காதலின் கவலை 1

ஒவ்வொரு நொடியும்
உந்தன் புன்னகைகள்
உதிர்ந்து கொண்டே தான்
இருக்கின்றன,

இலையுதிர் கால மரங்கள் போல
இதழ்களிலிருந்து இலைகள் போல
புன்னகைகள்
உதிர்ந்து கொண்டே தான்
இருக்கின்றன

உதிரும் ஒவ்வொரு நொடியும்
யார் காலடிகளிலேனும்
மிதிபட்டுக் கொண்டே இருக்கின்றன
காற்றில் உலர்ந்து
சருகாகும் வரையிலும்
புன்னகைகள்
எதையோ உணர்த்திக்கொண்டே தான்
இருக்கின்றன

ஒரு புன்னகையில் என்ன இருக்கிறது?

கேள்விகளுக்கு அதனிடம் பதிலில்லை
உன்னிடம் எனக்கென்ன பேச்சு என்பதைப்போல

அலட்சியமாக என் கேள்வி மேல்
எச்சமிட்டுச்செல்கின்றன

சில புன்னகைகள் ஏமாற்றுதல்களாக,
சில ஏளனங்களாக
சில மழுப்பல்களாக
சில கர்வங்களாக
சில போலிகளாக
என உதிர்ந்து வீழ்ந்து கொண்டேயிருக்கின்றன,
நாட்களைக்கடத்துகின்றன ...

எந்தப் புன்னகையிலும் உண்மையில்லை
முன்பு எனக்கு தெரிந்த குழந்தைமையில்லை

எனவே அவைகள்
உதிரட்டும்
சருகாகட்டும்
கால்களில் மிதிபடட்டும்....

என்னை விட்டு விலகும் நாள்
தொலைவிலில்லை,
தொலைந்தாலும்
தொல்லையில்லை,

காதல் சிலுவையில்
இதே புன்னகை ஆணிகளால்
அறையப்படும்
இன்னுமொரு ஏசு,

நான் தானே!

எழுதியவர் : செல்வமணி (26-Oct-15, 9:22 pm)
பார்வை : 327

மேலே