கூர்ம அவதாரக் கல்

கூர்ம அவதாரக் கல்
--------
“”திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடையும் போது திருமால் ஆமை வடிவம் எடுத்து கீழே மத்திற்கு பிடிமானமாய் இருந்தார். திருமால் எடுத்த இரண்டாவது அவதாரம் இது. கூர்ம அவதாரம் என்று இதை சொல்வார்கள்…” நான்கு வயது குங்குமேஸ்வரனுக்கு தாடியை தடவியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தார் நாற்பது வயது பாலயோகி.

“”ஆமை புகுந்த வீடு உருப்படாதுன்னு சொல்லுவாங்க. விளையாட லேப் டாப் கேட்கிற அவனுக்கு இப்போ எதுக்கு ஆமை கதையெல்லாம். வந்தமா வாய்க்கு ருசியா இரண்டு நாள் சாப்பிட்டோமான்னு கிளம்பப் பாருங்க. எப்படியாவது இங்கேயே ஒட்டிக்க வழி தேடாதீங்க” வார்த்தைகளில் விஷத்தைக் கொட்டினாள் ஸ்ரீநிதி.

“”ஆபிஸில் இருந்து மனோ வந்ததும் ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பிடறேன். அவன்கிட்ட சொல்லிக்காம போறது நாகரிகம் இல்லை. இனிமே என்னோட தொந்தரவு உனக்கு இருக்காதும்மா”

“”கல்யாண நாளன்று “எங்க மாமா’ன்னு சாமியாரான உங்களை அறிமுகம் செஞ்சபோதே எனக்கு உங்க மேல காரணம் இல்லாம ஒரு வெறுப்பு ஏற்பட்டது. குலதெய்வம் பேருன்னு எங்களோட வாரிசுக்கு குங்குமேஸ்வரன்னு கர்நாடகமான பேரை வச்சீங்க. நீங்க வச்சப் பேருங்கறதாலே அதை மாத்தக் கூடாதுன்னு மனோ அடம் பிடிக்கிறாரு. குடும்பத்திலே உங்க தலையீடு நாளுக்கு நாள் அதிகமாயிட்டிருக்கு”

“”பியுசி-யிலே பாúஸ பண்ண முடியாத சோகத்திலே காவி கட்டி சன்னியாசி ஆயீட்டீங்க. ஆசையை அடக்கி, உணவைச் சுருக்கி இறை தொண்டே கதின்னு இருப்பவர்தான் உண்மையான சாமியாருன்னு எங்க அப்பா சொல்லுவாரு. நல்லது கெட்டதுன்னா தவறாம ஆஜாராகும் நீங்க எந்த வகை சாமியார்? வெள்ளை வேட்டி கட்டிக்கிட்டு வீட்டோட இருங்க. வீட்டு வேலைக்காவது உபயோகமாயிருக்கும்”

மனோ வரும்வரை கூட காத்திருக்காது ஸ்ரீநிதியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார் பாலயோகி. தாடி மாமா என்று பின்னால் சென்ற குங்குமேஸ்வரனை முதுகில் அறைந்து உள்ளே தள்ளி கதவை சாத்தினாள் ஸ்ரீநிதி.

அம்மன்பாளையத்தில் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்த ஆசிரம குடிசைக் குடில். சாணத்தால் மெழுகப்பட்ட மண் தரையில் தாடியும் நீண்ட தலைமுடியுமாக இளம் வயது தாகூர் தோற்றத்தில் அமர்ந்திருந்தார் பாலயோகி. உட்கார்ந்த நிலையிலும் அவரது ஆறடி உயரம் நன்கு தெரிந்தது.

எதிரே தொழிலதிபர் நாகலிங்கம் அமர்ந்திருந்தார்.

“”சாமி உங்களைப் பார்க்க சென்னையிலிருந்து மனோ என்பவர் வந்திருக்கிறார்” சிஷ்யர் ஒருவர் உள்ளே வந்து பவ்யமாக வாயைக் கையால் பொத்தி சொன்னார். ஒரு நிமிடம் யோசித்தார் பாலயோகி.

