இவங்க பிச்சைக்காரி இல்ல என் அம்மா

இவங்க பிச்சைக்காரி இல்ல என் அம்மா !!!", என்றாள்.

(சற்று முன்பு )
அந்த சூரிய கதிர்கள் சுட்டெரிக்கும் பொழுதில் மதிய மலர்கள் காற்றின் இசைக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தது. அந்த தெருவின் அமைதியை கலைக்க திட்டமிட்டு சிட்டுக்குருவிகள் பாடிக்கொண்டிருந்தன. அந்தத் தெருவின் கடை வரிசையில் கடைசிக்கு மூன்றாவது கடையிலிருந்து
இளைஞர்கள் நால்வர் வெளியே வந்தனர். " ஹே நிஷா , செம்ம சாப்பாடு. வயிறு நிறைஞ்சிருச்சி.வா ஜோக்கிங் போகலாம்",என பிரபு கலாய்க்க உடன் வந்த மாறனும் கவிதாவும் சிரிக்க முடியாமல் சிரித்தனர். நன்கு மதிய உணவை உண்ட அவர்கள் சிரித்துப் பேசி சாலையின் ஓரமாய் நடந்துப் போக, வயதானவர் ஒருவர் அவர்களை நோக்கி தொடர நேர்ந்தார்.

இதை உணர்ந்த மாறன், " யாருடா அந்த கெழடு? நம்மளை தொடர்ந்துகிட்டே வருது . காசு ஏதாவது வேணுமோ ? சரி சில்லறை இருந்தா கொடு. கையில கொடுத்து அனுப்பிருவோம்",என்று அறுவருப்பான குரலில் பிரபுவிடம் சொன்னான். அந்த இரண்டு இள மங்கைகளும் சிறு பயத்துடன் வேகமாக நடக்கத் துவங்கி அந்த இடத்தை விட்டு சிக்கிரமே வெளியேற வேண்டுமென்று நடந்துக் கொண்டே ஓட்டப்பந்தயம் செய்தனர். அந்த வயதாவரோ அவர்களை நோக்கி வருவதாக தெரியவில்லை. நிஷாவை நாடி வருவதாகவே அறிகுறி தெரிந்தது. "இந்தாமா..காசு..வச்சிக்கோ! ஏதாவது வாங்கி சாப்பிடு." என்று சில்லறைகளை அந்த வயதான பெண் கையில் கொடுத்தனர். அந்த முதியவரோ அதைப் பொருட்படுத்தாமல் நிஷாவை நோக்கி அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.
இதைக் கண்டு காளையர்கள் இருவருக்கும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. ஐயத்துடன் சற்று நேரம் அவர்களையே அறியாமல் நின்று நடக்கும் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவளைத் தான் பின் தொடர்கிறார் என்று தெரிந்ததும் நிஷா கவிதாவை இழுத்துக் கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தாள். அந்த வயதானவரும் விடுவதாக இல்லை. நின்றுக் கொண்டிருந்த இரண்டு ஆண்மகன்களும் அவர்களின் தோழிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் அந்தக் கிழவியைத் துரத்தி பிடித்து, " ஏய் கிழவி, என்ன செய்ய நினைக்கிறாய்?ஏன் அவர்களை துரத்துகிறாய்? என்ன பிரச்சனை உனக்கு ? ஒழுங்கா ஓடி போயிரு !!" என்று சற்று குரலை உயர்த்தி மிரட்ட முற்பட்டான் மாறன். "அவள் என்..என்...என் " என்று தடுமாறியப் படியே திரும்பவும் நிஷாவை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.

கோவம் முத்திப் போன பிரபு " சொல்ல சொல்ல கேக்கமாற்ற .. செவுட்டு கிழவியே..உன்னை என்ன செய்கிறேன் பாரு",என்று அந்த வயதானவரை முரட்டு தனமாக பிடித்து "பைத்தியக்கார கிழவியே...பிச்சை எடுக்கும் உனக்கு என்ன திமிரு " என்று கடிந்து அவரை இழுத்து கிழே தள்ளிவிட்டான். "ஐயோயோயோ" என்று அலற தெம்பின்றி பாதிக் குரல்வளத்துடன் அலறிய படியே கிழே விழுந்தார் அந்த மூதாட்டி. அந்த பாதி அலறல் ஓசையைக் கேட்டு நிஷா திரும்பி பார்த்தாள்.தலையில் அடி பட்டது அந்த வயதான மங்கைக்கு. நின்ற இடத்திலிருந்து ஓடோடி வந்தாள் நிஷா. அந்த வயதானவரை தூக்கிப் பிடித்த படி " டேய் பிரபு...அறிவில்லை....வயதில் மூத்தோருக்கு நீ கொடுக்கும் மரியாதை இதுதானா ? சீ.... ஈரம் இல்லையா உனக்கு?" என்றபடி அந்த வயதான முதியோரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார் . வலியில் துடித்த படி அந்த வயதிழந்த பெண்மணி அவள் கரத்திலிருந்த புகைப்படமொன்றை நிஷா விழி முன் ஈட்டினாள்.

அதை அவள் பார்வை உள்வாங்கி மூளையிடம் கொண்டு போய்ச் சேர்த்த மறுநொடி, நிஷா இதயம் நின்றுப் போனது. கண்களின் திடீர் என்று கேணி அமைக்க மண் தோண்டி நீர் தெறித்த கதையாய் அவள் கண்களில் கண்ணீர் தேங்கிக் கொண்டிருந்தது. வாய் நடுக்கம் கண்டது. கைகளெல்லாம் உதறத் தொடங்கியது.மாறன் உடனே " நிஷா..என்ன இது..?? உன்னை காப்பாற்றவே பிரபு சற்று முரட்டுத் தனமாக நடந்து கொண்டான். நீயோ அவனை வைகிறாய்? இந்தப் பிச்சைக்கார கிழவிக்கு ஏன் ஆதரவு அளிக்கிறாய் ? பேசாம வா...போலாம்" என்று நிஷா கையைப் பிடித்து அவளை தூக்க முற்பட்டான். நிஷா மாறனின் கையை உதறிவிட்டு பளார் என்று ஓர் அறையிட்டு ""இவங்க பிச்சைக்காரி இல்ல, என் அம்மா !!",என்றாள்

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (15-Oct-15, 12:37 am)
பார்வை : 414

மேலே