வேப்ப மரம் இருந்தால் அதை உங்கள் மருத்துவராக நினைத்து இனி தினமும் ஒரு ஹலோ சொல்லுங்கள்
விவிலியத்தில் ஒரு செய்தி வரும். 'மக்கள் விலங்குகளை வணங்கினர். தன்னை படைத்த தேவனை விட்டு விட்டு விலங்குகளை வணங்கும் மக்கள் மீது இறைவன் கோபம் கொண்டார்' என்ற செய்தி அது.(இந்த தகவலுக்காக கிறித்தவ சகோதரர்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்).
ஆனால் தமிழர்கள் பசுக்களை கோமாதா என்ற பெயரில் வணஙகியிருக்கிறார்கள். மரங்களை தலவிருட்சங்களாக நட்டு வணங்கியிருக்கிறார்கள்.
நூற்றாண்டுகளுக்கு முன்பாக,மரங்களின் அருமையையும் ' போட்டோ சிந்தசிஸ்' என்ற ஒளிச்சேர்க்கை பற்றியும், அது நமக்கு தரும் ஆக்சிஜன் என்ற பிராணவாயுவை வெளியிடுவதையும் பற்றி சொன்னால் மக்கள் புரிந்து கொள்வது சிரமம் என்பதால் ஒரே வரியில் மரங்களை ' தலவிருட்சங்கள்' ஆக மாற்றிவிட்டார்கள்.
அவற்றை அன்றைக்கு கோவில் சொத்துக்களாக இருந்த இடங்களில் 'நந்தவனம்' அமைத்து பராமரித்தார்கள்.இப்படி மரங்களின் விஞ்ஞானம் மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பண ஆசை
இன்றைக்கு பணம் என்ற அரக்க ஆசையால் காடுகள் குறைந்து விட்டன. அதாவது கண்ணை விற்று ஓவியம் வாங்க முயற்சிக்கிறார்கள் சிலர். இதன் கொடுமையை எல்லோரும் தான் அனுபவிக்க வேண்டும்.
சரி. சொல்ல வந்த விஷயம் இங்கே....
தலவிருட்சம் என்ற பெயரில் கோவில்களில் பயன்தரும் மூலிகை மரங்களை நட்டு பராமரித்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். கிட்டத்தட்ட இந்த தலவிருட்சங்களின் பட்டியலில் 80 வகையான மரங்கள் இருக்கின்றன.
அவற்றை பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம்.
முதலில் நாம் பார்க்க போவது மக்களின் அம்மை நோயை விரட்ட உதவிய வேம்பு மரம்.இன்றைக்கும் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களை வேம்பு தழைகளில் படுக்கை அமைத்து படுக்க வைப்பது நமக்கு தெரிந்த விஷயம் தானே!
ஆனால அது மட்டுமல்ல. இன்னும் சிறிது நாளில் பெட்ரோல் இருக்காது. அப்போது போர்டுகளும், வோல்ஸ்வேகன்களும் வேப்பங்கொட்டை பயோபியூயலில் தான் ஓடக்கூடும். அப்போது வீட்டுக்கு ஒரு வேப்பமரம் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காரணம், தற்போது தமிழகத்தில் mission bio fuels என்ற பன்னாட்டு நிறுவனம் உள்பட சில நிறுவனங்கள் தமிழகத்தின் கிராமங்கள் தோறும் ஆட்களை நியமித்து வேப்பங்கொட்டைகளை சேகரித்து பயோ பியூயல் தயாரிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
அற்புதமான வேம்பு மரத்தையும் அதை தமிழகத்தின எந்த கோயில்கள் தலவிருட்சங்களாக கொண்டுள்ளன. வேம்பின் மருத்துவ குணத்தையும் இந்த 'தலவிருட்சங்கள்' என்ற தொகுப்பின் கீழ்வரும் முதல் பதிவில் காணலாம்.
வேம்பு
வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். நிழலை தருவது மரங்கள். எல்லா மரநிழலிலும் வெயிலில் அப்படியொரு குளிர்ச்சி கிடைக்காது. வேப்பமரத்தடியின் குளிர்ச்சி தனி சுகம் தான். மற்ற மரங்களை விட வேப்ப மரத்திற்கு அலாதியான மருத்துவ குணங்கள் உண்டு.
" மூப்பூர் நவிய விதியாய் முன்னே அனல்வாளி
கோப்பார் பார்த்தன் நிலைகண் டருளுங் குழகர் குடமூக்கில்
தீர்ப்பா ருடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக்
காப்பார் காவன் அடையா வண்ணங் காரோ ணத்தாரே"
-திருஞானசம்பந்தர். தேவாரப்பாடல்.
