என்கவுன்ட்டர்

என்கவுன்ட்டர்…
----

இன்ஸ்பெக்டர் ராஜவேலு. “என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’. புழல் சிறைக்கு அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டிருந்தார்.

சிறைத்துறை டிஐஜி கனகராஜ் அவரை வரவேற்று அமர வைத்துப் பேசினார்:

“”ராஜவேலு! அந்த 9-ம் நெம்பர் செல்லில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ் பயங்கர ரவுடி. ஆளும் கட்சியின் வண்ணாரப் பேட்டை வட்டச் செயலர் துரை, அகஸ்தியா தியேட்டர் அருகே தன்னோட ஆட்களோடு வந்துக்கிட்டிருக்கும்போது, அவரை அரிவாளால் வெட்டிப்போட்டு, கூட வந்தவங்களையும் தாக்கு தாக்குன்னு தாக்கியதில் 3 பேர் காலி. அதுல 5 பேர் ஸ்டான்லி ஆஸ்பிட்டலில் அட்மிட். 2 பேர் நிலைமை சீரியஸ். இதுக்குக் காரணமான சுரேஷை “என்கவுன்ட்டரில்’ போட்டுத் தள்ளணும்னு ஆளும் கட்சியின் அதிகார உச்சத்துல இருப்பவர்களிடமிருந்து நெருக்குதல்கள்.

நீதான் “என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆச்சே! இந்த “அசைன்மென்ட்டை’ உனக்கு கொடுக்கறதுல பெருமைப்படறேன்.”

“”சார்.. இந்த “அசைன்மென்ட்டை’ எனக்குக் கொடுக்கறதுல நீங்க பெருமைப்பட்டுக்கலாம். ஆனா இதுல எனக்கு எந்தப் பெருமையும் இல்லை..”

“”என்ன சொல்றீங்க மிஸ்டர் ராஜவேலு?”

“”டூட்டிங்கற பேர்ல உயிர்களைக் கொல்றதுல என்ன சார் பெருமை கிடக்கு?”

“”ராஜவேலு.. மேலதிகாரிகளின் கட்டளையை நிறைவேத்தறது உங்க கடமைங்கறதை ஞாபகம் வச்சுக்கங்க..”

–டிஐஜியின் குரலில் சற்றே கடுமை தெறித்தது.

அதைக் கண்டு கொள்ளாத ராஜவேலு, சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தார். தொப்பியை சரி செய்தவாறே, “”டிஐஜி சார்! நம்ம போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருக்கற சிலராலயும் ஆளுங்கட்சியின் ஆசியோடும்தான் இப்படிப்பட்ட ரவுடிகள் உருவாகிறார்கள். பலி கொடுக்கப்போற ஆட்டை நல்லா கொழு கொழுன்னு வளர்க்கிறது சில பேரு. அதை பலி கொடுக்க மட்டும் என்னை போன்றவர்களை பயன்படுத்திக்கறீங்க.. இந்த “என்கவுன்ட்டரால’ சில பேருக்கு பணமும் பதவியும் கிடைக்கலாம். ஆனா எனக்கு மிஞ்சப் போவது பழியும் பாவமும் தானே?”

“”என்ன ராஜவேலு? போலீஸ் வேலையில் சேர்ந்துட்ட பிறகு பாவம், புண்ணியம் பார்த்தா வேலைக்கு ஆகுமா? மேலிட உத்தரவை நிறைவேத்தறது நமது கடமை. மைண்ட் இட்…”

–டிஐஜி குரலில் இப்போது கோபமும் சேர்ந்துகொண்டது.

“”சார், நான் சொல்றதையும் கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ். இப்போது கொல்லப்பட்ட வட்டச் செயலர் துரையும் ஒரு காலத்துல பேட்டை ரவுடியா இருந்தவர்தானே? அவர் தர்ற மாமூலை வாங்கிக்கிட்டு அவரை சைலண்ட்டா கொழுக்க வைச்சதும் நம்ம போலீஸ் டிபார்ட்மென்ட்தானே? அவரும் காலப்போக்குல அரசியல்வாதியா மாறி கட்சியில் செல்வாக்கை வளர்த்துக்கிட்டாரு.

இப்போது அவரை வெட்டிப்போட்டுட்ட சுரேஷ்.. நிச்சயம் துரையால் பாதிக்கப்பட்டவராத்தான் இருக்கணும். இல்லன்னா பட்டப் பகல்ல.. நடுரோட்டில இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா? முதலில் அந்த சுரேஷை நான் பாக்கணும். அதுக்குப் பிறகுதான் அவன “என்கவுன்ட்டர்ல’ போட்டுத் தள்றதா இல்லையான்னு நான் முடிவு செய்வேன்”.

