக பொய் வழக்கு தொடுத்தது. வழக்கில் தோல்வி அடைந்த அவரது தம்பி ஜெயிலுக்குப் போன அடுத்த வாரம் வாழ்க்கைப் பிச்சை கேட்டு அந்த வீட்டில் ஒரு ஓரமாய் இருந்து கொள்கிறேன் எனக் கெஞ்சிய போது போய் விபச்சாரம் செய்து பிழைத்துக் கொள் என அடித்துத் துரத்தியது. பத்தே நாளில் பத்து பாத்திரம் தேய்த்து பிழைத்தவள் மீது அவதூறு பேசியதில் அவனது மனைவி தண்டவாளத்தில் தலை வைத்து மாண்டது. அத்தோடு ஒரு சம்பந்தமும் இல்லாத பெரிய சாமி இதனால் பட்ட அவத்தை என காட்சிகள் மாறி மாறி வர, பெரியசாமி உயிருடன் தானே இருக்கிறான். அவனிடம் மன்னிப்பு கேட்கலாமே என நினைத்து வாய் வார்த்தை வராத நிலையில் கைகளைக் குவித்துக் காட்டி பெரிய சாமி என சொல்ல முயல, அவர் கோவிலுக்குச் செல்ல நினைக்கிறார் என தவறாக புரிந்து கொண்டவர்கள் நோய்க்காரரை கோவிலுக்குக் கொண்டு செல்லப்படாது என கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் தினந்தோறும் சைகை காட்டுவதும் அப்போது அவர் வாயில் பாலை ஊற்றுவதுமாய் இருந்தனர்.

. முப்புரி நூலுடன் நமக்குத் தரப்பட்ட போதனை சரியானதா என பாராமல் நம்பியது எத்தனை தவறானது.

“களைகள் நாம் காணாதபோது முளைக்கின்றன, ஆழமாய் வேர் விட்டுத் தழைக்கின்றன. ஆண்டு பல ஆகி விடுகின்றது பூண்டென்று நாம் உணர்வதற்கு. காயங்கள் நிறைந்தது இந்த காயம். இதில் சாயப் பூச்சுகட்கும் மாயப் பேச்சுகட்கும் பெரிய பலன் ஒன்றும் கிடைத்து விடாது. இது ஒரு காலம் தப்பிய ஞானம். சீ இது காலம் நம் மீது துப்பிய ஞானம்.
”க்க்ல்க்ல்க்க்கே க்க்ல்ல்லேஎக்கா”

என்று அவர் சொல்வது புரியாமல் ”தாத்தா ஏதோ

”க்க்ல்க்ல்க்க்கே க்க்ல்ல்லேஎக்கா

எனக் கேட்கிறார் என்று அவரது பேத்தி பெரியவரின் மருமகளிடம் கிண்டல் செய்து சொல்லிக் கொண்டிருந்தது. அவளும் அமுத்தலாய் சிரித்துவிட்டு அப்பால் நகர்ந்தாள். தெருமுனையில் பீடி புகைத்து கொண்டு இருந்த பெரியசாமி பண்ணை வீட்டுக்குள் நம்மள மாதிரி ஆட்கள விட மாட்டார்கள் என தினந்தோறும் வந்து பார்த்து விட்டு செல்வது வழக்கமாகி விட்டது.

.அந்த ஒற்றைப் புளிய மரம் அந்த ஊரில் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு பெயராகிப் போனது. ஆயினும் அந்தப் பேருந்து நிறுத்தமே பெரியசாமியின் பிழைப்புக்கு
கூரையாய் மாறிப் போய் இருபது ஆண்டுகள் ஆகி விட்டு இருந்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி அவனை எல்லோரும் ’செருப்பு பெரியசாமி” என்றே அழைப்பர்.

பெரியசாமி ஒன்றும் படிக்காதவன் அல்ல. அந்தக் காலத்து எஸ்.எஸ். எல்.சி. படித்தவன். அவனுடன் செயிட். அண்டொனிஸ் மேல் நிலைப் பள்ளியில் படித்தவர்கள் இன்று பல நாடுகளில் மற்றும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் பெரிய பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தப் பட்டிக்காடிற்கு வந்தால் பெரிய சாமியுடன் அன்பாய் ஓரிரு வார்த்தைகள் பேசாமல் போக மாட்டார்கள். ஆயினும் அந்த ஊரில் கோயிலில் குருக்களாக பணி புரியும் அவனது பள்ளித்தோழன் அரவிந்தாட்சன் மட்டும் இவனிடம் முகம் கொடுத்துப் பேச மாட்டான். என்றாவது செருப்பு தைக்க வந்தாலும், சைக்கிளை விட்டு இறங்காமல் காசை வீசி எறிந்து விட்டுச் செல்வான்.

