இந்தப் பழங்கள் புளிக்கும்
வங்கியில் இருந்து வந்த கடிதத்தை மகன் ஜீவனிடம் கொடுத்து விட்டு மகனின் அறைக்கதவோடு சாய்ந்துகொண்டு நின்றான் சண்முகம். அப்படி நிற்பது கூட அவனுக்கு விருப்பமாகவும் பெருமையாகவும் இருந்தது.
கனடாவுக்கு வந்தநாள் தொடங்கி வந்த எத்தனையோ கடிதங்களை எல்லாம் கீழ்வீட்டுச் சிற்றம்பல வாத்தியாரிடம் காட்டி விபரம் கேட்பதற்காக நாய்போல அவர்கள் வீட்டு வாசலிலே காத்திருந்ததும் வாழ்க்கை இரகசியங்களை ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத ஒரே ஒரு காரணத்துக்காக அவர்களோடு பங்கு போட்டுக்கொள்ள நேர்ந்ததும் போன்ற அவலங்கள் இப்பொழுது சண்முகத்துக்கு இல்லை.
சண்முகம் படித்தவன்;. கணக்கிலும் உலக அறிவிலும் அவனும் கெட்டிக்காரன் தான். ஆங்கிலம் மட்டும் தான் அவனுக்கு தெரியாது. ஆனால் கனடாவைப் பொறுத்தவரை அதுவே அவனுக்கு பெரிய தலை வலியாகப் போய்விட்டது. என்ன கேட்கிறார்கள் என்பதை சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்து அனுமானித்து அதற்கான பதிலைத் தமிழிலே நினைத்து பின்பு அதற்கு ஆங்கிலச் சொற்களைப் பொருத்தி அவன் பேசும் போது அவமானம் அவனைப் பிடுங்கித் தின்னும்.
இவ்வளவு துன்பப்படாமல் ஊரிலேயே அவன் ஆங்கிலத்தைக் கற்றிருக்கலாம். ஆனால் ஊருக்குப் பிடித்த சாபக்கேடு ஏன் சனியன் என்று கூடச் சொல்லலாம். அது கணபதி வாத்தியார் என்ற பெயரில் உலாவியது. பூவரசந் தடியாலும் வாத நாராணிக் கொப்பாலும் மனுசன் அடித்து உரித்து பள்ளிக்கூடத்தில் ஆங்கில வகுப்பு என்றாலே அஞ்சி நடுங்கி அந்த அனுபவத்தாலேயே ஆங்கிலம் வேப்பம் எண்ணெய் போல கசந்து போய்விட்டது. இது அனுக்கு மட்டுமல்ல ஊரிலே இருந்த பலருக்குந்தான். பின்னுக்கு இந்த உணர்வு ஏற்படுத்த இருந்த விபரீதங்கள் பின்னடைவுகள் அப்பொழுது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
சண்முகத்துக்கு கொம்பியூட்டரிலே தமிழ்ச் செய்திகள் சினிமா விசயங்கள் பார்க்க விருப்பம். மனைவியின் ஏச்சையும் பொருட்படுத்தாமல் வேலை விடுமுறைப் பணத்தை எடுத்து அந்தக் காசிலே மகனுக்கு எல்லா வசதிகளும் கொண்ட நல்ல கொம்பியூட்டர் ஒன்று வாங்கிக் கொடுத்திருக்கிறான்.
பத்தாம் வகுப்பு படிக்கிற பிள்ளைக்கு இந்தக் கொம்பியூட்டர் இப்ப தேவையில்லை அண்ணே. சாதாரணமான ஒன்று காணும். வீணாக காசை கரியாக்காதையுங்கோ என்று கூட வந்த உதவியாள் தடுத்தும் இல்லை மகன் இதைத்தான் ஆசைப்பட்டுக் கேட்டான் தம்பி. நீர் இதைத்தான் வாங்கும் என்று சொல்லி வாங்கிய அந்தக் கொம்பியூட்டரிலே எத்தனையோ செய்யலாம்.