“”பார்வையாளர் குடிலில் அமரச் சொல்லுங்க. வேற யாராவது அங்க காத்திருக்காங்களா?”

“”ஆசிரமத்துக்கு அடிக்கடி வந்துட்டு போற குழுமூர் ராமநாத அய்யர் வந்திருக்கிறார்”

“”அப்படியா, அவருக்கு அடுத்து மனோவை அனுப்புங்க”

பார்வையாளர் குடிலில் மனோ காத்திருந்தான். பாலயோகி தனது குடிலில் உரையாடுவது அவனுக்கு நன்கு கேட்டது.

“”சாமியாரா ஆயிட்டா தேவலாம்னு தோணுது. எவ்வளவு கிடைச்சாலும் இன்னும் வேணும் என்கிற பேராசையிலிருந்து மீளமுடியலை சாமி. எம்.பி.யாகணும், மேலிடத்தைப் பிடிச்சு எப்படியாவது இந்த முறை அமைச்சராகிடணும்னு தேர்தல்லே நின்னேன். லட்சக்கணக்கில் பணத்தை தண்ணியா செலவழிச்சும் ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலே அநியாயமா தோத்துப் போயிட்டேன்” ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் தொழிலதிபர்.

“”ஜெயிச்சு இருந்தா நீங்க இங்க வந்தே இருக்கமாட்டீங்க. உங்க கிட்ட ஆயிரம் குறைகள் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு ஏழை மாணவனை தேர்வு செய்து அவன் மேற்படிப்பு செலவை ஏத்துக்கிறவர் என்பதால்தான் உங்களைச் சந்திக்கவே ஒப்புக் கொள்கிறேன். சம்சார மனதோட சன்னியாசியா வாழ்வது பெரும் துன்பமாகிவிடும். சன்னியாசி மனதோடு சம்சாரியா வாழ்ந்து பாருங்க. வாழ்க்கை ஆனந்தமாயிருக்கும்”- விடை கொடுத்தார்.

குள்ளமான மெலிந்த உருவம். காதில் சிகப்பு கடுக்கன். மூக்குப் பொடியை உறிஞ்சியவாறு குடிலுக்குள் பிரவேசித்தார் ராமநாத அய்யர்.

“”பொடி போடற பழக்கத்தை நீங்க விட்டாதான் அடுத்து முறை ஆசிரமத்திலே உங்களுக்கு அனுமதி”

“”குழுமூர் ஓடைப் பக்கம் கிணறு தோண்டும் போது இந்த கற்கள் கிடைத்தன”- ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வெளிர் சந்தனமும், பழுப்பும் கலந்த பளபளப்பான சிறு கற்களை பாலயோகியிடம் அளித்தார் அய்யர்.

ஒவ்வொரு கல்லின் மத்தியிலும் குட்டி வட்டம். அதைச் சுற்றிலும் ராமர் பாண மல்லிகைப் பூவின் சிறிய இதழ்களைப் போன்ற ஐந்து இதழ்கள். அந்த இதழ்கள் மங்கலான கருநிறத்தில் அடுத்தடுத்த புள்ளிகளால் அமைந்திருந்தது. சிறிது நேரம் அதை உருட்டிப் பார்த்து ஆய்வு செய்தார் பாலயோகி.

“”உங்க ஊரிலே திருமாலின் கூர்ம அவதாரம் நிகழ்ந்தது என்ற செவிவழிச் செய்தி உள்ளது. இந்த கல் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை வழிபடுகிறவருக்கு அளவிடமுடியாத செல்வம், சந்தோஷம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டத்தை தூண்டும். தீய சக்திகளிடமிருந்து காக்கும் பாதுகாப்பு கவசமாகவும் இருக்கும். வீட்டு பூஜை அறையிலே வச்சு தினமும் பூஜை பண்ணுங்க. பல தலைமுறை நல்லா இருப்பீங்க”

“”அடையாளமா ஆசிரமத்திலே இருக்கட்டும்”- இரண்டு கற்களை அங்கே வைத்து உத்தரவு வாங்கிக் கொண்டார் ராமநாத அய்யர்.

