குறை -நிமிட கதை

குறை!

“எ ன்ன சார், வர வர உங்க கடை டிபனே சரியில்லையே?” என்றபடியே, கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளியிடம் பில்லுக்கான பணத்தைக் கொடுத்தான் ரகு.

“ஸாரி சார், ஒரு வாரமா நம்ம பழைய மாஸ்டர் வரலை. உறவுக்காரங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு போயிருக்கார். அடுத்த வாரத்திலிருந்து சரியாயிடும்!”-மீதிச் சில்லறையைக் கொடுத்தபடியே பவ்யமாகச் சொன்னார் முதலாளி.

ரகு வெளியேறிய பின்பு, “என்னங்க, இந்த ஆளுக்கெல்லாம் விளக்கம் சொல்லிக் கிட்டு... இவர் மட்டும்தாங்க தினமும் ஏதாவதுநோணாவட்டம் சொல்லிக்கிட்டே இருக்காரு. மத்தவங்க எல்லாம் எதுவும் சொல்லாம சாப்பிட்டுட்டுப் போறாங்க!” என்று முதலாளியிடம் புகார் போலச் சொன்னார் சர்வர்.

முதலாளி புன்னகைத்துவிட்டு, “எதுவுமே சொல்லாமப் போறவங்க ரெகுலர் கஸ்டமரா இருக்க மாட்டாங்க. அப்படியே தொடர்ந்து கொஞ்ச நாளா வர்றவங்களா இருந்தாலும், டிபன் சரியில்லேன்னதும் சத்தமில்லாம அடுத்த ஓட்டலைத் தேடிப் போயிடுவாங்க. ஆனா, இவர் அப்படி இல்லே. தொடர்ந்து நம்ம ஓட்டலுக்கே வர்றாரு. இனிமேலும் வருவாரு. இவர் மாதிரி கஸ்டமர்கள்தான் நமக்கு முக்கியம்!” என்றார்.

- வேலுபாரதி

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (9-Nov-15, 3:45 pm)
பார்வை : 232

மேலே