மங்கையர்க்கரசி

...............மங்கையர்க்கரசி.............
***********************************************

வரதன் விரல்விட்டு எண்ணிவிடும் டைரக்டர்களில் ஒருவன். அவன் இயக்கிய பல படங்கள் வெள்ளிவிழா கொண்டாட்டம் கண்டுவிட்டன. ஒரு சில படங்களும் கையை கடிக்காதவாறு கல்லா நிரம்பச் செய்தது. அவனது படங்களில் பெண்மையே மேலோங்கி நிற்கும். வசனங்கள் எதார்த்தம் பேசும். பார்க்கும் மனங்கள் சொக்கிப்போகும். ஆபாசம் என்பது துளி கலந்தாலும் விஷம் என்று நினைப்பவன். இந்த காலத்தில் அரைகுறை ஆடை இல்லாமல் குத்துப்பாட்டு இல்லாமல் ஒரு திரைப்படமா? இப்படியும் ஒரு இயக்குனரா? அவர் இயக்கிய படங்களும் வெற்றி பெறுகிறதா என்ற கேள்வி பலருக்கும் வியந்து போவர் ஆனால் உண்மை இதுதான்.

கல்பனா மூன்று குழந்தைகளுக்கு தாய். வரதனுக்கு தூரத்து உறவினள். வரதன் கல்பனாவிற்கு தூரத்து உறவு முறையில் தம்பி என்றாலும் அதிக பழக்கமில்லை. எதோ ஒன்றிரண்டு குடும்ப விழாக்களில் சந்தித்திருக்கிறாள். ஆனால் அவனை சந்திக்கும் முன்னமே அவனது திரைப்படங்களின் தீவிர ரசிகை. ஒரு திருமண விழாவில் ஏற்பட்ட அறிமுகம் மூலம் கைப்பேசி எண்கள் பரஸ்பரம் கைமாறின.

கலபானாவிற்கு குடும்பத்தில் குறைவென்று சொல்வதற்கு எதுவுமில்லை எல்லாமே நிறைவாக. கணவர் மதுரையில் தனியார் கம்பெனி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்தார் கைநிறைய சம்பளத்துடன். பிள்ளைகள் பள்ளியின் இறுதி வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தனர். கல்பனா வாழ்வது கூட்டுக்குடும்பம் அதுவும் கட்டுக் கோப்பானது. அங்கே பாசம் பரம்பரை கௌரவம் இதில் எதற்கும் குறைவில்லை. கல்பனா மிகவும் அழகானவள் என்று சொல்வதை விட அன்பானவள் அமைதியானவள் கூடவே பகுத்தறிவும் மிக்கவள். பலவற்றை அலசி ஆராயும் தன்மை கொண்டவள். இந்த அலசி ஆராய்தலே வரதனுடன் நட்பு கொள்ள செய்தது. அதற்கு காதல் என்று பொருளில்லை வெறும் நட்பு மட்டுமே.