“”வா மனோ. ஸ்ரீநிதி, குங்குமேஸ்வரன் எல்லாம் எப்படி இருக்காங்க?”

“”திரும்ப எங்களைப் பார்க்க வரவேயில்லையே. ஸ்ரீநிதியை நீங்க மன்னிக்கவேயில்லையா?. “ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் ஆசிரமம்’ என்ற பத்திரிகைச் செய்தியைப் பார்த்துவிட்டுதான் நீங்க இருக்கிற இடத்தை 5 வருஷம் கழிச்சு ஒருவழியா கண்டுபிடிக்க முடிஞ்சது.”

“”ஆங்கிலமே அறவே ஏறாத என்னை முறையான பயிற்சி கொடுத்து பத்தாம் வகுப்பிலே 90 மார்க் எடுக்க வச்சீங்க. வளர் இளம் பருவத்தில் என் கவனம் படிப்பில் மட்டுமே இருக்குமாறு அறிவுறுத்தி பிஞ்சில் பழுக்காது காப்பாத்தீனிங்க. விரும்பின படிப்பை அப்பாவிடம் போராடி என்னை சேர்க்க வச்சீங்க. குருதட்சணை என்னன்னு கேட்டபோது “நான் செத்தா நீதான் கொள்ளி போடணும்’ என்று சத்தியம் வாங்கினீங்க.”

“நீதான் அதை நிஜமாவே செய்யப்போறே’- மனதில் நினைத்ததை பகிரங்கமாக்காது புன்முறுவல் செய்தார் பாலயோகி.

“”சந்தையிலே வாழைக்காய் தாருக்கு நெம்பர் போடற வேலை, ரத்தப் பரிசோதனைக் கூடத்திலே ஆபிஸ் பாய் வேலைன்னு எங்க அப்பா உங்களை அனுப்பினதை நினைச்சு கடைசிக் காலத்திலே ரொம்பவே வருத்தப்பட்டாரு”

“”நல்லா படிச்சு பெரிய வேலையிலே நான் சேரணும்னு என்னோட மாமாவான உங்க அப்பா ஆசைப்பட்டாரு. ஆனா என்னாலே முடியலை. அதனாலே அவருக்கு கோபம். யார் பேரிலும் எனக்கு கொஞ்சமும் வருத்தமில்லை. ஆசையை விடாத சாமியார்னு என்னை ஸ்ரீநிதி சொன்னதில் தப்பில்லே. நான் அப்படித்தான் அப்போது இருந்தேன். ஆசையை துறக்க இன்னமும் முயற்சிதான் பண்ணிக்கிட்டிருக்கேன்”

குழைய வேகவைத்த மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை அழகாக கத்தரிக்கப்பட்ட பாக்கு மட்டையில் வைத்து இருவர் பக்கத்திலும் வைத்தார் ஆசிரமப் பணியாள்.

“”மடிப்பாக்கத்திலே சொந்தவீடு கட்டிகிட்டு இருக்கேன். அடுத்த மாதம் கிரகப் பிரவேசம். நீங்க கட்டாயம் வரணும்- கிரகப் பிரவேச பத்திரிகையை தந்தான் மனோ. பாலயோகி அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து வழியனுப்பினார்.

சொந்த வீட்டில் மனோ குடும்பம் குடியேறி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. குளித்து விட்டு தலையை துண்டால் துவட்டியபடி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான் மனோ.

தொலைபேசி சப்தம் கேட்டுதே யாரு?

