தாய் உள்ளம்

தாய் உள்ளம்

இந்த ஆண்டு எப்படியும் சரஸ்வதி பூஜை அன்று கன்னியாகுமரியில் பகவதி அம்மன் வேட்டை உலா வருவதைக் காணவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள் ராஜேசுவரி. அவள் அப்படி ஒன்றும் பெரிய பக்திமான் அல்ல. அவள் பூஜை எடுப்பினை காண வேண்டும் எனச் சொல்லியதில் ஒரு முக்கிய காரணம் இருந்தது. அவள் சின்ன வயதில் இருந்து பார்த்து வந்த யானைகளின் ஊர்வலத்தை மீளவும் காண இத்தனை நாள் அவகாசம் இல்லாமல் போய் விட்டது., பணி ஓய்வு பெற்று மீளவும் கன்னியாகுமரிக்கு வந்து தங்கி விட்டதால்
இவ்வாண்டு எப்படியும் பார்த்து விடுவது என்று காலையில் இருந்தே அவள் பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்தாள்.

பகவதி அம்மன் பொற்குதிரை மீதேறி வேட்டை ஆடச் செல்வாள்., அதற்காக, கன்னியாகுமரி மைய சாலை வழியே போக்குவரத்து நிறுத்தப்படும். யானைகள், ஒயிலாட்டம், ஓமணப் பெண்கள் குடை ஊர்வலம் என வண்ண மயமாக திகழும் அம்மன் பவனி, தங்க நாற்கர சாலை வரை சென்று காரியக்கார அம்மன் கோவிலில் நிற்கும். அம்மன் அங்கு அம்பு குத்திக் கொண்டு மீண்டும் அடுத்த நாள் விடியற்காலையில் சன்னதி திரும்பும் வைபவம் காண ஊரே திரண்டு நிற்கும்.

”சரியான யானைப் பயித்தியம்” என அவளது கணவன் ராஜேசுவரியை செல்லமாக கூப்பிட்டாலும் அவள் செய்யும் எந்த செயலுக்கும் அவர் தடை விதிப்பதே இல்லை. அவளது வீட்டில் வரவேற்பு அறையில் தனியே ஒரு ஷெல்ஃப் அடித்து யானைகள் ஊர்வலம் வருவது போல் அலங்காரம் செய்து வைத்து இருந்தாள். யானையைப் பற்றிய செய்திகள், உண்மைகள் அவளைப் போல் பிற எவர்க்கும் தெரிய வாய்ப்பு இல்லை.

மாலை நான்கு மணி ஆயிற்று. தூரத்தில் எங்கோ செண்டை மேளம் ஒலிக்கக் கேட்டவள்,
”இந்தாங்க, இன்னக்கி காப்பி கீப்பி எல்லாம் வெளியிலே பார்த்துக் கொள்ளலாம். மணி ஆகிறது. சாமி ஊர்வலம் ஆரம்பம் ஆகி விடும்” என்றாள்..

”அடி போடி பயித்தியம்; பள்ளம் தாண்டி அது மேடு ஏறி வருவதற்கே ஐந்தரைக்கு மேல் ஆகிவிடும். நீ என்னவோ நாலு மணிக்கே குதிக்க ஆரம்பிசுட்ட”.
என்ற கணவனை பார்க்கப் பிடிக்காமல் சிறு குழந்தை போல அவள்உதட்டைப் பிதுக்கிக் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு காப்பி வேலைகளை கவனிக்கலானாள்.

அந்த நேரம் பார்த்து வந்த அடுத்த வீட்டுக் குழந்தை,
ஆண்டீ, நீங்களும் வரீங்களா, அம்மன் ஊர்வலம் பார்க்கலாம்”
எனக் கேட்க,
ஆமா, நிச்சயமா” என பதில் கொடுத்தவள்,

“நல்ல நாள் பெரிய நாளுன்னா கூட எங்களுக்கு வேலை ஒழியாது”
என முணுமுணுத்துக்கொண்டே பம்பரமாக சுழல ஆரம்பித்து விட்டாள்..

கண்மூடிக் கண் திறப்பதற்குள், கணவர் கையில் ஒரு தட்டில் பக்கோடாவும், மற்றொரு டம்ளரில் காப்பியும் கொடுத்தவள் அவர் அவற்றை தின்று குடிக்கும் முன்னரே, ஒரு சிவப்பு பனாரஸ் பட்டுப் புடவையில் அந்த அம்மனே நேரில் வந்தது போல் காட்சி அளித்தாள்.

மணி ஆறேகால் ஆகியும் பவனி வந்தபாடில்லை. தூரத்தில் செண்டை மேளம் ஒலிப்பது கேட்டது. இவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. இதோ யானைகள் வந்து விட்டன. ஒன்று இரண்டு மூன்று யானைகள், முகத்தில் தங்க முகபடாம் அணிந்து பழத்தோட்டம் அருகே வந்து நின்று விட்டன. ராஜேசுவரிக்கு இனம் புரியாத மகிழ்ச்சி.

கொண்டு சென்று இருந்த மூன்று குலை வாழைப்பழங்களை யானைகளுக்கு உண்ணக் கொடுத்தாள். அருகில் இருந்த அடுத்த வீட்டு ஐந்து வயது சூரியாகுட்டி
பயத்தில் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்.