வரதன் அடிக்கடி கல்பனாவுடன் போனில் உரையாடுவான். அவனது திரைப்படக் கதைகள், பாடல்கள், நடிகர் நடிகையர் இப்படி எல்லாவற்றையும் பற்றி விவாதிப்பான். பல நேரங்களில் கல்பனாவின் விவாதங்களே திரைப்படத்தில் தோன்றும். அப்படி முழு மூச்சாக கல்பனாவின் விவாதத்திலும் கதை வசனத்திலும் வெளிவந்த படம் தான் "மங்கையர்க்கரசி" வாழ்க்கை தவறிப்போன ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பது பற்றின ஒருவரிக் கதையை மிகவும் நேர்த்தியாகவும் அனல் கக்கும் விவாதங்களுடனும் இயக்கப்பட்ட படம் . ஆனால் கல்பனா எங்கும் செல்லவில்லை ஒருமுறைகூட வரதனைப் பார்க்கவோ பேசவோ சென்னைக்கு சென்றதில்லை. முழுவதுமாக கைப்பேசி மூலமாக பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு வரதனால் இயக்கப்பட்ட படம் மங்கையர்க்கரசி. வரதன் பல முறை கல்பனாவை சென்னைக்கு அழைத்தும் அவள் செல்லவில்லை. எத்தனையோ முறை அவளுக்காக எடுக்கப்பட்ட விமான டிக்கட்டுகள் வீணாகிப் போயிருக்கின்றன. ஆனாலும் அவள் வரதனை பார்க்கச் செல்லவேண்டும் என்று நினைத்ததில்லை.
இதோ இம்முறை வரதனே வந்துவிட்டான் நேரடியாக, எப்படியும் மங்கையர்க்கரசி திரைப்படத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்கு கல்பனாவையும் குடும்பத்தாரையும் அழைத்துச் செல்லவேண்டுமென்ற கட்டாயத்துடன். கல்பனா எவ்வளவோ மறுத்துப்பார்த்தாள் வரதன் விடுவதாயில்லை. கல்பனாவின் கணவரின் அலுவலகத்தில் ஆடிட்டிங் வேலை நடந்துகொண்டிருந்த நேரம் அவரால் எங்கும் செல்லமுடியாத சூழ்நிலை. கல்பனாவின் மாமியார் மாமனார் வயோதிகர்கள் அவர்களும் மெதுவாக விலகிக் கொண்டனர். வேறுவழியின்று கல்பனாவின் கணவர் கூறினார் "ஏம்மா கல்பனா! வரதன் இவ்வளவு வற்புறுத்தி கூப்பிடுகிறாரே நீ மகளை அழைத்துக்கொண்டு போயிட்டு வாயேன்"

"இல்லங்க அதுவந்து நாங்க எப்பிடி தனியா போறது?"

"அதென்னம்மா வரதன் தம்பி விழாவுக்கு தானே போறே பத்திரமா வந்திடலாம் பயாப்படாம போ, போகும்போது டிரைவரை கூட்டிட்டு நம்ம கார்ல போங்க, வரும்போது ஈசியா இருக்குமில்லையா? என்றார் கல்பனாவின் கணவர்.

சென்னைக்கு வந்து சேர்ந்தாயிற்று. விழா கொண்டாட்டங்கள் கொலகாலமாய் நடந்துகொண்டிருக்கின்றன. திரைப்படத்தின் நாயக நாயகியை கல்பனாவிற்கு அறிமுகப் படுத்தி வைத்தான் வரதன். கல்பனாவும் சகஜமாய் பேசிக்கொண்டாள். அன்று மாலையே எப்படியாவது ஊருக்கு கிளம்பிவிட வேண்டுமென்று மனதிற்குள் உறுதியாக இருந்தாள் கல்பனா. விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அரங்கத்திற்கு அருகிலே தான் கல்பனாவிற்கும் வரதனுக்கும் அறைகள் ஒதுக்கப் பட்டிருந்தது.

எப்படியாவது வரதனிடம் பேசி இன்று மாலைக்குள் ஊருக்கு கிளம்ப அனுமதி வாங்கிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வரதனின் அறையை நோக்கி நடந்தாள் கல்பனா. கல்பனாவைக் கண்ட வரதன் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றான் . திரைப்படத்தைப் பற்றி பல விஷயங்களை விவாதித்தார்கள். ஆனால் வரதன் மட்டும் நொடிக்கொருமுறை ஜன்னலை நோட்டம் விட்டவாறே இருந்தான். அது கல்பனாவிற்கு என்னவோ போலிருந்தது முடிவில் கேட்டே விட்டாள்.

"எதற்கு வரதா நொடிக்கொருமுறை ஜன்னலை எட்டி எட்டி பார்க்கிறீர்கள்?"

"அதுவொன்ருமில்லை கல்பனா, நான் ஒரு இயக்குனர் நீ ஒரு குடும்பப் பொண்ணு , நீ என்னோட அறையில இருக்குறத யாராவது பத்திரிகை காரங்க பாத்து பேப்பர்ல கிசுகிசு எழுதிப் போட்டுட்டான்ன்னா என்ன பண்றது? அதுதான் யாராவது பாக்குறாங்களான்னு பார்க்கிறேன் வேறொன்றுமில்லை" என்றான் வரதன்.