“”அம்மன்பாளையம் ஆசிரமத்திலே பாலயோகி காலை 6 மணிக்கு இறந்துவிட்டாராம்” அப்பாகிட்ட சொல்லிடாதே என்று ஸ்ரீநிதி எச்சரித்தும் தகவலை தெரிவித்துவிட்டான் குங்குமேஸ்வரன்.

ஒருநிமிடம் செய்வதறியாது திணறிய மனோ, வேட்டியை இடுப்பில் அரைகுறையாகச் சுற்றிக் கொண்டு அலுவலகத்துக்கு ஃபோன் செய்து இரண்டு நாள் விடுப்பு சொன்னான்.

“”ஐ.டி. கம்பெனியிலே நாம இரண்டு பேரும் கைநிறையச் சம்பாதிக்கிறோம்னு யார் கண்ணு பட்டுதோ. ஆள்குறைப்பிலே எனக்கு வேலை போயாச்சு. உங்க சம்பளத்திலேயும் 30 சதவீத வெட்டு விழுந்துவிட்டது. இருக்கிற வேலையை ஒழுங்கா காப்பாதிக்கப் பாருங்க”

“”சாமியார் மாமா, “எனக்கு நீதான் கொள்ளி போடணும்னு’ எப்பவோ சொன்னதை வேதவாக்காக நினைச்சுக்கிட்டு நீங்க இப்ப கிளம்பறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை. நீங்க போய் கொள்ளி போடாவிட்டால் அவர் உடம்பு வேகாதா?”

மனைவி சொல்வதைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தால் புறப்பட முடியாது என்பது மனோவுக்கு தெரியும். எனவே மாற்றுத் துணிகளை அவனே எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினான்.

“”நாளை உனக்கு 10-வது ரிசல்ட் வருதுன்னு அப்பாகிட்ட சொல்லுடா. அவருக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காது” காபியை கணவனிடம் நீட்டியவாறு மகனிடம் சொன்னாள் ஸ்ரீநிதி.

“”நீ எல்லா பாடத்திலேயும் நல்ல மார்க் வாங்குவே குங்கு. இன்னிக்கு ராத்திரி பூரா உங்க அம்மா தானும் தூங்கமாட்டாள். உன்னையும் தூங்கவிடமாட்டாள். நாளைக்கு நெட்டிலே உன்னோட ரிசல்ட்டை பார்க்கிற வரைக்கும் அவளுக்கு இருப்புக் கொள்ளாது. அவளுக்கு நீ இன்னிக்கே படிச்சு முடிச்சு நாளைக்கே ஃபாரின் போயி லட்சம் லட்சமா சம்பாதிக்கணும்”

“”குங்கு, குரங்குன்னு என்ன பேரோ. முதல் வேலையா பேரை மாத்தி கெஜட்டிலே வெளியிட ஏற்பாடு செய்யணும். நாளைக்கே அந்த வேலையைச் செய்யறேன்” சப்தம் வெளியே வராது முணுமுணுத்தாள் ஸ்ரீநிதி.

போகிற நேரத்தில் எதையாவது சொல்லி மனைவியிடம் அர்ச்சனை வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று மகனின் காதில் “நாளைக்கு இரவு சென்னை திரும்பிடுவேன்’ என்று சொல்லிக் கொண்டு கிளம்பினான் மனோ.

மாரடைப்பில் திடீரென காலமான மாமாவுக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்துவிட்டு அவரது பழைய நினைவுகளிலிருந்து மீளாதவனாக ஆசிரமத்திலிருந்து புறப்பட்டான் மனோ. திடீர் கோடை மழை பெய்ததில் வசிஷ்ட நதியில் வெள்ளம் பிரவாகமாகக் ஓடிக்கொண்டிருந்தது.

