வளரும் தலைமுறை யோசிக்கவே

சாலையில் நடந்து சென்றேன்
நடைபாதை இல்லை என்பதால் ....
எதிரே வந்தார் அன்பர்ஒருவர்
எங்கோ பார்த்ததாக நினைவு ....

சிரித்து வைத்தேன் சிறிதாய்
நலமா என்றேன் நாசுக்காய் ....
பதிலும் கூறிட்டு வினவினார்
பார்த்து நாளாயிற்றே என்றார் .....

ஆமாம் என்றேன் குழப்பமுடன்
நினைவே இல்லை யாரென்று ...
கடந்து சென்றேன் சிந்தனையுடன்
நாசா விஞ்ஞானியின் நிலைபோல ...

திரும்பிப் பார்த்தேன் அவரையும்
அதையே செய்தார் அவருமங்கே ...
புரிந்து கொண்டேன் தெளிவாக
அவருக்கும் குழப்பம் யாரென்று ...

வீட்டில் நுழைந்தேன் வியப்புடன்
நோக்கினேன் எதிர்வீட்டுக் கதவை ...
குசலம் விசாரித்தவர் குறுகிநாணி
நின்று கொண்டிருந்தார் குனிந்தபடி ....

அடுக்குமாடி குடியிருப்பின் நிகழ்விது
நிகழ்கால வாழ்வினில் நிஜமிது .....
நினைத்தேன் வருங்கால வாழ்வை
எனக்குள்ளே சிரித்தேன் ஏக்கமுடன் ....

சிதறியது கூட்டுக் குடும்பங்கள்
சிதைந்தது வீட்டின் உறவுகள் ...
கதறியது கருணை நெஞ்சங்கள்
கலைந்தது கனவிலும் பாசங்கள் ...

கற்பனை என்றாலும் மிகையல்ல
விற்பனைக்கு வரும் விரைவினில் ...
பல்பொருள் அங்காடியில் பாசமும்
வீதியில் மலிவுவிலையில் நேசமும்...

சொற்கள் மறைந்திடும் தமிழில்
சொந்தம் என்பதுஇனி கல்வெட்டில் ...
வளரும் தலைமுறை யோசிக்கவே
வடித்தேன் இவ்வரிகளை வாசிக்கவே ....

கடமையென உரைத்தேன் நானும்
மடமையென உதறாதீர் இதனையும் ...
கணினியே உலகமென கொள்ளாதீர்
கற்றவர்கள் ஆயினும் உணர்ந்திடுவீர் ...


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Oct-15, 3:10 pm)
பார்வை : 527

மேலே