தாம்பூல பை - ஏன் இந்தக் கடலைமிட்டாய்

அன்று ஒரு திருமண வீட்டிற்குப் போய் விட்டு திரும்பியிருந்தோம் இருவருக்கும் அங்கு தந்த இரண்டு தாம்பூல பையுடன். வீட்டுக்கு வந்து கொஞ்சம் நேரம் கழித்து கவிதாம்மா தாம்பூலபையில் என்ன என்ன இருக்கிறது என்று தேவிக் கொண்டிருந்தாள்.

வழக்கம் போல் இரண்டு வெற்றிலை, ஒரு நிஜாம்பாக்கு பொட்டலம், ஒரு சிறிய குடுமி தேங்காய் கூடவே சிறிய பாலீத்தீன் கவரில் ஒரு கடலை மிட்டாய் என்று உள்ளே இருந்தவற்றை வெளியே எடுத்துப் பார்த்தவள் அட இது என்ன இவ்வளவு பெரிய கல்யாணத்தில் கேவலமாய் இப்படி ஒரு கடலை மிட்டாய்யை போட்டிருக்கிறார்கள்? ஒரு எக்ளர் சாக்லெட்டாவது போட்டிருக்க கூடாதா? என்றவாறே எல்லாவற்றையும் பைக்குள் திரும்பப் போட்டாள்.

ஏன் இந்தக் கடலைமிட்டாய்?

பொதுவாக திருமணம் நடத்தும் வீட்டின் கடைசி கல்யாணம் என்றால் அந்தத் திருமணத் தாம்பூல பையில் இப்படி கடலை உருண்டை அல்லது கடலை மிட்டாயை போடும் பழக்கம் உண்டு.

இனி எங்கள் வீட்டில் திருமணம் ஆக வேண்டிய வயதில் ஆணோ பெண்ணோ இல்லை என்ற செய்தியை திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பூடகமாக தெரிவிக்கும் விதத்திலேயே இந்த முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

கடலை உருண்டை அல்லது மிட்டாய் அடங்கிய தாம்பூல பை அந்த வீட்டின் கடைசி திருமணம் என்ற செய்தியின் பூடகக் குறியீடாக தெரிவிக்கிறதாம்.

பொதுவாக மொய் என்பது திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய வட்டி இல்லாத கடன் என எண்ணிய காலத்தில் இதுதான் இறுதி வாய்ப்பு என்று வந்தவர்களுக்கு உணர்த்துவதற்கு ஏறபடுத்தப்பட்ட சாங்கியமாக இருக்கலாம்.

நம் பெரியவர்களால் உருவாக்கப்பட்ட நமது பண்பாட்டின் அசைவுகளின் சிறப்புகளில் ஒன்று. .

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (16-Nov-15, 11:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 926

மேலே