எங்கள் காதல் விடியலுக்காய் - உதயா

நீண்ட நாள் காத்திருப்பில்
நீண்டுகிடந்த நாட்களோடு
முடிவுகாணாப் பட்டியலாக
ஆசைகள் பூத்துக்கிடந்தன

முத்தத்திற்காய் கனவுகண்டே
அவளின் கன்னத்தின்
சின்னக் குழிகள்
ஏக்கத்தில் நிரம்பிக்கிடந்தன

அவள் மட்டும் பார்த்து ரசிக்க
அவள் மட்டும் விளையாடி மகிழ
எக்கணமும் பொத்தான் பூட்டினால்
அவளுக்கான அரங்கம் மூடியே கிடந்தன

நெடுந்தூரப் பயணத்தில்
அவள் களைப்பாறிக்கொண்டே பயணிக்க
என் தோள்கள்
உறக்கம் மறந்துக் கிடந்தன

சின்ன சின்ன சண்டையிட்டு
அவளை கட்டியணைத்து சமாதனப்படுத்தவே
ஆயிரம் காரணம் தேடி
என் மனம் அலைந்தவாறே அழுகின்றன

அந்த கடற்கரையோரத்தில்
எங்கள் பாதம் படராமல்
மணல்கள் எல்லாம் நண்பகலில்
தீயாய் சுடுகின்றன

அவளுக்காய் இன்னும்
நான் வாங்கிச் செல்லாத கவிதைகள்
உடைந்த படகு போல
அலைகளில் ஓய்ந்துக்கிடக்கின்றன

குழந்தைதனமாய் கோபித்துக்கொண்டு
என்னை அன்பாய் மிரட்டும்
அந்த தருணத்திற்காய் காத்திருந்தே
என் கண்கள் கலங்குகின்றன

என்னை அள்ளி
மார்போடு அணைத்துக்கொள்ளவே
அவள் மசக்கையுறா தாயாக
எனக்காய் தவம் கிடக்கிறாள்

என் சுவாச மூச்சு
அவள் மேனியை தீண்டு கணத்தில்
தன் பிறப்பை முழுமையாக்கி கொள்ள
அவள் துடித்துக்கொண்டிருக்கிறாள்

அவளை மனதில் சுமக்கும் நானும்
என்னையே உலகமாய் நினைக்கும் அவளும்
காத்துக்கிடக்கின்றோம் - என்றோ
எங்கள் காதலுக்காய் பிறக்கும் விடியலுக்காய்

எழுதியவர் : உதயா (13-Oct-15, 1:35 pm)
பார்வை : 276

மேலே