ஔவையார் என்னும் பண்புருவம்

அன்பு காரணமாகப் பெண்களை அம்மா என்றும், ஆண்களை அப்பா என்றும் அழைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இந்நாட்டில் இருந்து வருகிறது. அப்படியே மாமன், மாமி என்றும் அழைக்கும் வழக்கமும் உண்டு.

தன்னை விட இளையவனைத் தம்பி என்றும், பெரியவனை அண்ணன் என்றும் அழைப்பார்கள். தங்கச்சி, அக்கா என்று பிற பெண்களை அழைக்கும் வழக்கத்தையும் இங்கே பார்க்கலாம்.

இப்படி உறவுப் பெயராக வழங்குபவற்றையே தம்முடைய சொந்தப் பெயராகக் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இந்த உறவுப் பெயர்களோடு சில அடை மொழிகளைச் சேர்த்துப் பெயராக வைத்துக் கொள்வார்கள்.

நல்லண்ணன், பெரியண்ணன், நல்லதம்பி, சின்னத் தம்பி, பெரிய தம்பி, நல்ல தங்காள் என்பன போன்ற பெயர்களைத் தம்முடைய சொந்தப் பெயர்களாக வைத்துக் கொண்டவர்களை நாம் காண்கிறோம்.

இந்த வழக்கம் தமிழ்நாட்டில் மிகப் பழங் காலத்திலும் இருந்து வந்ததென்பதை இலக்கியங்களைக் கொண்டு உணரலாம். சங்க காலப் பெண் புலவர்களுள் ஒருவர் நச்செள்ளையார் என்பவர். செள்ளை என்பது தங்கை என்னும் பொருளை உடையது.

அதுவே இக்காலத்தில் தெலுங்கில் 'செல்லலு' என்று வழங்குகிறது. 'ந' என்பது சிறப்பைக் குறிக்கும் ஓர் இடைச்சொல். நச்செள்ளையார் என்ற பெயர் நல்லதங்காள் என்பதைப் போன்றதே.

திருமாலின் தேவியருள் ஒருத்தியாகிய நீளாதேவியை நப்பின்னை என்று தமிழ் நூல்கள் கூறும். பின்னை என்பது தங்கை என்ற பொருளை உடையது. நச்செள்ளை என்பது போன்றதே நப்பின்னை என்ற பெயரும்.

ஔவை என்ற சொல்லுக்குத் தமக்கை என்று பொருள். அதுவே தவ்வை என்றும் வரும். உங்கள் தமக்கை என்ற அர்த்தத்தில் நுவ்வை என்று வரும். நும் ஔவை என்னும் தொடரே அவ்வாறு ஆயிற்று. தம் ஔவை என்பது தவ்வை என்று வந்தது.

பிராயத்தில் மூத்தவர்களை அக்காள் என்று வழங்கும் வழக்கம் உண்டு. தமிழுலகம் அறிந்த மூதாட்டியாராகிய ஔவைக்கு இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்து விளங்கிய அம் மூதாட்டியாரின் சொந்தப் பெயரை மக்கள் வழங்கவில்லை.

பெரியவர்கள் சொந்தப் பெயரை வெளிப்படையாகச் சொல்வது மரியாதை அன்று என்று இந்த நாட்டினர் நினைப்பார்கள். பல பெரியோர்களுக்குச் சொந்தப் பெயர் இன்னதென்று இப்போது தெரிவதில்லை. அதற்குக் காரணம் மேலே சொன்னபடி, மக்களுக்கு அவர்களிடம் இருந்த பெருமதிப்பேயாகும். கம்பர் என்பது சாதிப் பெயர். கவிச்சக்ரவர்த்தியாகிய அவருடைய சொந்தப் பெயர் இன்னதென்று தெரியவில்லை.

ஔவையார் தமிழ்நாட்டின் பரப்பெல்லாம் சென்று பரவிய புகழை உடையவர். அவருடையபுலமையைக் கண்டு யாவரும் அவரிடம் அளவற்ற அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர். முடியுடை மன்னரும் தலைவணங்கும் தகுதி அவருக்கு இருந்தது.

பிற்காலத்தில் சிறந்த புலமையும் ஒழுக்கமும் தெய்வபக்தியும் உடைய பெண் பெரியார் ஒருவர் இருந்தார். அவருக்கும் ஔவையார் என்ற பெயர் ஏற்பட்டது. நாடோடியாக வழங்கும் கதைகளில் "ஓர் ஊரில் ஓர் ஔவையார்ப் பாட்டி இருந்தாள்" என்று வரும் கதைகள் பல. "ஔவை வாக்கு, செவ்வை வாக்கு" என்ற பழமொழியும் தமிழ்நாட்டில் வழங்கத் தொடங்கியது.