“ஆண்டீ, அது ஏன் காதை ஆட்டிக் கொண்டே இருக்கிறது.?

”அது காது மடல் மட்டும் அல்ல. அதற்கு அதிகமான ரத்த நாளங்கள் அங்குதான் இருக்கு.அது இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டி உடல் உஷ்ணத்தை ஒரே சீரா வைத்துக் கொள்ளும்.

நெசமாவா? இது குட்டி யானையா, அம்மா யானையா?

இதுகள் எல்லாமே குட்டிகள் தான். யானைக்கு 12 வயசு ஆனாதான் அது அம்மா ஆகும். அதோட வயித்தில 22 மாதம் குட்டி வளரும். 300 கிலோ சாப்பாடும் 160 லிட்டர் தண்ணியும் குடிக்கும்.

அது தும்பிக்கைல நம்மள அடிக்குமா?

சீச்சீ, தும்பிக்கை அது சாப்பிடும் உணவை தூக்கவும், குடிக்கிற தண்ணிய வாய்க்கு கொண்டு போகவும் தான் பயன்படுத்தும். தும்பிக்கைல பத்தாயிரம் தசைகள் இருக்கும். எலும்பே கிடையாது.

யானைக்கு நாம பேசுறது புரியுமா?

ம்ம் ரொம்ப நல்லா புரியும். ஆம்பிள பொம்பள, இந்த இனத்தவங்க இதெலாம் கூட அதுக்கு தெரியும். நம்ப கை நீட்டிப் பேசினா அதப்பத்தி பேசுறொம்னு உன்னிப்பா கவனிக்கும். ஒரு யானை பிளிறினால் அத எட்டு கிலோ மீட்டருக்கு அப்பாலே கூட இன்னொரு யானையால கேக்க முடியும்.

யானையை பயமுறுத்துறது எப்படி?

யானைக்கு பயமே கிடையாது. ஆனா, தேனீயைப் பாத்து பயப்படும்.

கையில் இருந்த காமெராவில் அனைவரும் கிளிக்கிக் கொண்டு இருக்க, மேளத்திற்கு ஏற்றார்போல் ஒரு முன்னங்காலை முதல் யானை ஒன்று தூக்கி தூக்கி வைத்தது.

இதுக்கு டான்ஸ் ஆட கூட தெரியுமா?

”இல்ல, இல்ல” எனக் கூறியவள், யானையின் கண்களைப் பார்த்தாள். இத்தனைப் பெரிய கூட்டத்தில் தன்னைப் புரிந்து கொள்ள ஒருவரும் இல்லை என்ற ஆதங்கத்தில் அது முன்னங்காலை தூக்கி தூக்கி, மாறு கால் போட்டு நின்றது.

யானைப்பாகனை தன் அருகில் அழைத்த ராஜேசுவரி,
“யானை காலை தூக்கி வைப்பதைப் பார்த்தால் அதற்கு வலி ஏதோ இருக்கிறது போலும்; கொஞ்சம் பாரப்பா” என்றாள்.

இல்லமா, அது ஊர்வலம் துவங்கியதில் இருந்தே இப்படித்தான் நடக்கிறது” எனக் கூறி நகர்ந்தான். மீண்டும் யானையை உற்று நோக்கியவள், காசு வாங்கிகொண்டு ஆசீர் அளிக்க அதனை வற்புறுத்தும் கொடுமையைக் காணச் சகியாமல், தன் கையில் இருந்த நூறு ரூபாய் நோட்டை பாகனிடம் கொடுத்து, ”

“யானையின் பாதத்தை தூக்கிக் காட்டு” எனக் கூறினாள்.

அவள் கூறியதைப் பார்த்த யானை அவளை வைத்த கண் வாங்காமல் நோக்கியது. காலைத்தூக்கிய பாகன் யானையின் கால்களின் ஒரு முள் ஆணியைப் போல் தைத்து இருப்பது கண்டு அதனைப் பிடுங்கி எறிந்தான்.
”நான் சொன்னேன்ல” என அவள் கூறியதை காதில் வாங்காமல் முள் எடுத்த கதையை அடுத்த யானைப் பாகனிடம் அவன் பகிர்ந்திட நகர்ந்த போது, ஒருவரும் சொல்லாமலே அது தன் தும்பிக்கையைத் தூக்கி, ராஜேசுவரியின் தலையில் வைத்து தன் நன்றியைத் தெரிவித்தது. கண்களில் கண்ணீர் விட்டு தன் நன்றியத் தெரிவித்து ராஜெசுவரியின் கண்களையே உற்று நோக்கிக் கொண்டு இருந்தது.ஒரு நற்காரியம் செய்த தெம்பில் அவள் மாராப்பை இழுத்து விட்டுக் கொண்டு மலர்த்தி நின்றாள்.

”பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் ஒரு யானையில் வலி இன்னொரு யானைக்குத் தான் தெரியும்” என கிண்டல் செய்த கணவரை, செல்லமாக அடித்தவள், அங்கு இருந்த ஐஸ்க்ரீம் வண்டியை நோக்கி சூரியாக்குட்டியை அழைத்துச் சென்றாள்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (26-Oct-15, 4:13 pm)
Tanglish : thaay ullam
பார்வை : 140

மேலே