காதலின் கவலை 2
அதிகாலைப் பொழுதில்
உன்அழைப்பு,
என் செல்பேசியில் விடிந்தது
சற்று திகைத்தேன்,
இத்தனை காலையில்
இவ்வளவு அகாலத்தில்
என்னவாயிருக்கும்!
அழைப்பை
என் காதுகளுக்குக் கூட அனுமதிக்க பயந்து
அழைப்பின் அலைகளைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்
ஒன்று இரண்டு..... பத்து.. இருபது
என அலைகளுக்குப் பின்னால் அலைகள்
சுழன்று கொண்டிருந்தன
அழைப்பின் கடலில் சிக்கி விடுவேனோ
என்ற பயத்தில்
காதுகளோடு கண்களையும்
மூடிக் கொண்டேன்
அப்போது தான் ஞாபகம் வந்தது,
விடிந்தும் விடியாத கனவொன்றில்
உன்னைப்பெயர் சொல்லி அழைத்தது
அவசரமாக
அலைபேசியைக் கைகளில் எடுத்த போது
உன் அழைப்பு நின்று போயிருந்தது
முதல் முறை
நான் முயற்சிக்கையில்
நீ
தொடர்பு எல்லைக்கு
வெளியே சென்றிருந்தாய்..
மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய
நான் நீயாக இல்லை,
ஏனெனில்
எனக்குத்தெரியும்
உனக்கு தேவை
பிரியா விடை...