இரண்டு “ரி’களும் சுப்பண்ணாவும்

இரண்டு “ரி’களும் சுப்பண்ணாவும்
------------------

அண்ணா என்றால் குடும்பத்தில் அத்தனைப் பேருக்கும் டெரர் – எங்கள் குடும்பத்து அண்ணாவுக்குச் சுப்பிரமணியன் என்ற அழகான பெயர். நாங்கள் சுருக்கமாகச் “சுப்பண்ணா’ என்போம்.

சுண்டைக்காயில் வரும் “சு’ போல அண்ணாவின் பெயரிலுள்ள முதலெழுத்தை உச்சரிக்க வேண்டும். அடுத்து வரும் “ப்,ப’ இரண்டு எழுத்துக்களையும் “அப்பம்’ என்ற வார்த்தையில் வரும் “ப்ப’ போல உச்சரித்து விடக்கூடாது. வடமொழி எழுத்துக்களில் மூன்றாவது “ப’ போல அதற்கு ஒரு கம்பீரம் தரவேண்டும். (கம்பீரத்தில் வரும் “பீ’யில் உள்ள வெண்கல சத்தம் தந்து) “சுப்பண்ணா’ என்று உச்சரிக்க வேண்டும்.

ஊரில் “ச்சுப்பண்ணா’, “ஸுப்பன்னா’ என்று தங்கள் இஷ்டத்துக்கு அவர் பெயரைக் குறிப்பிடுவார்கள்.

சுப்பண்ணா சுபாவத்தில் ரொம்ப ரொம்பக் கோபக்காரர். சிறந்த நிர்வாகி என்பதை குடும்பத்தில் யாரும் மறுக்கமாட்டார்கள்.
அப்பாவுக்குச் சின்ன வயசிலேயே வயோதிகம் வந்துவிட்டது. அந்தக் காலத்திலெல்லாம் ஐம்பது வயதைத் தாண்டினாலே “தள்ளலை’ “படுத்த படுக்கை’ என்பதெல்லாம் சகஜம்.

என் அப்பா சர்க்கரை வியாதிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். சுப்பண்ணா இரண்டாவது மகன். ஆனால் தலைமகன் அந்தஸ்து அவருக்குத்தான்.

அப்பா நடத்தி வந்த சிறு பள்ளிக்கூடத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன், மெட்ரிகுலேஷனோடு தன் படிப்பை முடித்துக்கொண்டு இரண்டு ஆண்டு ஆசிரியப் பயிற்சி பெற்று ஸெகண்டரி கிரேட் ஆசிரியராகி அப்பாவின் பள்ளிக்கூடத்தை நிர்வாகம் செய்து வந்தார்.

அப்பா சர்க்கரை நோய் நீங்க ஆகாரத்தில் பாகற்காய் சேர்த்துக் கொள்வார். சாதாப் பாகற்காய் அல்ல. பழு பாகற்காய் என்ற சிறிய உருண்டை ரகம்.

எங்கள் நிலத்தில் அப்பாவின் பாகற்காய்க்காக ஒரு வரப்பே சுப்பண்ணா ஒதுக்கிவிட்டார்.

தினமும் விடிகாலை சைக்கிளில் நிலத்துக்குப் புறப்பட்டுப் போய் பாகற்காய்களை சிறு சிறு இளசாகப் பார்த்துத் தாமே பறித்து வருவார். தோட்டக்கார மொட்டையனை நம்பமாட்டார்.