தைப்பூசம் வந்து விட்டதால் ஊர்க்கோயிலில் விசேஷம் என்று ஏகப்பட்ட கூட்டம். சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதனுடன் சேர்ந்து அலைமோதியது. அன்று பெரியசாமிக்கு கூடுதலாக இரு நூறு ரூபாய் கிடைத்து விட்டதால் கொஞ்சம் சரக்கு சாப்பிடலாம் என அவன் ”பள்ளத்தில்” இருந்த கடையில் வாங்கி குடித்து முடித்து விட்டு நிதானமாக, வெகு நிதானமாக நடந்து வந்து கொண்டு இருந்தான். அவனது பழைய பள்ளிக் கூடத்தில் இருந்து ஏதோ மாதா பாட்டு பாடும் இசை காற்றில் மிதந்து கொண்டு இருந்தது. தூரத்தில் அம்மா அமிர்தானந்த மாயி அம்மாவின் ஆசிரமத்தில் மணிக் கூண்டில் இரவு எட்டு மணி ஆகி விட்டு இருந்ததை அறிவித்தனர். . நெடுஞ்சாலையில் பேப்பட்டியான் வீடு தாண்டி அவன் வரும்போது ஒரு பீடியைப் பற்ற வைத்து தீக்குச்சியைச் சுண்டி விட்டபோது அது சாலையில் கிடந்த ஒற்றைச் செருப்பு மீது விழுந்ததைக் கண்டான். அந்த செருப்பு சென்ற வாரம் அவனிடம் அரவிந்தாட்சன் தைத்த பழைய செருப்பு என்பதை அந்த குடி போதையிலும் அவனால் அடையாளம் காண முடிந்தது. ஒற்றைச் செருப்பும் அதனோடு தெரிந்த இரத்தச் சிதறலும் அவன் சாப்பிட்ட சரக்கும் சேர்ந்து அவனுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. ஒற்றைச் செருப்பு உள்ளது ஆயின் மற்றது எங்கே என அவன் தேட ஆரம்பித்த போது எதிர்ப்பக்கம் சாலையின் விளிம்பில் மண்டிக் கிடந்த புதரின் பின்னே அந்த ஒற்றைச் செருப்பும் அரவிந்தாட்சனும் கிடப்பதைக் கண்டான். அவ்வழியே செல்லும் வாகனங்களை கை நீட்டி வழி மறித்தும் நில்லாமல் சென்றதால், ஆத்திரத்தில் ஒரு அரசாங்க பஸ் மீது கல்லை அடித்தான். அடுத்த பத்தாவது நிமிடம், அரவிந்தாட்சனை ஆஸ்பத்திரிக்கும் பெரியசாமியை போலீஸ் ஸ்டேஷனுக்கும் கொண்டு சென்று புண்ணியம் கட்டிக் கொண்டது காவல் துறை.

பெரியசாமியை சிறையில் தள்ளியதைக் கேட்ட அவன் மனைவி அதே புளிய மரத்தில் தூக்கில் தொங்கி விட்டாள். அந்த ஒற்றைப் புளிய மரத்தில் கீழ் நிழலுக்கு நிற்பவர்களை ஏதோ பிடித்து கீழே தள்ளுவது போல உணர்ந்ததால் அந்த இடத்தில் ஒரு சூலம் நட்டு அதில் வேப்பிலை கட்டி, எலுமிச்சம் பழம் சொருகி மந்திரித்து விட்டார் பக்கத்துப் பிள்ளையார் கோயில் பூசாரி.
சிறையில் இருந்து திரும்பிய பெரியசாமி மனைவியை இழந்த சோகத்தில் இருந்தாலும் அரவிந்தாட்சனைப் பற்றி விசாரித்து அவன் பிழைத்துக் கொண்டான் எனக் கேட்டு திருப்தி அடைந்தான்.. வழக்கம்போல் அவன் தன் பழைய வேலையை கவனிக்க ஆரம்பித்து ஒரு வாரம் ஓடி இருக்கும். அப்போது அங்கு வந்து நின்ற அரவிந்தாட்சன், ஒரு பையில் புது வேட்டியும் துண்டும், கொஞ்சம் வாழைப்பழமும், வெற்றிலையும் வைத்து ஒரு தட்டில் ஐ நூறு ருபாயும் வைத்து பெரியசாமியிடம் நீட்டினான். என் பிள்ளைகள் நீதான் என் உயிரை காப்பாற்றினாய் என்று கூறினார்கள். உனக்கு நான் நன்றி சொல்ல காத்து இருந்தேன். எடுத்துக் கொள் என அந்த தாம்பாளத்தில் இருந்தவற்றை நடைமேடையில் சரித்தார்.

”ஒன் உயிருக்கு விலை ஐனூரு ரூபாதானா?. எம்பொஞ்சாதி உயிருக்கு என்ன விலை தருவ நீ? எனக்கு இதுலாம் வேணாம் எடுத்துக் கொள்” எனக் கூறிய பெரியசாமியை முறைத்துப் பார்த்த அரவிந்தாட்சன் அடுத்த கணம் பணத்தை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு, “என் பிள்ளைங்க சொன்னதுனால நான் வந்தேன். எம் புத்திய செருப்பால அடிக்கனும்.” எனக் கூறி அங்கிருந்து நகர்ந்தார். . இப்போது பெரியசாமி ஒரு “சாமியாடி”யுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். இருபது ஆண்டுகள் ஓடி விட்டன. இப்போது ஐயர் உடல் நலம் இல்லாமல் இருக்கிறார் என அறிந்து அவரைப் பார்க்க ஆசைப்பட்டும் பொல்லாத சாதிக் கட்டுப்பாட்டினால் அவன் தெரு முனையிலேயே நின்று கொண்டு இருந்தான். பின்னால் மாதா அமிர்தானந்த மாயி ஆசிரமத்தில் இருந்து "நல்லவர் என்றும் நல்லவரே என பழைய திரைப்பாடல் சன்னமாக ஒலித்துக் கொண்டு இருந்தது.

.

.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (9-Oct-15, 3:23 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 154

மேலே