உரிமைகள் பறிக்கப்படும்

தமிழா நீ

அடைந்த உயரங்களை விட
உடைந்த துயரங்களே அதிகம்

அன்று ஊருக்கே சோறு போட்டாய்
இன்று உன் வேருக்கு நீரின்றி நிற்கிறாய்

கற்பொறி காலம் தொட்டு
கணிப்பொறி காலம் வரை
தனித்திருந்தே பிணித்திருக்கிறாய்

குகையில் வாழ்ந்ததிலிருந்தே
பகையோடே வளர்ந்திருக்கிறாய்

இணைந்து இருந்திருந்தால் வெல்லப்பட்டிருக்க மாட்டாய்
இறைந்து இருந்ததனால் கொல்லப்பட்டிருக்கிறாய்

************************

ஆதியாய் இருந்த நீ
சாதியாய் பிரிந்த போது
பாதியாய் முறிந்து போனாய்

சதமாய் இருந்த நீ
மதமாய் பிளவு கண்ட போது
வதமாய் இழவு கொண்டாய்

உச்சியாய் இருந்த நீ
கட்சியாய் கலைந்த போது
பட்சியாய் தொலைந்து போனாய்

ஒளியாய் இருந்த
மொழியின் அடையாளம் மறந்த போது
பழியின் மடையாழம் அறிந்து கொண்டாய்

இனத்துக்காக கூடாமல்
பணத்துக்காக ஓடியதால்
ரணத்துக்கான போர் உற்றாய்
பிணத்துக்கான பேர் பெற்றாய்

இனிமேலும் இணையாமல்
தனியாக இருப்பாயானால்
தமிழரென்ற பெயரோடும் இருக்க மாட்டாய்
தரணியிலே உயிரோடும் இருக்க மாட்டாய்

எழுதியவர் : (13-Nov-15, 4:21 pm)
பார்வை : 48

மேலே