படுத்திருக்கும் அப்பாவுக்கு சுப்பண்ணாதான் தளபதி. “”தங்கைக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிடு. எதை வித்தாலும் தென்னந் தோப்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் வித்துடாதே. அது காமதேனு. கற்பக விருட்சம்.”
தனது 56வது வயதில் ஒரு குறிப்பிட்ட தினம் அப்பா காலமாகிவிட்டார். முன்தினம் சுப்பண்ணா தோட்டத்தில் பறித்து வந்த பிஞ்சுப் பழு பாகற்காய்கள் கூடையிலேயே பத்து நாள் கிடந்து பழுத்து அழுகி வீணாயின. முதலில் சுவரைக் கவனிப்பார்களா. சித்திரத்தைக் கவனிப்பார்களா?
அப்படித்தானாகட்டும் அவை என்ன அமிர்த சஞ்சீவிகளா? அப்பா எத்தனையோ வருஷம் சாப்பிட்டார். அவற்றால் அவரைக் காப்பாற்ற முடியவில்லையே.
அப்பா பள்ளி நிறுவனராக, ஆசிரியராக மட்டுமில்லாமல் ஊரில் குடியானவர்களின் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் பெரிய மனிதராகவும் மதிக்கப்பட்டார்.
நியாயம் பேசறது என்றால் சட்டி ராந்தலை ரெடி செய்வது சுப்பண்ணாதான். அந்த சட்டி ராந்தல் முழுசாக இரண்டு பாட்டில் சீமெண்ணெய் பிடிக்கும்.
வஞ்சனையில்லாமல் சாப்பிடும் ஆசாரமான பிராம்மணார்த்த உத்தமர் போல திண்ணென்று அது நியாயாதிபதி முன் (அப்பாவின் முன்) மேஜை மீது வீற்றிருப்பதே ஒரு கம்பீரம். சட்டி ராந்தலின் கண்ணாடியை விபூதி போட்டு சுப்பண்ணா நெகு நெகுவென பளீர் என்று துடைத்து வைத்திருப்பார்.
திரியெல்லாம் கரெக்டாக கட் செய்து சுடர் ஏறு மாறாக எரியாமல் கச்சிதமாக ஒளிவிடும்படி செய்திருப்பார்.
பக்கு பக்கென்று திடீரென்று அடித்துக் கொள்ளுவது, கோணமாணலாக எரிவது அது இதெல்லாம் சுப்பண்ணா துடைத்த சட்டி ராந்தலுக்கு அறவே கிடையாது.
விடிய விடிய சட்டி ராந்தலின் வெளிச்சத்தில்தான் பள்ளிக்கூடத்தில் அப்பாவின் நியாய சபை நடக்கும்.
பகலில் பசங்கள் அமர்ந்திருந்த குட்டி பெஞ்சுகளில் உயர உயரமான குடியான மக்கள் அசெளகரியமாகவும், செளகரியமாகவும் அமர்ந்திருப்பார்கள். சிதுக் சிதுக்கென்று வெற்றிலை புகையிலைச் சாறைத் துப்பிவிட்டு வருவதற்கு எழுந்திருந்து போவார்கள். திரும்பும்போது பெஞ்சை விடத் தரையே தாராளம் என்று கீழே உட்கார்ந்துவிடுவார்கள்.
வந்தவர்களுக்குக் குடிதண்ணீர் சப்ளை சுப்பண்ணாதான்.
சிலசமயம் இரவு இரண்டு மணியாகிவிடும் அப்பா நியாயத்தை முடிக்க. அதுவரை சுப்பண்ணாவும் அப்பா அருகிலேயே இருப்பார். ராத்திரி பதினொரு மணிக்கு ஃபிளாஸ்கிலிருந்து மஞ்சள் தூளும் மிளகும் போட்டுக் காய்ச்சிய பாலை எடுத்து அப்பாவுக்கு ஆற்றிக் கொடுப்பது அவருடைய வேலைதான்.