"அதற்கென்ன? நீ யார் என்று உனக்குத்தெரியும் நான் யார் என்று எனக்குத்தெரியும் அப்புறம் எதற்கு ஊர் உலகத்திற்கு அஞ்சணும்? என்றாள் கல்பனா.

"இல்ல கல்பனா வெறும் வாயை மெல்லுற ஊருக்கு நாம எதுக்கு அவல் போட்டுக் குடுக்கணும் அவ்வளவு தான்"

"அப்படி ஒன்னும் ஆகாது வரதா தேவையில்லாம நீயே பிரச்சனையை உண்டு பண்ணாத"

"சரிம்மா ரொம்ப பேசி களைச்சுப் போகாத என்ன சாப்புடுற?

"ஒன்னும் வேண்டாம் வரதா, சாயங்காலம் ஊருக்கு போகலாமுன்னு இருக்கேன் அத சொல்லத்தான் வந்தேன். இப்ப கிளம்புறேன் வரதா"

"ஏய் வெயிட், வெயிட், எங்க பறக்குற? முதன் முறையா என் விழாவுக்கு வந்திருக்கே ரெண்டு நாள் இருந்து சென்னைய சுத்திப் பாத்துட்டு போல்லாமே என்ன அவசரம்? இப்ப கொஞ்சம் இரு வரேன்" என்று தன் அறைக்குள் நுழைந்தான் வரதன். அது ஓட்டல் அறை என்றாலும் ஏறக்குறைய ஒரு வீட்டின் சகல வசதிகளும் இருந்தன. இரண்டுமூன்று படுக்கை அறைகளும் கிச்சன் வரவேற்பறை போன்ற வசதிகளும் கூட இருந்தன.
சற்று நேரத்தில் வரதனே வந்தான் கையில் ஒரு கப் ஆரஞ்ச் ஜூசும் ஒரு கவருமாக.

"முதல்ல இதப்பிடி" என்று கல்பனாவின் கரங்களில் கையில் வைத்திருந்த கவரை திணித்தான்.

"என்ன இது?"

"ஒண்ணுமில்லம்மா, ஒரே ஒரு பிளான்க் செக் அவ்ளோதான்"

"ஏய் எனக்கெதுக்கு?"

"உனக்கு வேண்டாமின்னாலும் தரவேண்டியது என் கடமையில்லையா? திரைக்கதை, வசனம், இயக்கம்னு என் பெயர் போட்டாலும் அதோட மூல கர்த்தா நீதானே, உனக்கு நான் ராயல்டி தரவேண்டாமா? அதுக்குத்தான் இந்த பிளான்க் செக் உனக்கு தேவையானதை பில் பண்ணிக்கோ"

"வேண்டாம் வரதா, எனக்கு இது தேவையே இல்லை"

"வேண்டாமுன்னு சொன்ன நம்ம நட்பு இதோட முடிஞ்சு போயிடும் கல்பனா" என்றான் வரதன்
வேறு வழி தெரியாதவளாக அந்த கவரை தன் கைப்பைக்குள் வைத்தாள் கல்பனா.

"சரிம்மா இவ்ளோ நேரம் பேசிட்டே, இந்த ஜூசையாவது கொஞ்சம் குடியேன்"

"சரி, சரி, நான் குடிக்கிறேன்" ஜூசை பருகி முடித்து வெளியேறினாள்.

"நான் போயிட்டு வரேன் வரதா"

"சரிம்மா போயி ரெஸ்ட் எடுத்துட்டு பங்ஷனுக்கு தயாராயிடு"

"சரி வரதா"