ஆனால் கிளிப்பிள்ளை போல எப்பவும் தமிழ்நாதத்துக்கு போய் வீரகேசரியும் தினக்குரலும் தினமலரும் வாசித்து திருப்தி அடைய வேண்டிய நிலையில் தான் அவன் இருந்தான். வேறு எதையாவது மகனைக் கேளாமல் தேடிப்பிடித்து பார்க்க ஆசைதான். ஆனால் சொற்களை எழுத்துக் கூட்டிக் கேட்கத் தெரியாது அவனுக்கு.
கடிதத்தைப் படித்துவிட்டு தொலைபேசி எண்களைத் தொட்டு எடுக்கும் மகனின் அருகே குனிந்து என்ன தம்பி சொல்லியிருக்கு? என்று கேட்டான் சண்முகம். பொறுங்கோ என்று கையாலே காட்டிவிட்டு கலோ என்று யாரையோ தொலைபேசியில் அழைத்து படபடவென்று ஆங்கிலத்தில் பேசுவதும் கடித வரிகளைத் திரும்பவும் படித்து கேள்விகள் கேட்பதும் ஓகே ஓகே என்று ஆமோதிப்பதுமாக இருந்த மகனுக்கு முன்பு தானொரு மகனாக நின்றான் சண்முகம்.
அப்பா! நீங்கள் அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக காசு எடுத்து இருக்கிறீர்களாம்;. மேலதிகமாக எடுத்ததை உடனே கட்டட்டாம். இல்லாட்டில் கூடாதாம். நான் வெள்ளிக்கிழமை கட்டுவதாக சொல்லியிருக்கிறேன். வெள்ளிக்கிழமை கட்டிப் போடுங்கோ. கட்டாட்டில் பிறகு ஒரு கடனும் எடுக்க மாட்டியள். சரியோ.
அது தம்பி போன கிழமை அப்பம்மா கொழும்பிலே வந்து டெலிபோன் பண்ணி காசு கேட்டவ. அதுதான் வேறு வழியில்லாமல் அடிச்சு குடுத்தனான். அம்மாக்கு சொல்லிப் போடாதே கத்துவா.
என்னவோ வெள்ளிக்கிழமை கட்டிப்போடுங்கோ.
மகன் மடித்து மேசையில் போட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு திரும்பினான் சண்முகம். இங்கே பிறந்த பிள்ளைகள் இப்படித்தான் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கதைக்குங்கள். இதையே சிற்றம்பல வாத்தியாரிட்டை கொண்டு போனால் முதலில் இரு சண்முகம் என்பார். தெரியாதே காலையிலே இரண்டு தோசையை தந்துவிட்டுதுகள். பித்த உடம்பு. உழுந்து ஒத்துக்கொள்ளேல்லை. நெஞ்சுக்கை நின்றுகொண்டு புரளி பண்ணுறார்.
ஊரிலே என்றால் வேர்க்கொம்பை இடிச்சு சொட்டுத் தேனும் விட்டு குழைச்சு இரண்டுதரம் சாப்பிட எல்லாம் சுகம் வந்திடும். இது ஆரின்ரை வைத்தியம் எண்டு நினைக்கிறாய். அப்பு ஆமை இறைச்சியை சாப்பிட்டுப் போட்டு இப்படித்தான் நெஞ்செரிக்குது என்று சத்தம் போட ஆச்சி இதைத்தான் செய்து குடுக்கும். அப்பு ஆமை எங்கே வாங்கிறது என்று தெரியுமே?
பழைய சின்னக்கடைக்குள்ளே ஒருத்தன் இருந்தவன். பெயரும் எனக்கு அவசரத்துக்கு வருகுதில்லையடாப்பா. அவனை எப்படி அப்புவுக்கு சினேகிதம் தெரியுமே. அது பெரிய கதை. பகிடியைக் கேளன். வாத்தியார் நிறுத்த மாட்டார்.
