எப்போதும் பெண்

மேலுடையின்றி அரைநிர்வாணமாய் அமர்ந்தபடியே
பெண்களின் ஆடை ஆபாசம் பற்றி
பேசிக்கொண்டிருந்தான் என் கணவன்.

உடல் ஆபாசம் மறைக்க
உடை போர்த்திக்கொண்டேன்
உடையும் ஆபாசம் என்றாகிப்போக
கானல்நீர் உடலுக்கு நானெங்கு போக?

விற்பனைப் பொருளை விளம்பரப்படுத்தும் நானும்
விற்பனை பொருளாகவே பார்க்கப்படுகிறேன்.

அங்கங்கே சில ஆண்கள்
அமிலப்பார்வை வீச
உடற்ப்பாகங்களே என்/பெண் ஊனமாகிப்போனது
சதைகளும் பாரமாய் தோனுது

தன் தாயை கண்ணகியாய் பார்க்கும் கண்கள்
என்னை மட்டும் மாதவி என்கிறது.
என்னை மாதவி என்னும் கண்ணும்
தன் தாயை எப்படி கண்ணகியாய் கொள்ளும்.

இப்போது
ராமனின் உடை ராவணனுக்கும்
கட்சிதமாய் பொருந்துகிறது.
இன்னமும்
பல கோவலன்களால் ராமனின் வேடத்தில்
வீடு வீடாய் பஜ்ஜி தின்றபடி
நீ தேடப்பட்டுக்கொண்டிருக்கிறாய்.
ஜாக்கிரதை கண்ணகி!!

தினம் சீதை எங்கேயோ
சோதிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறாள்
கோவலனுக்கு வாய்தா
வழங்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

அன்றும்,இன்றும்,என்றும்
ஒன்றே பெண்கள்

கண்ணகி,சீதை,நான்
வேறுபாடுகள் ஏதுமில்லை

கண்ணகி அடிமையாய் இருந்தாள்
சீதை அடிமையாக்கப்பட்டிருந்தாள்
இருவருள் யாரையோ உடுத்திக்கொண்ட நானும்
உடலாலே அடக்கப்படுகிறேன்.
உடைக்குள்ளே அடங்கிக்கிடக்கிறேன்.
அடைகாக்கவே மணக்கப்படுகிறேன்.

எழுதியவர் : மு.ஜெகன் (12-Oct-15, 9:38 am)
Tanglish : eppothum pen
பார்வை : 506

மேலே