மழையில் கரைந்தே போகிறேன்

வானக் கடலில் மேகம் குளித்து
கூந்தல் உலர்த்தும் துளிகளெல்லாம்
மழையாய் பொழியுதோ

மோகம் கொண்ட மேகங்கள்
தேகம் இரண்டும் கூடும் வேளை
கொட்டும் வியர்வைத் துளிகளெலாம்
மழையாய் பொழியுதோ

தாகம் கொண்ட தரணியெங்கும்
தானமாக மழையை விதைத்து
மேக வள்ளல் போகுதோ

பச்சைக் குடையாய் மரங்களெல்லாம்
ஒற்றைக் காலில் தவமும் இருந்து
கொட்டும் மழையில் நனையுதோ

மண்ணோடு காதல் கொண்டுதான்
விண்ணை விட்டு வருகிறாய்

மழையாக முத்தமிட்டுதான் மண்ணின் மடியில் குளிர்கிறாய்

அருவியாக விழுகிறாய்
அலைகளாக எழுகிறாய்
விழுவெதலாம் எழுந்திடதானோ உன்னில் பாடம் கற்கிறேன்
மழையே உன்னில் நானும் நனைந்து
மழலையாகிப் போகிறேன்

மண்ணில் படிந்த கறைகளை
மதியாய் கழுவிப் போகிறாய்
மனிதரில் பேதம் பார்க்காமல்
துளியாய் தழுவிக் கொள்கிறாய்

கடலோடு காதல் கொண்டுதான்
கச்சைக் கட்டி விழுகிறாய்
காலை முதல் மாலை வரை
அந்த கதிரவன் தாகம் தீர்க்கிறாய்

தாள்கள் நூறு கிழித்துதான்
நான் கப்பல் நூறு செய்கிறேன்
உன்னில் கப்பல் விட்டுதான்
உலக வர்த்தகம் செய்கிறேன்

மழையின் துளியை மையாய்க் கொண்டு
கவிதை வரையப் பார்க்கிறேன்
மழையே என்னைத் தீண்டும் வேளை
நான் மழையில் கரைந்தே போகிறேன்

மழையே என்னைத் தீண்டும் வேளை
நான் மழையில் கரைந்தே போகிறேன்

எழுதியவர் : மணி அமரன் (28-Oct-15, 8:36 pm)
பார்வை : 117

மேலே