திருக்குடந்தைக்காரோணம், புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோவில், திருவாட்போக்கி என்னும் ஐயர் மலை ஆகிய திருக்கோவில்களில் வேம்பு தலமரமாக ஆகியுள்ளது. கசப்பு சுவையுடைய பற்களுள்ள கத்தி போன்ற இலைகள் கொண்ட இது வெண்ணிற கொத்தான மலர்களையும், முட்டை வடிவ சதைக்கனிகளையும்,எண்ணெய்ச்சத்துள்ள விதைகளையும் (கவனிக்க பயோப்யூயல்) கொண்டது.
தமிழ்நாட்டின் மண்ணில் எங்கும் வளர்கிறது. அதிகமான மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக தொற்று நோய்களுக்கு வெள்ளைக்காரர்கள் ஆய்வகத்தில மருந்து தேடிக்கொண்டிருந்த போது வேப்பிலையை பிடுங்கி நோயை விரட்டி அடித்தவர்கள் நம்மூர் பாட்டிகள். கிராமத்தில் ஒரு பழக்கம் உண்டு. வாரத்தில ஒரு நாள் வேப்பிலை சாற்றை அரைத்து குழந்தைகளுக்கு உள்ளுக்குள் கொடுப்பார்கள்.
காரணம், இந்த சாற்றில் மறைந்திருக்கும் மறைமுக நோய் எதிர்ப்பு சக்தி. ஆனால் இப்போது அந்த பழக்கம் எல்லாம் மறைந்து விட்டது. நமது கண்ணுக்கு தெரிந்து வேப்ப மர இலைகளை அம்மைக்கு பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம்.
ஆனால் அதனினும் அதிகமான மருத்துவ பயன்கள் உள்ளன. திருச்சியை சேர்ந்த பேராசிரியர் திருஞானம் இது பற்றி ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளார். அதிலிருந்து உங்களுக்கு அறிய தருகிறேன்.
இந்த விபரஙகளை எல்லாம் எம்.டி படித்த சித்தா டாக்டர்களிடம் கேட்டு சரி செய்து வெளியிடுகிறேன். இவை எளிதில் உங்களால் கையாளக்கூடியது தான்.
மருத்துவகுணங்கள்
வேம்பின் இலை குடலில் உள்ள நுண்புழுக்களை கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. மனிதனுக்கு குடலில் கொக்கிப்புழு,நாடாப்புழு என்று பல புழுக்கள் இருக்கும்.
விலங்கியில் படித்த நண்பர்கள் இதனை லேப்பில் மைக்ரோஸ்கோப்பில் பார்த்திருக்க கூடும். உருப்பெருக்கியில் பார்த்தால் நமது குடலில் இப்படி ஒரு புழுஜென்மம் வாழ்கிறதா என்று நொந்து போவோம்.
காரணம் அதன் கொடூரமான தோற்றம் நமக்கு வாந்தியை ஏற்படுத்தும். இந்த புழுக்களை கொல்ல எளிய வழி வேப்பிலை சாறு தான். கொழுந்து வேப்பிலைகளை பறித்து அதை அப்படியே சிறிய உரலில் ஆட்டி சாறு எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும். பிறகு விரதம் இருந்து விட வேண்டியது தான்.
பிறகு உங்களை விட பலசாலி யாரும் இருக்க முடியாது. நீங்கள் சாப்பிடும் உணவை உங்களுக்கு தெரியாமலே உங்கள் குடலில் இருந்து கொண்டு தின்று வந்த இந்த புழுக்கள் மடிந்து குடலில் இருந்து வெளியேறி விடும். பிறகென்ன....நீங்கள் வேப்பம் சாற்றினால் குடலை கழுவி உடலை வளர்க்கலாம்.
வேப்பங்கொழுந்து குன்றிவேர்ப்பொடி சமஅளவு எடுத்து நீர் விட்டு அரைத்து பட்டாணி அளவில் உருட்டிக் கொண்டு நிழலில் காய வைத்து எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகளை பெரியம்மை நோய் கண்ட நபர்களுக்கு 3 வேளையும் கொடுத்து வர நோய் குணமாகும்.
வேப்பங்கொழுந்து 2 கிராம்,ஓமம் 1 கிராம், உப்பு 1 கிராம் இவற்றை மையாய் அரைத்து காலையில் பாதியும், மாலையில் பாதியும் 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் (மாமிசம் சேர்க்க கூடாது இந்த நாட்களில்) உடலுக்கு பலமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
வேப்பங்கொழுந்து, ஓமம்,சுக்கு, மிளகு,பூண்டு, நொச்சி இலை,
கறிவேப்பிலை,சிற்றரத்தை ஆகியவற்றை சமஅளவு எடுத்துக்கொண்டு நெய்விட்டு வதக்கி சிறிது உப்பு சேர்த்து மெழுகு பதமாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதில் மிளகு அளவில் உருட்டி எடுத்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு வரும் மந்தம், செரியாமை,மலச்சிக்கல்,மலப்புழுக்கள்,மார்பபுச்சளி கண்காணாமல் ஓடிப்போகும். நல்ல பசி எடுத்து உங்கள் குழந்தை வலுவாக சாப்பிட தொடங்குவார்கள்.