“”ஓ! அப்படியா? ஆனா ஒண்ணு.. இந்த “என்கவுன்ட்டர’ நீங்க தான் பண்ணணும். சுப்பீரியர் ஆர்டர் இது. இதுக்கு ஒபே பண்ணலைன்னா உங்களுக்கு பிரச்சினை…”.

“”ஓ.கே. சார்.. தேவை ஏற்பட்டால் அதுக்கு முன்னே நானே ரிஸைன் பண்ணிடுவேன்”.

ராஜவேலுவின் உறுதியைப் பார்த்த டிஜஜி சற்றே கோபம் தணிந்தவராக, “”ஓ.கே. அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல சுரேஷை போய் பாத்துட்டு வாங்க,” என்றவர் அங்கே நின்றிருந்த வார்டனைப் பார்த்து “”வார்டன்.. இன்ஸ்பெக்டரை அந்த செல்லுக்கு அழைச்சிக்கிட்டு போய் காட்டு” என்றார்.

இப்போது சுரேஷ் அடைக்கப்பட்ட தனி செல்லின் முன்னே ராஜவேலு.

ஒரு வார தாடி மீசையுடன் சோர்வுடனும் சோர்வை மிஞ்சிய சோகத்துடனும் காணப்பட்டான் சுரேஷ். வயது 28 இருக்கும்.

அவனை தீர்க்கமாக பார்த்தார் ராஜவேலு. வார்டனிடம் “”என்ன இவன் ஒழுங்கா நடந்துக்கறானா? கொடுக்கறத சாப்பிடறானா? என்று கேட்டார்.

“”இல்ல சார்.. இங்க வந்த 2 நாளும் சாப்பிடாம முரண்டு பிடிக்கறான் சார்.”

“”சரி.. இவனுக்கு என்ன வேணும்னு கேட்டு வெளியே இருந்தாவது வாங்கிக் கொடு. அப்படியே ஒரு ரவுண்ட் போய்ட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பார்க்கறேன்,” என்று வார்டனுக்கு உத்தரவு போட்ட ராஜவேலு, சுரேஷைப் பார்த்து “”சுரேஷ்.. நீ முதல்ல சாப்பிடு. அப்புறமா வந்து உன்னை விசாரிக்கறேன்,” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ராஜவேலு.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து ராஜவேலு அங்கே மீண்டும் ஆஜர் ஆனார். உள்ளே ராஜவேலு அருகில் எவர்சில்வர் தட்டில் “லெக் பீஸுடன் கூடிய சிக்கன் பிரியாணி எவர்சில்வர் தட்டில். வேகவைத்த முட்டையும் அதில் இருந்தது.

ஆனால் சுரேஷ் அதைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்பதைப் பார்த்தாலே தெரிந்தது.

“”வார்டன் ஒரு நாற்காலியை கொண்டு வா.”

நாற்காலியில் அமர்ந்த ராஜவேலு, சுரேஷைப் பார்த்து “”அடம்பிடிக்காம சாப்பிடுங்க” என்றார்.

“”சாப்பிடறதும் சாப்பிடாததும் என்னோட சொந்த விஷயம்,” என்றான் சுரேஷ்.

சுரேஷ் குரலில் தொனித்த தைரியத்தைக் கண்டு சற்றே துணுக்குற்றார் ராஜவேலு. “”இதப் பார்.. இங்க நீ உள்ளே வந்துட்ட.. இங்கே வந்ததுக்கப்புறம் உனக்குன்னு சொந்தமா எந்த விஷயமும் நடக்காது. நீ சாகணும்னு நெனச்சாலும் சாக விடமாட்டோம். நல்ல படியாக சொல்றேன். இன்னும் 10 நிமிஷம் டயம் கொடுக்கறேன். சாப்பிடு.. அப்புறம் மத்த விஷயம் பற்றி பேசுவோம்,” என்று சொல்லிவிட்டு ராஜவேலு கண்களை மூடிக்கொண்டு அந்த நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.

10 நிமிஷமும் கழிந்தது. சுரேஷின் கைகள் பிரியாணி தட்டுப்பக்கம் கூட செல்லவில்லை. ஆறிப்போய் விட்டதால் பிரியாணியின் மீது ஈக்கள் தாராளமாக, தைரியமாக உட்கார ஆரம்பித்தன.

அந்த ஈக்களைக் கூட அவன் விரட்டவில்லை. கட்டை எறும்புகளும் வாசம்பிடித்து அங்கே அணி வகுப்பு நடத்த ஆரம்பித்தன. ஓரிரு எறும்புகள் இப்போது அவன் பாதத்தின் மீது ஏற ஆரம்பித்தன. அதைக் கூட அவன் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு எறும்பின் உடம்பு நோகாத வண்ணம் மெல்ல விரல்களால் அதை எடுத்து பிரியாணியின் மீது மேய விட்டான்.

