நீங்கா திருப்பாய் நிறைந்து

கருணை விழியால் கனிவுடன் நோக்கி
வருந்துயர் போக்குவாள் மாரி !- விரும்பி
வணங்கு மடியவர் வாழ்வி னொளியாய்
இணங்கி யருள்வாள் இனிது .

இனியவள் காட்டிடும் ஈடிலா அன்பில்
பனித்திடும் கண்கள் பரிவாய் !- செனித்த
பிறவியில் தாயவள் பேரருள் கிட்ட
சிறந்திடும் வாழ்வும் தெளிந்து .

தெளிந்த அறிவுடன் தேவியை எண்ண
எளிதாய் வருவாள் இறங்கி ! - ஒளிரும்
சுடரிலும் தோன்றியே சூலினி காப்பாள்
இடர்வரின் சிட்டாய் எழுந்து .

எழுந்தோடி வந்தாய் எளியேனைக் காக்க
தொழுதவென் துன்பம் தொலைத்தாய் ! - விழுதாகத்
தாங்கினாய்த் தாயே! தயாபரியே! என்றென்றும்
நீங்கா திருப்பாய் நிறைந்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (14-Oct-15, 11:41 pm)
பார்வை : 955

மேலே