சிலேடைச் சிதறல்கள்

வேறெந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் நம் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு உண்டு. அதில் ஒன்று- இரண்டு பொருள் தரும்படியான வார்த்தைகள் மற்ற மொழிகளைவிட தமிழில்தான் அதிகம் உள்ளன. ஒரு வார்த்தை இருபொருள் தரும்படி அழகாகப் பேசுவதை ‘சிலேடை’ என்று அழைப்பார்கள். இந்த சிலேடைத் தமிழில் வல்லவர் திரு.கி.வா.ஜ. அவர்கள். இங்கே நான் படித்து ரசித்த சில சிலேடைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு மடாதிபதி தமிழ்ப் புலவர்களை எல்லாம் அழைத்து விருந்து ஒன்று வைத்தாராம். எல்லா ஊர்களில் இருந்தும் புலவர்கள் வந்து விருந்தில் அமர்ந்தனர். ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்குப் பக்கத்தில் கடைமடை என்ற ஊர் இன்றைக்கும் இருக்கிறது. அவ்வூரைச் சேர்ந்த புலவர் ஒருவர் விருந்திற்கு மிகத் தாமதமாக வந்து சேர்ந்தார்.

மடாதிபதி அவரை வரவேற்கும் விதமாக, “வாரும் கடைமடையரே!’ என இருபொருள்பட அழைத்தாராம். கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவரே என்பது ஒரு பொருள். கடைசியாக வந்த மடையரே என்பது மற்றொரு பொருள். வந்த புலவர் லேசுப்பட்டவரல்ல... அவரும் பதிலுக்கு, “வந்தேன் மடத்தலைவரே...” என்றாராம். இதற்கு மடத்திற்குத் தலைவரே என்பது ஒரு பொருள். மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்பது மற்றொரு பொருள்.

==================================================

பெரும் புலமை பெற்ற ஒருவர் பாட்டுப் பாடுவதிலும் வல்லமை பெற்றிருந்தார். அவர் தன் ஊரில் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்தபோது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த கிராமத்து ஆசாமி ஒருவன் அவரை நெருங்கி, “ஐயா, நான் உங்களைப் பாடையில பார்க்கணும்” என்றானாம். ’பாடும்போது பார்க்க வேண்டும்’ என்பதை அப்படிச் சொல்லியிருக்கிறான். அவரும் அசராமல், ”அப்ப சாகையில வந்து பார்” என்றாராம். ’சாகை’ (ஜாகை) என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். வீட்டில் வந்து பார் என்பதை இப்படி அழகாக சிலேடையில் கூறிச் சென்றுள்ளார் புலவர்.

==================================================

வயதான புலவர் ஒருவர் கம்பு ஒன்றினை ஊன்றிக் கொண்டு தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட கஞ்சப்பிரபு ஒருவர் கேலியாக, ”வாரும் கம்பரே...” என்றாராம். கம்பரைப் போன்ற புலவர் என்றும் கம்பை ஊன்றியவரே என்றும் பொருள் கொள்ளும்படி அவர் பேச, இவரும் உடனே தயங்காது கம்பைச் சற்று ஓங்கி, ”அடியேன் வணக்கம்” என்றாராம்.

==================================================

ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சபையில் ஒருநாள் தமிழ்ப் புலவர் சபை கூடியிருந்தது. எல்லாப் பகுதிகளில் இருந்தும் புலவர்கள் வந்திருந்தனர். மன்னரும் சபைக்கு வந்து அமர்ந்தார். சபை தொடங்குவதற்குமுன் தாமதமாக வேம்பத்தூரைச் சேர்ந்த ‘வெண்பா பாடுவதில் புலி’ என்று அழைக்கப்பட்ட பிச்சுவையர் வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்த மன்னர் சிலேடையாக, “வேம்புக்கு இங்கு இடமில்லை” என்றாராம். ’வேம்பு’ என்றால் கசப்பு. இந்த இனிய சபையில் கசப்புக்கு இடமில்லை என்றும், வேம்பத்தூரைச் சேர்ந்த உமக்கு இடமில்லை என்றும் இருபொருள் கொள்ளலாம்.