வேப்பிலையை அரைத்து களிபோல் கிளறி இளஞ்சூட்டில் பற்று போட ஆறாத புண்கள் ஆறும்.
உலர்ந்த பழைய வேப்பம் பூ 5 கிராம்,கொதிநீர் 50 மிலி எடுத்து அதில் இந்த வேப்பம் பூவை போட்டு இரண்டு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிய தண்ணீரை காலை மாலை குடித்து வந்தால் பசியில்லாமல் இருக்கும் நிலை மாறி பசி எடுக்கும். உடல் சோர்வு நீங்கும்.
புத்துணர்ச்சி பெறுவீர்கள். லைவ் 52 போல் செயல்பட்டு கல்லீரலை வலுவாக்கும்.
வேப்பம் பருப்பை வெண்ணெய் போல அரைத்து புழுவுள்ள புண்களில் தடவி வந்தால் புழுக்கள் வெளிப்பட்டு புண் ஆறிவிடும்.
வேப்பெண்ணையை பூசி வர வாதம், கிரந்தி, கரப்பான்,காய்ச்சல் ,சன்னி என்ற சுரம் நீங்கிவிடும்.
வேப்பம் பழச்சாற்றில் சமஅளவு கற்கண்டு கலந்து சாப்பிட்டு வர தோல்நோய்கள் தீரும். உடல் பளபளப்பாக மாறும்.
வேப்பம் பிசினை பொடித்து மாவாக வைத்து காலை மாலை சிறிதளவு சாப்பிட்டு வர தோல் நோய்கள் தீரும்.
புறணி நீக்கிய வேப்பம் பட்டை 50 கிராம் எடுத்து பொடிபோல் ஆக்கி அதனை தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி காய்ச்சலுக்கு கொடுத்து வர குணமாகும்.
50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வேப்பம் பட்டையை உலர்த்தி பொடித்து சமஅளவு முதிர்ந்த பூவரசம்ட பட்டைப் பொடி கலந்து ஒரு தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் ெத்ாழுநோயின் அடையாளங்கள் மறைந்து விடும்.
வேப்பெண்ணெயில் வேலிப்பருத்தி இலையை வதக்கி சூட்டுடன் ஒத்தடங் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான்,கிரந்தி,சிரங்கு, காய்ச்சல் வாதம் தீரும்.
வேப்பம் விதை 3 கிராம் சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து காலை மாலை நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் அன்றாடம் பாடாய்படுத்தும் மூலநோய் தீரும்.
வேப்பெண்யெில் தலைமுழுவி வந்தால் ஜன்னி, பிடரிகழுத்துவலி, வாத நோய்கள் தீரும்.
முதிர்ந்த வேம்பின் இலை,பூ,பட்டை, பிசின் ஆகியவற்றை சமஅளவு எடுத்து கால் தேக்கரண்டி தேன்,வெண்ணெய்,நெய் அல்லது பால் இதில் ஏதாவது ஒன்றுடன் கலந்து காலை, மாலை சாப்பிட எந்த மருந்திலும் கட்டுப்படாத சர்க்கரை நோய் குறைந்து போகும். தலை முடி கருமையடையும். டிபி என்ற எலும்புருக்கி நோய் தீரும். உடம்பு வலுவடையும்.
எனவே இந்த பதிவை படிக்கும் நண்பர்களே! உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் அதை உங்கள் மருத்துவராக நினைத்து இனி தினமும் ஒரு 'ஹலோ' சொல்லுங்கள். இந்த பதிவை படிக்கும் தமிழ்நண்பர்கள் பலரது வீட்டிலும் வேம்பு இருக்கும். அதை அவர்களும் பயன்படுத்தி சிறக்க அனைவரிடமும் இந்த தகவலை கொண்டு செல்லுங்கள்.
மரங்கள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. ஒரு மரம் நிழல் தந்து நின்ற இடத்திலிருந்து அதை அகற்றி விடும் போது தான் அந்த இடத்தின் வெறுமையை உணர முடியும்.
உங்கள் நிறுவனம் அல்லது பள்ளி வளாகம் மரங்களை நட முடியும் என்றால் அதிகமான வேம்பு மரங்களை நடுங்கள்.அதன் குச்சி பல் துலக்க உதவும்.விதை பருப்பு பெட்ரோல் தயாரிக்க உதவலாம்.ஏ.சி இல்லாமல் உங்கள் நிறுவனம் குளிர்ச்சியாக இருக்கும்.