சண்முகத்துக்கு வெறுத்துப் போய்விடும். வாத்தியார் மனுசி கடைக்கு போகச் சொன்னது. நான் இதாலே வந்துட்டன். ஆள் தேடப்போவுது. என்று எதையாவது அவன் சொன்ன பின்புதான் மனைவியை அழைத்து கனகம் கட்டிலுக்கு பக்கத்திலே என்னுடைய கண்ணாடி இருக்குது. ஒருக்கால் கொண்டு வா. கட்டில்லே இல்லாவிட்டால் அலுமாரிக்கு மேலே பார். என்பார் வாத்தியார். சண்முகம் பொறுமையோடு இருப்பான்.
இந்த வேதனை எல்லாம் இப்போது கிடையாது. வீட்டுக்குள்ளே மகன் இருக்கிறான் என்பதை விட தனது பிரச்சனைகள் எல்லாம் நான்கு சுவர்களை விட்டு வெளியே போய் நான்கு பேருக்கு இனிமேல் தெரியப்போவதில்லை என்ற நிம்மதி ஒன்றே சண்முகத்துக்கு போதுமானதாக இருந்தது. இந்த விசயத்திலே அவன் இந்தளவு தூரம் கடுமையான போக்கை பின்பற்றுவதற்கும் காரணம் இருந்தது.
ஒரு முறை அவனுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து அம்மா டெலிபோன் எடுத்தாள். என்ன தம்பி நீ செய்யுற வேலை. நான் உனக்கு ஒரு பொம்பிளைப்பிள்ளை பிறக்க வேணும் என்று இங்கே கோயில் எல்லாம் விரதம் இருக்கிறன். நாலைஞ்சு வருசத்துக்கு முதலே உன்ரை மனுசிக்கு கருப்பப்; பையை எடுத்துப்போட்டினமாம். ஏன் மோனே உந்தச் சண்டாள வேலை செய்தனியள். பெத்த தாய்க்கு கூட ஏன் ராசா மறைச்சுப் போட்டாய்? அம்மா கேட்டது அவ்வளவு தான்.
அடுத்த டெலிபோனைக் காதிலே வைத்துக்கொண்டு பேசாமல் கேட்டுக்கொண்டு நின்ற அவனின் மனைவி வேணி பொத்தென்று வைத்துவிட்டுப் போய்விட்டாள்.
என்னுடைய தங்கச்சியாட்கள் கனடாவிலே இருக்கினம் அவைக்கு நான் தெரிய விடல்லை. என்னை பெத்த அம்மாவுக்கு நான் சொல்லேல்லை இவ்வளவு நாளும்.! எல்லாரும் கவலைப் படுவினம் என்று! யாழ்ப்பாணத்துக்கு இந்தக்கதை எப்படிப் போனது? அம்மா தங்கச்சி ஆட்கள் அறிஞ்சால் என்ன நினைப்பினம்?
இதென்னப்பா கொலை விசயமே பயப்பட்டு நடுங்க? உடம்பிலே பிரச்சனை. செய்யுங்கோ என்றார் டாக்டர் செய்தாச்சு. அறிஞ்சால் அறிஞ்சு கொண்டு போகட்டும் பேசாமல் இரும்.
இது யாருக்கும் தெரியுறது எனக்கு விருப்பம் இல்லை அவ்வளவு தான்.
இப்ப நானே எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு திரியுறன்? நீரும் நானும் சொல்லாமல் இந்தக் கதை எப்படி வெளியாலே போனது என்றுதான் யோசனையாக கிடக்குது.
உங்களுக்கு இங்கிலீஸ் கதைக்க தெரியாது என்று என்னை வாமனோடை தானே அனுப்பினியள். டாக்டர் சொன்னதெல்லாம் அது கேட்டுக்கொண்டு இருந்தது. இப்ப ஊருக்கு போட்டுவந்தது. அதுதான் சொல்லி இருக்கும்.