புலவர் விடுகிற ரகமா என்ன..? சட்டென்று சற்றும் தயங்காது வெகுவேகமாக வந்து மன்னரின் சிம்மாசனத்தின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, “வேம்பு அரசோடுதான் இருக்கும்” என்றாராம். அதாவது வேம்பு என்று தன்னை மன்னன் சொன்னதும், அரசனும், வேம்பாகிய தானும் சேர்ந்தே இருப்போம் என்றும், வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து இருந்தால் அது கோவிலாகும் என்றும் இருபொருள்படக் கூறினாராம். சபையே வியந்து சிரிக்க, மன்னரும் சிரித்து மகிழ்ந்தாராம்.

==================================================

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு அடுத்த கூட்டத்தில் பேசுவதற்கு அவசரமாகக் கிளம்பினார். அவரோடு சில நண்பர்களும் காரில் ஏறிக் கொண்டனர். அண்ணா, டிரைவரிடம், “தம்பி, விரைவாக வண்டியை ஓட்டுவாயா?” என்று கேட்டார்.

டிரைவரும் உடனே, “கவலைப்படாதீங்கய்யா... ஒரு நொடியில கொண்டு போய் விட்டுடறேன் பாருங்க...” என்றிருக்கிறார். அவர் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்றதில் சாலையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கவனிக்காமல் போக, கார் பள்ளத்தில் இறங்கி உருண்டது. அனைவரும் காரைவிட்டு வெளியே வர, நல்லவேளையாக யாருக்கும் அதிகமாகக் காயம் இல்லை.

அனைவரும் கோபமாக டிரைவரை திட்டத் தொடங்க, அண்ணா அவர்களை கையமர்த்தி விட்டு இப்படிக் கூறினாராம்: ”நாம கிளம்பறப்பவே அவர்தான் சொன்னார்ல... ஒரு ‘நொடி’யில விடறேன்னு. சொன்னபடி விட்டுட்டார். விடுங்க...” நொடி என்பதற்கு வினாடி, பள்ளம் என்று இரு பொருள் உண்டு. இப்படி அண்ணா சொன்னதும் அனைவரும் கவலை மறந்து சிரித்து விட்டார்களாம்.

==================================================

கவியரசு வைரமுத்து ஒருமுறை தன் சொந்த ஊரான வடுகபட்டிக்கு வந்திருந்தார். அவர் என் இனிய நண்பர் ஆதலால் நான் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம். அவருக்கு கவிதையைப் போலவே நகைச்சுவை உணர்வும் அதிகமுண்டு. நானும் அவரும் நண்பர்களும் காரில் வரும்போது மதுரையில் ஓரிடத்தில் பொங்கல் வைத்து விழாக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

“மதுரை இன்றைக்கும் கிராமம்தான்” என்று கவிஞர் ஆச்சரியத்தோடு சொல்ல, “அந்த போஸ்டரைப் பாருங்கள். இன்றிரவு கரகாட்டமும், பட்டிமன்றமும் நடைபெறும் என்று போட்டிருக்கிறார்கள்” என்று நான் சுட்டிக் காட்டினேன்.
“இப்போதெல்லாம் இரண்டும் ஏறத்தாழ ஒன்றுதான்” என்று ஒரு நண்பர் சொன்னார்.
உடனே வைரமுத்து, “இரண்டுக்குமே தலையில் ஏதாவது இருந்தால்தான் நல்லது” என்றார் சிரிப்போடு.
கார் ஓட்டிய டிரைவர் உட்பட அனைவரும் சிரித்து விட்டோம். அவர் சிலேடையாகக் கூறிய செய்தியை நினைத்து வியந்தோம்.

-முனைவர் கு.ஞானசம்பந்தன் எழுதிய ’பரபரப்பு, சிரிசிரிப்பு’ என்ற நூலிலிருந்து.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது - பால (29-Oct-15, 11:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 326

மேலே