எப்போதும் மகிழ்ச்சி

காலையில் கண் விழிக்கும்போது மலர்ந்த புன்னகையுடன், "இறைவனே உன்னை வணங்குகிறேன்! இன்று முழுவதும் நான் செய்யும் செயல்கள் யாவும் உனக்கே அர்ப்பணம்" என மனதாரச் சொல்லுங்கள்! உங்கள் முகத்தில் எப்போதும் புன்னகையை அணிந்து கொள்ளுங்கள்!

மகாத்மா காந்தி சொன்னார், "உங்கள் முகத்தில் புன்னகை இல்லையென்றால் நீங்கள் முழுவதும் ஆடை அணிந்ததாக ஆகாது, ஆகவே புன்னகை புரியுங்கள்!" என்று. புன்னகையால் நண்பர்களை வெல்லுங்கள்! புன்னகையற்ற முகத்தில் விரைவில் சுருக்கங்கள் விழுகின்றன. உங்கள் புன்னகை இனிமையாக ஒளிரட்டும்!

ஒரு நாளைக்கு மூன்று முறையாவது மனமாரச் சிரிக்க வேண்டும். காலை, மதிய, இரவு உணவுகளுக்குப் பின்பு. இப்படிச் சிரிப்பது சிரமமாக இருந்தால் கண்ணாடி முன் நின்று கொண்டு உங்கள் முகத்தை விதம் விதமாக ‘அழகு காட்டிக்’ கொண்டு பாருங்களேன்!

நல்ல நகைச்சுவை உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள்! உங்களைப் பார்த்தே சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! நாம் எவ்வளவோ சமயங்களில் பிறருடைய பலவீனங்களை, குறைபாடுகளை, வினோத நடவடிக்கைகளைப் பார்த்துக் கேலி செய்கிறோம். மாறாக, நாம் நம்மைப் பார்த்தே நகைக்கக் கற்றுகொள்ள வேண்டும். வாழ்க்கையின் பிரகாசமான பகுதிகளையே எப்போதும் பார்க்க வேண்டும்!

ஒருமுறை அரசன் ஒருவன் தன் பற்கள் அனைத்தும் விழுந்து விட்டது போலக் கனவு கண்டான். அந்தக் கனவுக்கு விளக்கம் அறிய விரும்பினான். கனவுகளுக்குப் பலன் கூறும் ஒருவர் சொன்னார்: "இது மிகவும் துரதிருஷ்டமான கனவு! உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவர் – மகனோ, மனைவியோ – எவரோ ஒருவர் இறந்து விடுவார்" என்று கூறினார். அரசன் துக்கத்தில் ஆழ்ந்தான்.

இன்னொருவர் வந்தார். அவர் சொன்னார்: "அரசே! உங்கள் மனைவி, மக்கள் யாவரையும் விட நீங்கள் அதிக நாட்கள் வாழ்வீர்கள் என்பதுதான் அதன் பலன்" என்றார். அரசன் மகிழ்ச்சி அடைந்தான். சொன்னது ஒரே விஷயம்தான்! சொன்ன விதம்தான் வேறு!

இறைவனே இந்த அகிலம் அனைத்துக்கும் அதிபதி. நம் விதிகள், வினைகள் யாவும் அவன் கண்காணிப்பில்தான் இருக்கின்றன என்கிற அசையாத நம்பிக்கையுடன் இருங்கள்! இந்த நம்பிக்கை, நமக்கு எதையும் எதிர்கொள்ளும் மன திடத்தைத் தருகிறது.

பின்னால் ஒதுங்கி ஒதுங்கிப் போகாதீர்கள்! எப்போதும் வாகனத்தை ஓட்டுபவராகவே இருங்கள்! சிலர் உங்களை அவமதிக்கும்படி நடந்து கொள்ளக்கூடும். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, தளர்ந்து போய் அவர்கள் வாகனத்துக்கு நீங்கள் ஓட்டுநராகி விடாதீர்கள்! நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

துயரம் என்பது நமக்கு என்ன நேர்ந்தது என்பதனால் இல்லை; நமக்குள் என்ன நேர்கிறது என்பதனால்தான்!

நிலாசாரல்

எழுதியவர் : முகநூல் (21-Oct-15, 11:01 pm)
சேர்த்தது : உலகநாதன்
Tanglish : eppothum magizhchi
பார்வை : 163

மேலே