பெயர் மாறினால் ஊழ் மாறுமா

சந்தனமாகுமோ சாக்கடை!

”ஹலோ குமார்?உங்க பையன் ஹரிஹரன் எப்படியிருக்கான்?”

இப்ப அவன் பேர் ஹரிஹரன் இல்லை;ஹரிராம்

பேரை மாத்திட்டீங்களா?ஏன்?

அவன் சரியாப் படிக்காம இருந்தான்.நண்பர் சொன்னார்.நியூமராலஜி படிப் பேரை மாத்தினாச் சரியாப் போகும்னு.அதான்,எண்கணித வல்லுநர் ஒத்தரைப் பார்த்தேன் . அவர்தான் பேரை ஹரிராம்னு மாத்தினாச் சரியாப் போகும்னு சொன்னார்.

ஹரிஹரன் அப்படிங்கறது அவன் தாத்தா,உங்கப்பா பேரு இல்லையா?அதை மாத்தலாமா?

என்ன செய்ய? சரியாப்படிக்கலே;அதனாலே பேரை மாத்த வேண்டியதாப் போச்சு.

(மனசுக்குள்)நல்ல வேளை,ஹரிராம்னு, வச்சார். சொரிகரன், சொரிராம் அப்படின்னெல்லாம் வைக்கலே

இப்ப நல்லாப் படிக்கறானா?

பரவாயில்ல நல்ல முன்னேற்றம் இருக்கு.

பேரை மாத்தினா பையன் நல்லாப் படிக்க ஆரம்பிச்சுடுவானா?

படிக்கறானே.

இவருக்குப் புரிய வைக்க முடியாது. இதெல்லாம் ஒரு மனோதத்துவம் சார்ந்த விஷயம்தான்.பேரை மாற்றினால் நன்றாகப் படிப்பான் என்று சொன்னதும் பையனுக்கே ஒரு நம்பிக்கை வந்து அதிகம் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பான்.அல்லது இது ஒரு தற்காலிக நிகழ்வாக இருக்கலாம்.

அவ்வளவுதான்.

குழந்தை பிறக்கும்போது,மூதாதையர் பெயரை வைக்கிறார்கள்.அல்லது பஞ்சாங்கம் பார்த்து பிறந்த நட்சத்திரத்துக்கு ஏற்ற முதல் எழுத்தைத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள்.

இதெல்லாம் பயனின்றிப் போகிறதா?

பெயரையோ,எழுத்துக்களையோ மாற்றுவதால் ஒருவரின் அடிப்படை அறிவுத்திறன் மாறி விடுமா?
தலை எழுத்து என்று சொல்கிறோமே அது மாறி விடுமா?
சொல்லாமல் இருக்க முடியவில்லை,எனவே சொன்னேன்.

“மாமன் மகள் என்று ஒரு பழைய படம்.அதில் ஜெமினி கோழையாக இருப்பார்.அவருக்கு வீரம் வரவேண்டும் என்பதற்காக அவர் பாட்டி, அவர் தாத்தாவின் தாயத்து,அதனால்தான் அவர் வீரராக இருந்தார் என்று சொல்லி ஒரு தாயத்தை கட்டி விட ஜெமினி வீரராக மாறி விடுவார். சண்டையிடும்போது நடுவில் தாயத்துதொலைந்து போக ,ஜெமினி பயப்பட ஆரம்பித்து விடுவார். அது போலத்தான் இதுவும்.நீங்கள் ஒரு தாயத்துக் கட்டியிருந்தாலும் பலன் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.”

நண்பர் கோபித்துக் கொண்டு போய்விட்டார்.

ஒரு ரோஜாவை வேறு பெயரால் அழைத்தால் மணம் குறையுமா?
சாக்கடையை, சந்தனம் என்று அழைத்தால் நறுமணம் வந்து விடுமா?
பெயர் மாறினால் ஊழ் மாறுமா?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு - நல்ல (7-Nov-15, 11:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 139

மேலே