அரும்புகள் பெண் மொட்டுக்கள்

- முனைவர் ரத்னமாலா புரூஸ்
நாகர்கோயில்

ஆரிராரோ பாடவில்லை
ஆசைக் கொஞ்சல் கேட்கவில்லை
உனக்கு பாரமானேன்
உன்னால் தொலை தூரமானேன்

வியர்வைத் துளி போல
உதறித் தள்ளிவிட்டாய்
உதிர்ந்த இறகானேன்
உலர்ந்த சருகானேன்

உன் ஆசை தீர்த்து விட்டு
என் ஆசை தீயிலிட்டு
குப்பையில் போட்டுவிட்டு
எச்சில் இலை ஆக்கிவிட்டாய்

உருவான அன்றே நீ
கரு என்னைத் தொலைத்திருந்தால்
தெருவோரம் கண்டெடுத்த
அநாதை எண் குறைந்திருக்கும்

விளையாட்டாய் செய்தாயோ
விபரமாய்தான் செய்தாயோ
எதுவாக இருந்த போதும்
என்னுடைய வாழ்வு இன்று

விதியின் கைகளிலே
விளையாட்டு பொம்மைதானே
சாண் பிள்ளை ஆனாலும்
ஆண் பிள்ளை என்றிருந்தால்

எங்கேனும் சென்றிருப்பேன்
எவரிடத்தும் வாழ்ந்திருப்பேன்
பெண்ணாகப் பிறந்ததினால்
பெண்ணடிமை சமூகத்தின்

கழுகுக் கண்களிடம்
தப்பிக்க வழியில்லை
பெண்ணான என் அம்மா
பெண்ணாகப் பிறந்த நீயும்

பெண்ணாகப் பிறந்த என்னை
செருப்பாக எறிந்து விட்டாய்
கருப்பு நினைவுகளை
சுமக்க வைத்து விட்டாய்

உன்னிடத்தில் ஒன்று மட்டும்
உரைத்திட எண்ணுகிறேன்
வருங்காலம் நானும் பெண்ணை
வரமாக சுமந்திட்டால்

உயிருக்குள் வைத்திடுவேன்
கண்மணி போல் காத்திடுவேன்
தாயின் புது இலக்கணத்தை
தரணிக்கு உணர்த்திடுவேன்

எழுதியவர் : Dr ரத்னமாலா புரூஸ் (12-Nov-15, 11:41 am)
பார்வை : 697

மேலே