ஒருத்தன் நம்பித்தானே ஒரு விசயத்தை சொல்லுறான். கடைசிவரைக்கும் வெளியாலே விடக்கூடாது என்ற பண்பாடு தெரியாத ஜென்மங்கள். நீர் ஒன்றுக்கும் யோசிக்காதையும் வேணி.
அதில்லையப்பா இங்கிலீஸ் தெரியாததாலே எத்தனை பிரச்சனைகள். தங்கச்சி ஆட்களை கூட்டிக்கொண்டு போனாலே எல்லாருக்கும் தெரிஞ்சிடும் என்று நினைச்சேன். கனடாவுக்கு வந்தவுடனே உங்களைக் கேட்டனான். இங்கிலீஸ் படிக்கப் போகட்டோ என்று. நீங்கள் விடவில்லை.
ம்…..
அன்று மனைவி பட்ட வேதனை சண்முகத்தின் மனதில் ஏற்படுத்திய தாக்கத்துக்கு என்னுடைய பிள்ளை வளரட்டும் படித்து பெரியவனாக வரட்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பே மருந்தாக அவனுக்கு அமைந்து விட்டது.
என்னுடைய பிள்ளை வள ரவேணும். தண்ணிபட்ட பாடாய் ஆங்கிலம் பேசவேண்டும். என்னைப் போல பயந்து சாகக்கூடாது. என்று தனது பலவீனங்களை எல்லாம் மகனிடத்திலே பலமாக காண ஆசைப்பட்டு வளர்த்த பயிரின் இன்ப அறுவடைதான் வங்கி ஊழியர்களோடு மகன் பேசிய வார்த்தைகள் என்பது சண்முகத்தின் எண்ணமாக இருந்தது. அதனால் மகன் கடிதத்தை கையில் தராமல் மேசைமீது போட்டது கூட குற்றமாக தெரியவில்லை அவனுக்கு.
இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பிரச்சனை இல்லையப்பா. எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்திலே தானே படிக்குதுகள். தம்பி தமிழ் வகுப்புக்குப் போகத்தான் கள்ளம் படுத்துகிறான். வெருட்டிக் கொண்டுபோய் விடுங்கோ. பிறகு தமிழ் தெரியாத பிள்ளையாய் போய்விடும்.
மனைவி வேணி சிலவேளைகளில் சொல்லுவது கூட அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தி விடும். போன கிழமை கூட சாப்பிடும் போது அப்பா ஸ்ரீ லங்காவிலே இருந்து என்னுடைய வகுப்புக்கு ஒரு ஆள் வந்திருக்கிறார். ரீச்சர் லெக்சர் பண்ணும் போது அவருக்கு ஒன்றும் விளங்காது. ரீச்சர் எழுதினார் என்றால் அப்படியே பிடிச்சிடுவார்.
எனக்கு சிரிப்பு வந்திடும். என்று பகிடியாக மகன் சொன்ன போது மொக்கு! தமிழ் தெரியாத நீ ஸ்ரீ லங்கா பள்ளிக்கூடத்துக்கு போனாலும் அப்படித்தான். அங்கும் ரீச்சர் தழிழிலே எழுதினால் நீயும் வாய்பாக்க்க வேண்டியது தான். யாரையும் அப்படிக் குறைச்சுக் கதைக்காதே சரியோ என்று மகனுக்கு சூடாகச் சொன்ன மனைவியுடன் சண்டை போட்டிருக்கிறான்.
உங்களுடைய பிள்ளை ஆங்கிலத்திலே பெயர் எழுதாத சினிமாப் பட சி .டி. களை கொண்டுவத்து அம்மா இது தயாவோ இது ஓட்டோக்கிறாவோ என்ன படம்? என்று கேட்குதப்பா இவனுக்கு சுத்தமாகவே தமிழ் வாசிக்கத் தெரியாமல் போட்டுதப்பா தமிழ் தெரியாமல் எப்படியப்பா தமிழ்ப் பண்பாடு வரும்? என்று மனைவி கவலைப்பட்டு சொல்வது கூட கண்முகத்துக்கு எரிச்சலைத்தான் உண்டுபண்ணும்.