“யோகி இதை உங்களிடம் தரச் சொல்லியிருந்தார்’ கூர்ம அவதாரக் கல்லை மனோவிடம் தந்தார் ஆசிரமப் பொறுப்பாளர். பாலயோகியை முன்பு சந்திக்க வந்தபோது அந்த அபூர்வக் கல்லை பற்றி அவர் கூறியது மனோ நினைவில் வந்தது. ஆசிரமம் அருகே டவுன் பஸ் பிடித்து ஆத்தூர் வந்து சென்னை பஸ்ஸில் ஏறி அமர்ந்தான்.


“”நம்ப பையன் மாநிலத்திலே இரண்டாவது இடத்திலே பாஸ் பண்ணியிருக்கான். போன இடத்திலேருந்து நீங்க ஒரு ஃபோன் போட்டு அவன்கிட்ட பேசியிருக்கலாம். அவனை எழுப்பட்டுமா?” நள்ளிரவு வீட்டில் மனோ காலடி எடுத்து வைத்த அடுத்த நொடி ஸ்ரீநிதி கேட்டாள்.

“”இப்போ அவனை தொந்தரவு பண்ணாதே. காலையிலே பேசிக்கலாம். இதை பூஜை அறையிலே பத்திரமா வையி”

“”இது என்ன கோலப்பொடி கல்லாட்டம் இருக்கு. இதுதான் உங்க சாமியார் மாமா உங்களுக்கு தந்த ஐஸ்வர்யமா?”

“”இருக்கிறவரைக்கும் அந்த மனுஷனை சபிச்சது போதாதா. முக்தி அடைந்தவரை இன்னும் எதுக்கு வீணா வம்புக்கு இழுக்கறே”

“”சாமியார் மாமாவை திட்டினா மனோவுக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துவிடுமே”-பழிப்புக் காட்டினாள் ஸ்ரீநிதி.

அலுவலகத்தில் இருந்து வந்ததும் வராததுமாக மனோவின் கழுத்தை மாலையாகக் கட்டிக் கொண்டாள் ஸ்ரீநிதி.

“”என்ன ஆச்சு உனக்கு. குங்கு எங்கே?”

“”நம்ம இரண்டு பேருக்குமே ஆஸ்திரேலியாவிலே பெரிய ஐ.டி. நிறுவனத்திலே வேலை கிடைச்சிருக்கு. லட்ச ரூபாயுக்கும் மேலே சம்பளம். நல்ல ஊரு. அங்கேயே செட்டிலாகப் பார்க்கணும். உங்க கம்பெனியிலே நாளைக்கே நோட்டீஸ் கொடுத்துடுங்க”

“”அப்புறம் ஒரு விஷயம். உங்க சாமியார் மாமா தந்தாருன்னு ஒரு கல்லை தந்தீங்களா. அது நம்ம வீட்டுக்கு வந்த நேரம்தான் இந்த அதிர்ஷ்டமோ? நாளையிலே இருந்து அதுக்கு பூஜை செய்யலாம்னு இருக்கேன்”

“”கூர்ம அவதாரக் கல் அதிர்ஷடம் தரும் கல்லா இல்லையா என்ற ஆய்வில் ஈடுபட நான் விரும்பலை. ஒருவழியா உன்னோட வாயாலே மாமாவுக்கு ஒரு பாராட்டு கெடச்சது சந்தோஷமாயிருக்கு. அவரோட ஆசியிலேதான் நமக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வந்ததுன்னு நம்பறேன்.

“”தாடி மாமான்னு நான் கத்தினதும் அம்மா என்னை அடித்து கதவைச் சாத்தியதும் மனசிலே அப்படியே இருக்கு. அவரை என்னாலே மீண்டும் பார்க்கவே முடியாது போய்விட்டது. பாலயோகி இருந்த ஆசிரமத்துக்கு என்னை ஒரு முறை கூட்டிக்கிட்டு போரீங்களா”" மனோவிடம் கோரிக்கை விடுத்தான் குங்குமேஸ்வரன். அவன் கைகளில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் இருந்தது.

வாணிஸ்ரீ சிவகுமார் -

எழுதியவர் : (27-Oct-15, 12:42 pm)
பார்வை : 65

மேலே