தீர்த்திடுவோம் வறுமையினை ----- தரவு கொச்சகக் கலிப்பா
வறுமையிலே வாடுகின்ற வாழ்க்கைக்கு மாற்றமுண்டோ ?
சிறுமையிலே சிதறிநின்று சித்தமது கலங்கிடுதே .
பொறுமையிலே பொருத்தருளப் பொல்லாங்கு பேசிடுதே.
வெறுமையிலே வெந்துநானும் வேறுவழித் தேடுகின்றேன் . ( தரவு கொச்சகக் கலிப்பா )
இளவயதில் வறுமையுமே இல்லாமல் செய்துவிட்டால்
களவுசெய்யும் நினைவினிலே கள்வர்கள் வரமாட்டார் .
உளவியலின் கீழ்நின்று உள்ளபடி உரைக்கின்றேன் .
வளர்ந்துவரும் சமுதாயம் வாழ்விற்கு நலம்செய்யும் . ( தரவு கொச்சகக் கலிப்பா )
மண்ணிலுள்ள உயிர்களெல்லாம் மங்கிவிடும் வறுமையினால்
கண்ணிலுள்ள காட்சியெல்லாம் கலக்கத்தைத் தந்துவிடும் .
எண்ணமெல்லாம் துயரமன்றொ ? எவ்வுயிரும் வறுமையிலே .
திண்ணமுடன் சொல்லுகின்றேன் தீர்த்திடுவோம் வறுமையினை . ( தரவு கொச்சகக் கலிப்பா )