அன்று ஒலிம்பிக் போட்டிகள் முடியும் நாள். ஏதென்ஸ் நகரத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்த கலை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தன. சண்முகம் மனைவி வேணி மகன் ஜீவன் இருவருடனும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். நடன நிகழ்ச்சிகளுக்கு இடையே சிறு துண்டுச் செய்தியாக நாடுகளும் அவை பெற்ற பதக்க எண்ணிக்கைகளும் காட்டப்பட்டன சீனா அமெரிக்கா றைசியா அவுஸ்ரேலியா பிரான்ஸ் இந்தியா என்று சொல்லிக் கொண்டே போனார்கள்.
சண்முகத்துக்கு அரசியல் ரீதியாக இந்தியாவைப் பிடிப்பதில்லை. எனவே இந்தியா என்ற பதம் தொலைக்காட்சியில் உச்சரிக்கப் பட்டதும் இயலபான ஒரு பொறாமை ஏற்பட்டு விட்டது அவனுக்கு.
மலைக்கு வயிறு நொந்து எலியைப் பெற்று எடுத்துதாம் என்ற கணக்காக இந்தியா பெரிய ஆரவாரத்தோடு வந்து ஒரே ஒரு வெள்ளிப்பதக்கம் மட்டும் எடுத்திருக்குது. என்று தனது மனதில் படிந்திருந்த வெறுப்பை விளையாட்டில் காட்டினான் சண்முகம்.
ஏன் எங்களுக்கும் பன்னிரண்டு மட்டும் தானே கிடைச்சுது அப்பா என்றான் மகன் ஜீவன்.
என்ன தம்பி கதைக்கிறாய்? ஸ்ரீ லங்கா எங்கே ஒலிம்பிக் போட்டிக்கு வந்தது? நீ பன்னிரண்டு பதக்கம் என்கிறாய்? சண்முகம் மகனைப் பார்த்துக் கேட்டான்.
ஐயோ! அப்பா நான் ஸ்ரீ லங்காவை பற்றி சொல்லவில்லை. எங்களுடைய நாடு கனடாவைப் பற்றிக் கதைக்கிறேன். நீங்கள் ஸ்ரீ லங்காவை கொண்டு வாறியள்? சொல்லி விட்டு ஏளனமாக சிரிக்கும் மகனை உற்றுப் பார்த்தான் சண்முகம். யாரோ சவுக்கால் அடித்தது போல இருந்தது.
ஓ! உனது தாய் நாடு இதுதான் என்பதை நான் சுத்தமாக மறந்து போனேன் தம்பி. அப்பாவுக்கும் மகனுக்கும் தாய்நாடு வேறு வேறாகப் போய்விட்டது. உனக்கு நான் தமிழைப் படிப்பித்திருந்தால் தமிழீழ தேசத்தின் துயரங்களையும் எதிர்பார்ப்புகளையும் எடுத்துச் சொல்லி நீ பிறப்பால் அன்னி;யனாக இருந்தாலும் வளர்ப்பால் தமிழனாக இருக்க ஏதாவது செய்திருக்கலாம்.
ஆங்கிலம் எனக்குத் தெரியாமல் நான் சிரமப்படுகிறேன் என்பதற்காக உனக்கு தமிழைத் தெரியவிடாமல் மாபெரும் கொடுமை செய்துவிட்டு இப்போது தவிக்கிறேன். உன்னை எங்களோடு பிணைத்து வைக்க இருந்த ஒரே கயிறு இந்தத் தமிழ்க் கல்வி மட்டும் தான். அதையும் தொலைத்து விட்டு இப்படி கையறு நிலையில் நிற்கின்றேனே. உள்ளம் ஓலமிட்டுக் கதற மனைவியைப் பார்த்தான்.
