ஊமைக் குரல்

ஊமைக் குரல் - ( தேசப்பிரியன்)
--------------------
பாடசாலை விட்டு வந்த சுஜீவன் அறையின் மேசையில் கிடக்கும் கடிதத்தைப் பார்க்கிறான். இது அண்ணன் கையெழுத்தாச்சே என்று எதிர்பார்ப்பை வளர்த்தபடி அவசர அவசரமாக கடிதத்தை பிரித்துப் படிக்கிறான். படித்தவன் கண்களில் நீர் வடிய மூலையில் சாய்கிறான். சுஜீவன் 12 வயசுச் சிறுவன். போரின் விளைவால் அனாதையாகிவிட்டவன். உறவினரோடு தங்கித்தான் வாழ்கிறான். எதிர்காலம் என்பது அவனைப் பொறுத்தவரை நிச்சயமில்லாததாகி விட்டது.

சசி சுஜீவனின் அண்ணன். அவர்கள் இருவருமே குடும்பத்தில் மிஞ்சி உள்ளனர். தாயும் தகப்பனும் சில ஆண்டுகள் முன்னர், யாழ் குடாவில் கிளாலிக் கடற்பரப்பில் பயணிக்கும் போது, சிங்களக் கடற்படை பயணிகள் படகுமீது நடத்திய தாக்குதலில் படகோடு காணாமல் போனவர்கள் தான். இன்று வரை அவர்களின் கதி என்னவென்று யாருக்கும் தெரியாது. சசி கெட்டிக்காரன். இழப்புக்களைக் கண்டு துவண்டுவிடாது உயர்தரம் படித்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிப் போனான்.

சசியைப் பொறுத்தவரை அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அவனின் சொந்த ஊரான ஒரு விவாசயக் கிராமத்தில் தான். தாயும் தகப்பனும் ஆசிரியர்கள் என்றாலும் விவசாயத்தோடும் ஒன்றிப்போனதாலோ என்னவோ அவர்களுக்கு சொந்த ஊரைவிட்டு வேறிடம் நகரப் பிடிக்கவில்லை. அப்போ அவர்களின் திட்டமெல்லாம் பிள்ளைகள் கஸ்டங்கள், நஸ்டங்கள், உறவுகள் என்று எல்லாம் அறிந்து வளர வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்தக்கதாகவே சசியும் உருவாகி இருந்தான்.பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி கண்டிக்குப் போன போது தான் அவன் முதன்முதலாக புதிய சூழலுக்கும், புதிய மனிதர்களுக்கும், வேற்று மொழிக்கும் என்று புதியவற்றிற்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது.

அன்று பல்கலைக்கழகத்தில் முதல் நாள். வழக்கம் போல சாதாரண உடையோடு எளிமையாக சசி தனது வகுப்பறை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். போகும் வழியெங்கும் இளைஞர்களும் யுவதிகளும் கூடிக்கூடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவன் அவற்றை அவதானித்தப்படி அவர்களைப் பொருட்படுத்தாது தனது முதல் வகுப்பு நோக்கி பல கனவுகளோடு நடந்து கொண்டிருந்தான். அப்போ யாரோ கைதட்டும் ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தான். ஒரு குழு அவனை தங்களிடம் வர அழைத்தது. சைகை மூலம் தனக்கு வகுப்பு என்று சொல்லி விட்டு சசி வகுப்பை நோக்கிச் சென்றான். வகுப்பு முடிந்து வெளி வரும் போது அதே குழாம் அவனை நெருங்கி வந்து " அடேய் கூப்பிட்டோம் எல்லோ ஏன் வராமல் போனாய் " என்று மிரட்டலாக தமிழில் கேட்டனர். சசியும் பதிலுக்கு "எனக்கு வகுப்புக்கு நேரமாச்சு அதுதான் சைகை காட்டிட்டுப் போனன்" என்றான் துணிச்சலை வரவழைத்தப்படி. அதற்கு அவர்கள் "என்ன எதிர்த்தா கதைக்கிறாய்... நாங்கள் உனக்கு 'சீனியேர்ஸ்...' எங்கள் உதவி இல்லாமல் நீ இங்கிருந்து வெளியேற முடியாது" என்று மேலும் மிரட்டினர். அதைக் கேட்ட சசி கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனான். "இப்ப என்ன கேட்கிறீங்கள்" என்று அப்பாவித்தனமாகக் கேட்டான். "உன்னை ஒன்றும் கேட்கவில்லை. பின்னேரம் விடுதிக்கு வா" என்றனர் அவர்கள். "வராமல் விட்டா நடக்கிறதே வேற" என்று போகும் போதும் மிரட்டி விட்டுச் சென்றனர்.