அது மாலை மயங்கும் நேரம். கொசுக்களின் ரீங்காரம் தொடங்கியது. ராஜவேலுவின் முகம், கை என கொசுக்கள் பதம் பார்க்க ஆரம்பித்தன. கையில் சிக்கிய கொசுக்களை “”உச்.. உச்” என அடித்து நசுக்கிக் கொண்டிருந்தார். கொசு கடித்ததால் ஏற்பட்ட எரிச்சலைவிட சுரேஷ் சாப்பிடாமல் சத்தியாகிரகம் பண்ணுவதுதான் அவருக்கு கடுப்பை உண்டாக்கியது. இருந்தாலும் சுரேஷின் செய்கைககள் அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

சுரேஷ் மீது ஏகப்பட்ட கொசுக்கள் “லேண்ட்’ ஆகியிருந்தன. அவன் அரை டிரவுசர் போட்டிருந்ததால் தொடை, கால் என என கொசுக்கள் இஷ்டத்துக்கும் ஆக்கிரமித்திருந்தன. அவன் அந்த கொசுக்களைக்கூட விரட்டாமல் பொறுமை காத்தான். அவை கடித்து வயிறுமுட்ட ரத்தம் குடித்து கிளம்புவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

இப்போது நன்றாக இருள் பரவ ஆரம்பித்துவிட்டதால் ஒரு பெரிய எலி.. சின்ன பெருச்சாளி என்றும் அதை சொல்லலாம். அது மெல்ல “செல்’லுக்குள் நுழைந்தது. சுரேஷை தன் பெரிய கண்களால் அச்சத்துடன் பார்த்தது. அவன் அசையாது உட்கார்ந்திருக்கவே சற்று பயம் தெளிந்து பிரியத்துடன் பிரியாணியை நெருங்கியது. தட்டில் வாய் வைத்து இரண்டு கைகளில் (கால்களில்) எடுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தது.

சுரேஷ் அதை சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருந்தான். ராஜவேலும் இதை பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெரிய கொசு ஒன்று அவர் அணிந்திருந்த முரட்டுத்தனமாக சாக்ஸை (காலுறை) ஊடுருவி காலைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சியது. அவருக்கு எரிச்சல் ஏற்பட்டு “அடச் சே’ என்றவாறே பூட்ஸ் காலை தரையில் உதைத்து எழுந்து நின்றார். திடீரென அப்போது ஏற்பட்ட சப்தத்தில் மிரண்டு போன எலி ஓடி ஒளிந்து மறைந்தது.

சுரேஷின் பார்வை ராஜவேலுவின் மீது வெறுப்புடன் திரும்பியது.

அவரும் சரியான கோபத்திலும் எரிச்சலிலும் இருந்தார். “”ஏய்யா, உனக்கு சாப்பிட வாங்கிக் கொடுத்தா சாப்பிடாம சும்மா உட்காந்திருக்கே.. என்னை ஒரு மயித்துக்கும் மதிக்காம இருக்கியே.. உன் மனசுலே என்னதான் நினைச்சுக்கிட்டிருக்கே?

–ராஜவேலு கோபத்தில் கத்தினார்.

அவர் கண்கள் சிவப்பேறியிருந்தன.

இப்போது சுரேஷ் தாழ்ந்த குரலில் அவரிடம் பேச ஆரம்பித்தான்.

“”சார், நீங்க என் ஒருத்தனுக்கு சோறு வாங்கிக் கொடுத்தீங்க. ஆனா நீங்களே பார்த்தீங்கள்ளே.. என்னோட சாப்பாட்டை ஈக்கள், எறும்புகள், எலின்னு எத்தனை ஜீவன்கள் சாப்பிட்டுச்சு.. அது மட்டுமல்ல கொசுக்களும என் ரத்தத்தை பசியாற குடிக்கட்டும்னு விட்டுட்டேன். நான் ஒருத்தன் சாப்பிடலைன்னா என்னா சார்? இங்க உங்க கண் முன்னாலே எத்தனை ஜீவராசிகள் பசியாறிக்கிட்டதுன்னு பாத்தீங்கள்ளே.. அதைப் பார்த்து திருப்திப்பட்டுக்குங்க சார்..”

சுரேஷின் பேச்சு ராஜவேலுக்கு மிக மிக வித்தியாசமாகப் பட்டது. நேரே டிஜிபி ரூமுக்கு வந்தார்.

“”சார், நான் இந்த “என்கவுன்ட்டர் அசைன்மென்டை’ ஏத்துக்க முடியாது. ஆனா நீங்க என் ராஜிநாமாவை ஏத்துக்குங்க,” என்றார் தீர்மானமாக.

-இயற்கைப் பிரியன்

எழுதியவர் : (27-Oct-15, 11:31 am)
பார்வை : 72

மேலே