தூங்கி முடித்து சோம்பல் முறித்தாள். எதோ ஒரு உணர்வு அவளை சுற்றி அவளால் என்னவென்று சட்டென்று யூகிக்க முடியவில்லை. எதிரே கண்ணாடியில் அவள் பிம்பம். மேலாடை முழுவதும் களையப்பட்டிருந்தது, உள்ளாடைகள் விலகியிருந்தன. அங்க உறுப்புகளில் என்றுமில்லாத வித்தியாச உணர்வு சட்டென சுய நினைவிற்கு வந்தாள் .... நான்.... நான்..... அவளால் நிலைகொள்ள முடியவில்லை. எப்படி இப்படி? நான் வரதன் அறையிலிருந்து வெளியில் வந்து தூங்கிவிட்டேனே, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தாள் அவள் மூளைக்கு எட்டவேயில்லை, சட்டென பொறி தட்டியது வரதன் அறையிலிருந்து போய்வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு வாசலை கடந்தேன் ஆனால் அதற்கு பின் நடந்த எதுவும் நினைவில்லை. அப்படிஎன்றால் நான் குடித்த ஜூஸ் ? வரதன்? இந்த அறை? இந்த அறை வரதனுடையது சுய நினைவுக்கு வந்தாள். சட்டென்று தன் உடைகளை சரிபடுத்திக்கொண்டாள் தலைமுடியை ஒதுக்கிக் கொண்டாள் , எதுவும் நடக்காதது போல் தன்னை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளிவர முயன்றவளை பெண்குரல் ஒன்று தடுத்து நிறுத்தியது.

மெல்ல குரல் வந்த திசை நோக்கி எட்டிப் பார்த்தாள் அங்கே ஒரு அறையில் அரை குறை ஆடைகளுடன் வரதனுடன் சில பெண்கள் "அடச்சீ காமப் பிசாசே" என்று மனதிற்குள் சபித்துக்கொண்டு விரைவாக அறையை விட்டு வெளியில் வந்தாள் கல்பனா.

தன் அறைக்குள் வந்தவளுக்கு வரதன் கொடுத்த கவர் நினைவிற்கு வந்தது, சட்டென அதை பிரித்தாள் அதற்குள் ஒரு கடிதமும் ஒரு பிளான்க் செக்கும் இருந்தது. கடிதத்தை எடுத்துப் படித்தாள். ".......டியர் கல்பனா உன்னை பலமுறை நான் சென்னைக்கு அழைத்திருக்கிறேன் நீயும் ஏதேதோ காரணம் சொல்லி வராமல் போய்விட்டாய் நானும் எனது தேவைகளை ஜாடையில் உணர்த்தியிருக்கிறேன் ஆனால் அதை நீ உணர்ந்துகொண்டதாய் எனக்கு தோன்றவில்லை இன்று என்னிடம் சிக்கிய உன்னை வெறுமையாய் விடத் தோன்றவில்லை. அப்புறம் இன்னொரு விஷயம் இன்னைக்கு காலையில உன் பொண்ணையும் முடிச்சிட்டேன்.
நாசிக்குழியில் மூச்சு நின்று போனவளாக தன் மகளை நோக்கி ஓடினாள்.

"அம்மாடி இ இ இ இன்னைக்கு காலையில என்ன நடந்துச்சு?"

அவள் தலை குனிதாள்

"அப்படின்னா?"

"ஆமாம்மா"

"இந்த விஷயம் அப்பாவுக்கு"

"சத்தியமா தெரியவேண்டாம்மா, தெரிஞ்சா நெஞ்சு வெடிச்சு செத்து போயிடுவாரும்மா"

"எதுக்கும்மா என்கிட்ட சொல்லலை?"

"அம்மாகிட்ட சொன்னா போற வழில ஆக்சிடென்ட் பண்ணி ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்னே அந்த அங்கிள் சொன்னாரும்மா"

என்ன செய்வதென்று தெரியாமல் தன் மகளை மார்போடு அனைத்துக் கொண்டாள் கல்பனா.

