இறுதி விருப்பம்
காலையில் அவனை
தூக்கில் இடுவார்கள்!
அதிகாலையில் அவன் வாழ்வு
அஸ்தமனமாகும்.
விரும்பியதை கேட்கலாம்
தருவித்து தருவார்கள்
உணவை கொடுத்து விட்டு
உயிரை கேட்ப்பார்கள்.
சாப்பிடாமல் படுக்கக்கூடாது
அதுவும் தூக்குத் தண்டனை கைதிகள்
பசி எடுக்காத இடத்திற்குத்
தானே போகப் போகிறான்.
உறவினார்களை கடைசியாகப் பார்க்க
அனுமதி உண்டு
உறவுகள் அற்ற இடத்திற்குத்தானே
போகப் போகிறான்!
கடைசியாக கண்கள்
கட்டப்பட்டிருக்கும்
கண்காணா தொலைவுக்குத் தானே
போகப் போகிறான்.
செய்த தவறுகளுக்காக
வருத்தப்பட்டானா?
தவறுகளுக்காக வருந்தவில்லை
தவறிப்பிறந்ததற்காய் வருந்தினான்.
கடைசியாக அவன் சடலத்தை
என்ன செய்வதாம்
உயிரை வெறுத்தவன்
அஸ்திமீதா அக்கரைப் படுவான்?
~கவுதமன்~