இவற்றை யெல்லாம் ஒன்று படுத்திச் சிந்தித்தால் ஔவை என்ற மாத்திரத்தில் தமிழ் மக்களின் அகக் கண்ணில் ஓர் உருவம் புலனாவது தெரியவரும். ஔவையார் முதுமையை உடையவர் என்பது முதல் அடையாளம்.

அவர் பெருந்தமிழ்ப் புலமை உடையவர் என்பது அடுத்து நினைவுக்கு வருவது; பக்தியுடையவர் என்பது பிறகு நினைவிலே தோன்றுகிறது; சிறந்த ஒழுக்கம், எல்லோரிடத்திலும் இளகிய மனம், கூழுக்கும் பாடும் எளிமை, மன்னர்களையும் பணிய வைக்கும் வாக்கு வன்மை, எப்போதும் தமிழ்நாட்டில் ஊர் ஊராய்ச் சென்று மக்களுக்கு அறிவுரை பகரும் உயர்வு ஆகிய பண்புகளெல்லாம் திரண்ட உருவம் ஔவையார் என்பதும் உள்ளத்தே தோன்றும்.

****

சங்க காலத்தில் வாழ்ந்திருந்த பழைய ஔவையார் அதிகமான் என்ற மன்னனிடம் பேரன்பு உடையவராக இருந்தார். புறநானூற்றில் அதிகமானை ஔவையார் பாடிய பாடல்கள் இருக்கின்றன.

சேர குலத்தில் பிறந்து தகடூரில் சிற்றரசனாக இருந்து ஆட்சி நடத்தியவன் அதிகமான் நெடுமான் அஞ்சி. அவனை எழு வள்ளல்களில் ஒருவனாக வைத்து எண்ணுவர் புலவர். அவன் புலவருக்கு வேண்டிய பொருளும் இரவலருக்கு வேண்டிய உணவு முதலியனவும் தந்ததனால் மாத்திரம் பெருவள்ளல் என்ற பெயரைப் பெறவில்லை. ஔவையாருக்கு ஒரு நெல்லிக்கனியைத் தந்தமையால்தான் ஏழு வள்ளல்களில் ஒருவன் ஆனான்.

ஔவையார் நெடுநாள் வாழ்ந்தமைக்குக் காரணம் நெல்லிக்கனியை உண்டது என்ற கருத்தை அடிக்கடி தமிழ் நாட்டினர் நினைவில் இருத்திக்கொண்டே வந்தனர். அதே ஔவையார் பல ஆண்டுகள் வாழாவிட்டாலும், ஔவையார் என்ற பெயரும் தத்துவமும் பல நூற்றாண்டுகளாக மறையாமல் ஒளிவிட்டுக் கொண்டே வருகின்றன.

நயமாகப் பிறரது அறியாமையை எடுத்துரைக்கும் ஆற்றல் ஔவையாருக்கு இருந்தது.

ஒருமுறை அதிகமானிடத்திலிருந்து தொண்டைமானிடம் சென்றார் ஔவையார். அவன் தன் ஆயுத சாலையைக் காட்டினான். போரிற் புகுந்து வெற்றி காணும் திறத்தை அறியாத தொண்டைமானுடைய படைக்கலங்கள் புதுமெருகு அழியாமல் இருந்தன. அவற்றைப் பார்த்த ஔவையார் புகழ்வது போலப் பழிக்கும் வகையில் சொல்லத் தொடங்கினார்.

"அடடா! இந்தப் படைக்கலங்கள் தாம் எவ்வளவு அழகாக இருக்கின்றன. மயிற்பீலியும் மாலையும் அணிந்திருக்கின்றன. நெய்பூசிப் பாதுகாப்பாக வைக்கப் பெற்றிருக்கின்றன. ஆனால் அதிகமானுடைய ஆயுதங்களோ பகைவர்களைக் குத்தி முனை மழுங்கிவிட்டன. அவை இப்போது கொல்லன் பட்டறையிலே கிடக்கின்றன" என்று பாடினார்.

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
கடியுரை வியன்க ரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல் துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயிற் பதங்கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந் துதி வேலே.'

ஔவையார் இவ்வாறு கிண்டலாகப் பேசும் ஆற்றல் உடையவர் என்பதைப் பிற்காலத்தவரும் மறக்கவில்லை. அக்காலத்தில் வாழ்ந்த ஔவையாரும் இவ்வாறு குறிப்பாகப் பிறர் அறியாமையைக் காட்டியிருக்கிறார்.

எப்போதும் வருவாருக்கு விருந்து அளிக்கும் இயல்புடைய மருத்தன் என்பவனைக் கண்டு, அவன் வீட்டில் உணவு கொண்டுவிட்டுத் திருத்தங்கி என்பவன் வீட்டுக்கு வந்தார் ஔவையார். பிறருக்கு இம்மியும் ஈயாப் பெருந்தகை அவன். அவன் வீட்டு வாழை மரம் தளதள வென்றிருந்தது. "என்னைப் பாட வேண்டும்" என்று கேட்டான் திருத்தங்கி, தமிழ் மூதாட்டியார் பாட ஆரம்பித்தார்.

திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்;
மருத்தன் திருக் குடந்தை வாழை - குருத்தும்
இலையும் இலை, பூவும் இலை, காயும் இலை, என்றும்
உலகில் வருவிருந்தோர் உண்டு.

என்பது அவர் பாட்டு.
---------

'இவ்வே-இவையே. கண்-மூட்டுவாய் நோன் காழ் - வலிய கோல். கடி - காவல். நகர் - அரண்மனை. அவ்வே - அவையே. கோடு நுதி - வளைந்த நுனி. கொல் துறைக் குற்றில - கொல்லனுடைய களத்தில் பட்டறையிலே இருக்கின்றன. பதம் - உணவு. ஒக்கல் - உறவினன். வை - கூர்மையான.
****

மக்களை ஒன்றியிருந்து வாழும்படி செய்யும் தொண்டை ஔவையார் செய்து வந்தார். ஒற்றுமையாக வாழ்வாருக்கு ஊக்கம் ஊட்டினார்.

தமிழ்நாட்டில் சேர சோழ பாண்டியர்களாகிய முடிமன்னர் மூவர் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்கள் மூவரும் ஒன்று சேர்வதே இல்லை. யாரேனும் ஒருவரை எதிர்க்கவேண்டுமானால் மற்ற இருவரும் ஒருங்கே கூடியிருப்பதைக் காணமுடியாது. ஒரு சமயம் இம்மூவரும் ஒன்று கூடினார்கள். அந்த அருமையான காட்சியை ஔவையார் கண்டார். சேரமான் மாரிவெண்கோ என்பவனும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வெட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கே இருந்தார்கள். ஔவையார் அந்த ஒற்றுமையைக் கண்டு மகிழ்ந்து, "இப்படியே நீங்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும்" என்று வாழ்த்தினார்."அந்தணர்கள் வளர்க்கும் மூன்று அக்கினிகளைப் போல எல்லோரும் மதிக்கும்படி நன்மை புரிந்து வாழ்வீராக!" என்று பாடினார்.

ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்திப் புரையக் காண்டக் இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இதுவே, வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கு மாமழி உறையினும்
உயர்ந்துமெந் தோன்றிப் பெறுகலும் நாளே!

'இறைவனைத் தியானித்தலாகிய ஒன்றைச் செய்து புலன் அடக்கம் பெற்ற அந்தணர் ஓம்பும் மூன்று அக்கினிகளைப் போல, காண்பதற்கு அழகாக ஒன்றுபட்டு இருந்த வெற்றிக் குடையையும் கொடியை உடைய தேரையும் பெற்ற வேந்தர்களே! நான் அறிந்த அளவை வைத்துச் சொல்கிறேன்.அது இதுதான். வானத்திலே விட்டு விளங்கித் தோன்றும் நட்சத்திரங்களைக் காட்டிலும், இம்மென்று பொழியும் பெரிய மழைத்துளியைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து உங்கள் வாழ்நாட்கள் பலவாகி விளங்குவனவாகுக!" என்பது இதன் பொருள்.

பிற்காலத்தில் வாழ்ந்த ஔவையாரும் முடியுடை மூவேந்தரையும் ஒருங்கே கண்ட காட்சி ஒன்று உண்டு. அங்கே ஔவையாரே அவர்களை அழைத்து ஒன்றுபடச் செய்தார். அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்களையும் தெய்வீகன் என்னும் சிற்றரசனுக்கு மணம் புரிவித்தார். அந்தக் கல்யாணத்துக்கு சேர சோழ பாண்டியர்களை வருவித்து உபசாரம் செய்தார்.

திங்கட் குடையுடைச் சேரனும்
சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின்
றார்மணம் பந்தலிலே

என்று ஔவையார் பாடியிருக்கிறார்.

இன்னும், ஔவையார் என்ற அளவிலே உள்ளத்தே தோன்றும் பண்புகள் பலவாகும். பெயராலும் உருவத்தாலும் மக்கள் ஆவதில்லை.

பண்பினால்தான் மக்கள் மக்களாகிறார்கள். பண்புடைய பலரினும் மிக மிக சிறந்த பண்புகளைத் தமக்கே உரியனவாகப் பெற்ற பெரியோர்கள் வானத்தில் தோன்றும் சுடர்களைப் போல விளங்குகின்றனர்.ஔவையாரும் அத்தகைய சுடர்களில் ஒன்று.

காலந்தோறும் ஔவையார் என்ற பண்புருவத்தைத் தமிழ் மக்கள் நினைவூட்டிக் கொண்டு வருகின்றனர். இலக்கியம், உபதேசம், யோகம், பக்தி நெறி, ஒழுக்கம், பெரு மதிப்பு ஆகியவற்றோடு இணைந்து நிற்கும் திருவுருவம் ஔவையார்.
---------------

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (10-Nov-15, 8:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 716

மேலே