விழா மைதானம் வெளிச்சத்தில் மூழ்கியிருந்தது, எங்கும் நடிகர் நடிகையருமாக கோலாகல கூட்டம். ரசிகர்களின் ஆரவாரம் பத்திரிகை மற்றும் டிவி நிருபர்களின் போட்டோ கேமராக்களும் வீடியோக்களும் நிறைந்திருந்தன. தவறிய பெண்ணின் வாழ்க்கையை வித்தியாசமாய் படம் பிடித்தமைக்காய் வரதனுக்கு அன்று பத்திரிக்கையாளர் சங்கம் மூலமாக விருதும் கேடயமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதுமட்டுமில்லாமல் வழிதவறிய பல பெண்களுக்கு வரதனின் செலவில் திருமணம் நடத்தி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பத்திரிக்கையாளர் சங்கம் வழங்கிய கேடயத்துடன் வரதன் மேடையில் கம்பீரமாக காட்சி தந்தான். போட்டோகிராபர்கள் சுற்றி சுற்றி வரதனை போட்டோ எடுத்தவண்ணம் இருந்தனர். சட்டென கல்பனா மேடையில் ஏறினாள் . இவ்வளவு ஒரு கம்பீர அழகை அந்த மேடையும் அந்த கூட்டமும் இன்று தான் முதன் முதலாய் கண்டிருக்கும். நேர்த்தியாகக் கட்டிய பட்டுப்புடவையும் தழையப் பின்னிய சடையில் மல்லிகையும் ஹைகீல்ஸ் செருப்பும் அணிந்தவளாக மேடையில் அவளைக்கண்டவர் விழிகள் அசையவில்லை. வரதனின் ரத்த நாளங்கள் ஸ்தம்பித்துப் போயின.

கல்பனா மெல்ல மெல்ல வரதனை நோக்கி நடந்தாள். முகத்தில் புன்னகையை மட்டுமே சுமந்தவளாக. வரதனின் கால்கள் பின்னோக்கி நடந்தன. மேடையில் பல பெண்கள் மாலையும் கழுத்துமாக அமர்ந்திருந்தனர் சட்டென கல்பனாவிற்கு நினைவிற்கு வந்தது இந்த பெண்களை எங்கே பார்த்திருக்கேனே "ஓஓ வரதனின் அறையில் காலையில் பார்த்தேன்" அவர்களிடமும் ஒரு மந்திரப் புன்னகையை வீசிவிட்டு தென்றலாய் தவழ்ந்தாள் வரதனை நோக்கி கையை அசைத்தவாறே. ப்லோட்டிங்கில் கட்டிய புடவை அவள் அசைவிற்கு ஏற்ப வளைந்து கொடுத்தது கூட்டத்தினரின் பார்வை மொத்தமும் கல்பனாவையே நோக்கியது.

கல்பனா முன்னே செல்ல செல்ல வரதன் தன் கையில் இருந்த கேடயத்தால் தன் முகத்தை மறைத்தவாறே பின்னோக்கி சென்றுகொண்டிருந்தான் . போட்டோகிராபர்கள் இருவரையும் மாறி மாறி படம் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
"நண்பா, வரதா! உங்களை பாராட்டத்தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன், நீங்கள் பின்னால் பின்னால் போகிறீர்களே முன்னால் வாருங்கள்" என்னாள் கல்பனா
ஒரு அடி கூட முன்னால் எடுத்துவைக்க முடியாமல் நின்றான் வரதன். அவன் முன்பு மெழுகுச் சிலையாய் நின்றாள் புன்னகை மாறாமல் கல்பனா!
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிகு உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ? என்ற சுப்ர மணிய பாரதியாரின் கவிதையை சிரித்துக்கொண்டே அவன் காதுகேட்க கூறிக்கொண்டே அவள் கையில் அவன் கொடுத்த கவரை சுக்குநூறாய் கிழித்து அவன் கையில் திணித்தாள் துவக்கத்தின் கம்பீர புன்னகை கடைசி வரை மாறாமல். கையில் கொடுத்துவிட்டு வெற்றியின் அடையாளமாக தன் வலது கையின் கட்டை விரலை தூக்கிக் காட்டினாள் திரும்பி வந்து அவனை பார்த்து தன் குறும்புத்தனத்தால் ஒரு கண்ணை அடித்துக் காட்டிவிட்டு புன்னகை மாறாமல் மேடையைவிட்டு இறங்கிக் கொண்டிருந்தாள்.
உதடுகள் புன்னகைத்தாலும் மனம் மட்டும் அழுதது தன்னால் தனது மகளின் வாழ்க்கையும் பாழாகிவிட்டதே என்ற ஏக்கத்தில். வரதன் இன்னமும் செத்த பிணமாகத்தான் நின்றான் மேடையில்....

.....இக்கதை யாரையும் புண்படுத்தும் விதத்தில் எழுதப்படவில்லை....

....................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (27-Oct-15, 2:18 am)
சேர்த்தது : சஹானா தாஸ்
பார்வை : 122

மேலே