சண்முகத்துக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. எழுந்து வெளியே வந்து வாசல் படிக்கட்டில் இருந்தான். வானொலியில் ஒரு சிறு பெண் குழந்தை பாரதிதாசன் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருந்தாள்.
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!
பாடல் முடிந்ததும் குழந்தையின் பெற்றோர்கள் இருவருமே டாக்டர்கள் என்று அறிமுகப் படுத்தினார்கள்.
றேடியொவிலே அந்தப் பாட்டைக் கேட்டியளா? என்ன அழகாக பாடிச்சுதப்பா. டாக்டருடைய பிள்ளையாம். கனடாவிலே தான் இருக்கினமாம்! நல்ல கெட்டிக்கார அம்மா அப்பா!
பின்னாலே வந்து நின்ற மனைவி வேணி கேட்டாள்.
சண்முகம் தலைகுனிந்து இருந்தான். படித்தவர்கள் பெரிய பதவியிலே இருப்பவர்கள் ஆங்கில மயமாகவே வாழ்க்கை நடத்துபவர்கள் எல்லாம் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை படிப்பிப்பது கடமை என்று உணர்ந்து நடந்து கொள்கிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயில் பாட்டு பரதம் வீணை என்று பிள்ளைகளைக் கலாச்சார வகுப்புகளுக்கு அழைத்துப்போய் வருகிறார்கள். வாழையடி வாழையாகத் தமிழ்க் கலாச்சாரத்தைப் பேணிக் கொள்கிறார்கள்.
ஆனால் படிப்பு வாசனையே இல்லாத என்போன்றவர்கள் தான் பன்னாடை போல இருந்து கொண்டு நல்லவற்றைத் தவறவிட்டு தமிழ்ச் சமுதாயத்தை கனடாவிலே கெடுத்துக்கொண்டு வருகிறோம். எங்கள் வாழ்க்கையிலும் நாம் சரியானதை செய்யவில்லை. பிள்ளைகளுக்கும் சரியான வழியைக் காட்டவில்லை. எங்களுக்கு படித்தவனிலும் பணக்காரனிலும் பொறாமை மட்டும் தான் உண்டு.
ஏன் அவன் சரியான முறையில் வாழ்க்கையைக் கொண்டு செல்கிறான். எங்களின் பாமரச் சீரழிவுகளால் எங்களைப் பக்கத்திலும் அவன் அடுப்பதில்லை! அதனாலே அவனிடம் பொறாமை. எந்தத் திட்டமிடலும் முயற்சியும் இல்லாமல் அவனுடைய வாழ்வு எமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதிலே தோல்வி என்றால் படித்தவனால் தான் சமுதாயம் கெட்டுப்போகுது என்று குற்றஞ்சாட்டுகிறோம்!
வெளி நாட்டிலே ஒரு போதும் தமிழ் அழியப் போவதில்லை. ஆனால் என் போன்றவர்களின் பிள்ளைகள் அதை படித்து அறியப் போவதுதான் இல்லை. தமிழை விட்டு எங்கள் பிள்ளைகள் தான் தூரப் போய்விடுவார்கள். அதற்கு வழிகாட்டத்தான் என்போன்ற பெற்றார்கள் இருக்கின்றோமே. இனி என்ன எட்டாத பழங்கள் புளிக்கும் என்று சொல்லிக்; கொள்ள வேண்டியது தான் என்ற உணர்வோடு மனைவியை நிமிர்ந்து பார்த்தான் சண்முகம்!
இப்ப றேடியோவிலே தமிழ் பாடினத்துக்காக டாக்டரின்ரை குழந்தைக்கு கனடாவிலே சிலை தானே வைக்கப் போகினம். பேசாமல் இரும்! என்று சொன்ன சண்முகத்தின் விழியோரம் உருண்ட கண்ணீர் கன்னங்களை நனைத்தது.
இரா. சம்பந்தன்