அப்பாவுடனேயே பெரும்பாலான நேரம் சுப்பண்ணா இருந்ததால் அவருக்கு “சின்னவரு’ பட்டமும் அப்பா காலத்துக்குப் பிறகு அவர் வகித்த நியாயாதிபதி பீடமும் கிடைத்தது.
அப்பா மாதிரி அவருக்கும் கிராமப்புரத்தில் நல்ல பெயர். ஒரு கேஸை கோர்ட்டுக்குப் போகவிடமாட்டார்.
சுப்பண்ணா பஞ்சாயத்துக்கும் அவர் எழுதும் கிரயப் பத்திரங்கள், பாகப் பிரிவினை பத்திரங்களுக்கும் ரிஜிஸ்தர் ஆபிசிலேயே நல்ல பெயர்.
வீட்டு நிர்வாகம், தோப்பு நிர்வாகம் வரவு செலவு தங்கை திருமணம் ஆகிய பொறுப்புக்களால் சுப்பண்ணாவிடம் கோபம் சற்றுக் கூடுதலாகவே தெரியும்.
ஒரு சின்ன ஒட்டடை அகற்றப்படாமலிருந்தால் கூடப் பெரிசாகக் கத்துவார். தம்பிகளாகிய நாங்கள் ஓடி ஒளிந்த விடுவோம் – அவர் பள்ளிக்கூடத்திலிருந்து வருவார் என்றாலே ஸ்கூலில் அவர் எந்தப் பையனையாவது அதட்டுகிற அதட்டல் எங்கள் வீட்டுக்குக் கேட்கும். ஸ்கூலில் அவர் பெரீய வாத்தியார்.
பெரீய வாத்தியாரின் 5வது வகுப்பில் ஒரு பையன் படித்தாயிற்று என்றால் கேம்ப்ரிட்ஜ் யுனிவர்ஸிடியில் பட்டம் வாங்கின மாதிரி.
அட்ஜக்டிவ்வுக்கும், அட்வெர்ப்புக்கும் என்னடா வித்தியாசம் என்று கேட்டு, பதில் தப்பாகச் சொன்ன பையனைத் துரத்தித் துரத்தி அடிப்பார். அவன் பல சமயம் ரோட்டுக்கே ஓடிவிடுவான்.
பாடத்தைச் சரியாகப் படிக்காத பையனைத் தன் எதிரி மாதிரி அந்த நேரத்தில் நினைப்பாரே தவிர, அப்புறம் பணியாரம், கச்சாயம் (ஸ்வீட்) என்று எதையாவது வாங்கிக் கொடுத்துக் கட்டிக் கொள்வார்.
அப்பா காலமாகி இரண்டு வருஷமாயிற்று.
பழைய பள்ளிக் கட்டிடத்தை சுப்பண்ணா புதுப்பித்தார். ஸ்கூலில் இரவு வேளையில் நடக்கும் நியாய சபையின் போது பெஞ்சுகளைத் தாறுமாறாகப் போடுவதும், கண்ட இடத்தில் துப்பி வைப்பதும் பிரச்னையாக இருந்தது.
சுப்பண்ணா, ஸ்கூலில் ஆபீஸ் ரூம் என்பதாக ஒரு பெரிய ரூம் கட்டினார். அதில் சில பீரோக்களில் பள்ளிக்கூட தஸ்தாவேஜுக்கள் இருக்கும். மற்றப்படி பெரிய ஹால். அதில்தான் அவரது நியாய சபை நடக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் நேரம். நியாய சபை நடந்து கொண்டிருந்தது. பெரிய கேஸ் போலிருக்கு.
பஞ்சாயத்துக்கு வந்த இரண்டு சாராரும் பெரும் புள்ளிகள். ஒரு பக்கம் குண்ட மலையான் வகையறா. இன்னொரு பக்கம் நெய்க்காரன்பட்டி மைனர். காரசாரமான விவாதம்- சுப்பண்ணா எல்லாத்தையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறார்.