பின்னேரம் போல சசி தயங்கித் தயங்கி அவர்கள் சொன்ன விடுதிக்குச் சென்றான். அங்கு அவனைக் கண்ட அந்தக் கூட்டத்தினர் "வாடா என்ன சுணக்கம்" என்றனர். "சுணக்கம் இல்லை அண்ணா.. சொன்ன நேரத்துக்கு வந்திட்டன்.. ஏன் கூப்பிட்டிங்கள்" என்று அப்பாவித்தனமாய் பதிலுக்கு வினவினான் சசி. "இதோடா ஏன் கூப்பிட்டமாம்...இங்க உனக்கு விருந்து வைக்கப் போறம் அதுதான் கூப்பிட்டம்" என்றனர் அவர்கள் நக்கலாக. அதைக் கேட்ட அவர்களின் பெண் நண்பிகள் வாய்விட்டு பெரிசாக சிரித்தனர். அவர்கள் தங்கள் ஆண் நண்பர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கூச்சலும் போட்டனர். இதையெல்லாம் அவதானித்த சசி இவர்கள் பகிடிவதைக்கு தன்னை பலியாக்கப் போகின்றனர் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு நடக்கிறது நடக்கட்டும் என்று துணிச்சலை வரவழைத்தப்படி, அவர்களை எதிர்கொண்டான். அவனுடைய அப்பாவித்தனத்தைக் கண்டுவிட்ட அந்த மாணவர்களும் மாணவிகளும் அவனை இலகுவில் விடுவதாகவும் இல்லை. ஆரம்பத்தில் பெயர் ஊர் என்று கேள்விகள் கேட்டு ஆரம்பிக்கப்பட்ட அவர்களின் அறிமுகப் பகிடிவதை ஆபாசம் கலந்து அக்கிரமாகத் தொடர்ந்தது. அது எல்லை மீறப் போகிறது என்பதை ஊகித்து அறிந்து கொண்ட சசி " இதுக்கு மேல என்னால் எதுவும் செய்ய ஏலாது.. செய்யுறதைச் செய்யுங்கோ" என்றான் துணிவோடு. "அடேய் நீயும் எங்கட ஊர் தான் நாங்களும் அதே ஊர் தான்... தனியாள் உனக்கே இந்தளவு திமிர் எண்டா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்" என்று அவர்கள் பதிலுக்கு அவனை மிரட்டியதுடன் நெருங்கி வந்து சட்டையை பிடித்து இழுது தள்ளிவிட்டனர்.

தரையில் விசையோடு விழுந்த சசி மூர்ச்சையுற்றான். அதைக் கண்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர். சில மணி நேரத்தின் பின் கண் விழித்த சசி தான் வைத்தியசாலையில் இருப்பதை உணர்ந்தான். ஆனால் அவனால் பழைய நினைவுளை மீட்டிப் பார்க்க முடியவில்லை. தான் ஒரு புதிய உலகில் இருப்பது போல உணரத் தொடங்கினான். தன்னிலை அறியாது தவித்தான். வைத்தியர்கள் வந்து அடிக்கடி பரிசோதித்துவிட்டுச் சென்றனர். இறுதியில் அவன் மனநோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட பரிந்துரைக்கப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் அவன் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. இருந்தாலும் தன் தம்பியை மட்டும் அப்பப்போ சிறிதளவு அவனால் நினைக்க முடிந்தது. அவனுக்காக இயலும் போதெல்லாம் ஓரிரு வரிகள் எழுதுவான். அப்படி இரண்டு வருடங்கள் எழுதிய அந்த வரிகளை தம்பிக்கு அனுப்ப முடிவு செய்தான். தாதிகளின் உதவியுடன் அதை தம்பிக்கு அனுப்பியும் வைத்தான்.

இரண்டு ஆண்டுகளாய் தன்னை விட்டுப் பிரிந்துவிட்ட, தன் ஒரே ஆறுதல், சொந்த அண்ணனின் எழுத்துக்களை, வரிகளை கண்டவிட்ட அந்தப் பிஞ்சு சுஜீவன் அண்ணனை நேரில் காண்பதற்காய் ஏங்கினான். வந்த கடிதம் தாங்கி வந்த பாச வரிகளை மீண்டும் மீண்டும் படித்துப் படித்து கண்ணீரால் அதை பூஜித்தான். அவன் படும் துன்பங்களை, தாங்கும் ஏக்கங்களை அண்ணனிடம் பகிர வழியின்றி மெளனியாக அழுவதை விட அவனுக்கு வேறேதும் செய்யத் தெரியவில்லை. அவன் சின்னவன். அவனின் ஆசைகள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க யார் இருக்கினம். அம்மாவா அப்பாவா யாருமே இல்லை. ஏக்கங்கள் மட்டுமே அவனோடு மிஞ்சி இருக்கிறது. ஏங்கியபடியே இயலாமையோடு வெற்றறையின் மூலைக்குள் கடிதத்தை அணைத்தபடி முடங்கிக் கொண்டான் சுஜீவன்.

அவனைப் பொறுத்தவரை அவனுக்குள் இவ்வளவு துன்பங்களையும் ஏக்கங்களையும் பரிசளித்தவர்கள் பெற்ற தண்டனை என்று ஏதுமில்லை. அதற்காய் அவனுக்கு கிடைத்த பரிகாரங்களோ...சமூகத்தில் அனாதை.. பரிதாபத்துக்குரியவன் என்பவைதான். குற்றம் செய்யாமலே மூலைக்குள் முடங்கிவிட்டது சுஜீவன் மட்டுமல்ல. அவனைப் போன்று எத்தனையோ பிஞ்சுகள். அவர்களின் நியாயங்கள், எதிர்பார்ப்புக்கள், தீர்வுகள் இன்றி ஏக்கங்களோடு வெளிப்படாமலே ஊமைக் குரல்களாய் அடங்கிப் போயிருக்கின்றன. உலகில் யார் இருக்கார் அவர்களுக்காய் நீதி கேட்க ?! ஊமைக் குரல்களாய் அடங்குதல் தான் அவர்கள் விதியோ அல்லது சதியோ ?! நாளை இந்தச் சுஜீவன் தன் விதியை சதியை வெல்லானா ?! எதிர்பார்ப்புகளோடு என் விழிகள் திறக்கின்றன...அப்போ மூலைக்குள் அடங்கியவன் நிச்சயமான தெம்போடு மற்றவர்களின் ஆதரவுக்கு இடங்கொடாது தானே எழுவதைக் கண்டேன்..அண்ணனுக்காய்..தனக்காய்..தன் போன்றோருக்காய்..என்பதாய் உணர்ந்தேன்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (25-Oct-15, 6:57 pm)
Tanglish : oomaik kural
பார்வை : 54

மேலே