பகல் இரண்டு மணியாயிற்று. யாரும் சாப்பாட்டுக்குப் போகவில்லை. அப்போது பார்த்து பொரி விற்கிறவன் வந்து சேர்ந்தான்.

தெருவில் அவன் நுழைந்தவுடன் கமகமவென்று பொரி, வறுகடலைகளின் வாசனையான வாசனை. சைக்கிள் பின்னால் பெரிய பொதி மாதிரி பொரி மூட்டை. ஸைடுகளில் பலவிதமான பைகள். பிரார்த்தனைக்கு வேண்டிக் கொண்டு கோவிலுக்கு வரும்போது சில பக்தர்கள் மரக் கிளைகளில் தொங்க விடுவது போன்ற ஏராளமான துணி முடிச்சுக்கள்.

பலவகைக் கடலை தினுசுகள். பொரி தினுசுகள். அச்சு வெல்ல தினுசும் உண்டு. கருப்பட்டியும் அவ்விடம் சப்ளை செய்யப்படும். வழக்கமாய் அண்ணிதான் பொரி வாங்குவாள். பொரிக்காரன் கொடுத்த குரல் அண்ணி காதில் விழவில்லை. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மத்தியானத் தூக்கம்.
“”அண்ணி! பொரிக்காரர்!” என்று லேசாகக் குரல் கொடுத்தேன். அண்ணியார் எழுந்திருக்கவில்லை. பொரிக்காரன் போய்விடுவானே என்று எனக்குப் பதட்டம். அதேசமயம் அண்ணியை எழுப்பவும் தெரியவில்லை.
சரி. அண்ணாவிடமே கேட்டு விடலாமே என்று ஆபீஸ் ரூமுக்குப் போனால் – அங்கே ஜேஜே என்று அறை நிறையக் கூட்டம் – பஞ்சாயத்துக்கு வந்தவர்கள். சுப்பண்ணா நியாதிபதி நாற்காலியில் இருந்துகொண்டு படு யோசனையில் தன் மோவாயிலிருந்த இளந் தாடியை நெருடிக் கொண்டிருந்தார்.

நான் கதவருகே நிற்பதை சிறிது நேரம் கழித்துத்தான் அவர் கவனித்தார். அத்தனை பேர் எதிரில் அவரிடம் எப்படி நான் பொரி வாங்கட்டுமா என்று கேட்பது. அந்த நாசூக்கெல்லாம் தெரிந்த பையன்தான் நான்.
என்னடா சுந்து என்று அவரும் கண்டுகொள்ளவில்லை. பஞ்சாயத்து யோசனையிலேயே என்னைப் பார்த்தார். நான் சட்டென்று ஒரு காரியம் செய்தேன். நான் பிடித்துக் கொண்டிருந்த நிலை வாசப்படி கதவிலேயே சாக்பீஸில் கொட்டை எழுத்தில் “பொரி வாங்கட்டுமா?’ என்று கதவில் எழுதினேன். அவர் கண்ணில் படுமாறு கதவை இப்படியும் அப்படியும் சாத்தித் திறந்தேன்.

அவர் பார்த்துவிட்டார். தலையை அசைத்தார் வாங்கும்படி.
எனக்கு அது போதும். பொரிக்காரரிடம் நாலு படி பொரி வாங்கி சமர்த்தாக டப்பாவில் போட்டு வைத்துவிட்டேன்.
அரைமணி நேரம் கழித்து பஞ்சாயத்தும் நியாயமும் முடிந்து அண்ணா வீட்டுக்கு வந்தார். அண்ணியிடம் “”எங்கே அந்தப் பயல்?” என்றார் கோபமாக.

அண்ணி, “”ரொம்ப சமத்து! தானே பொரி வாங்கி வைத்திருக்கிறான்” என்று என்னைப் பாராட்டினாள்.
சுப்பண்ணா கடுமையான கோபத்துடன் “”பொரி வாங்கியிருக்கிறானா பொரி! அட கழுதை வாடா இப்படி….” என்று கர்ஜித்தார்
நான் செய்த தப்பு என்ன என்று தெரிந்து கொள்ளுமுன் பளாரென்று என் செவிட்டில் ஒரு பேய் அறைவிட்டார். பொரிக்கு எந்த ரீடா? முண்டம்! என் கிளாஸிலேயே படிக்கிறே. கதவிலே எழுதிக் காட்டறதுக்கெல்லாம் புத்தி இருக்கு. பொரிக்கு எந்த ரி தெரியலை?”

நான் பொறி கலங்கிப் போனேன். நான் எப்போது பொரி சாப்பிட்டாலும், சுப்பண்ணா நினைவு வந்துவிடும். தின்னுகிற பொரிக்கு சின்ன “ரி’; குஞ்சு பொறிக்கிறதுக்கு பெரிய “றி’.
அவ்வளவு சுலபமாகப் பதிந்து விடுகிறதா என்ன. “ஞாபகத்தில் பதிய வைத்துக் கொள்ள..
ஒரு ஃபார்முலா வைத்துக் கொண்டேன். தின்னுவதற்கு கொஞ்சம்தானே பொரி கிடைக்கும். அதனால் அந்தப் பொரிக்கு சின்ன “ரி’ கோழி நிறைய குஞ்சு பொறிக்கிறது. அதனாலே அதற்கு பெரிய “றி’!


+

வாணிஸ்ரீ சிவகுமார் -

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (28-Oct-15, 10:45 pm)
பார்வை : 102

மேலே