கருப்பு வெள்ளை நாட்கள் -சந்தோஷ்

முதன் முதலாகக்
கருப்பு வெள்ளைத்
தொலைக்காட்சிப் பெட்டி
சொந்தமாக வாங்கி
வீட்டு மாடியில்
ஆண்டனாவை முறுக்கித்
திருப்பி…ஒரு திசையில்
இழுத்துக் கட்டிப்
படம் பார்த்தபோது
எங்கள் இல்லத்தில் ஒளிர்ந்த
வண்ணமயமான சந்தோசத்தையும்…

வெள்ளிதோறும்
ஒளியும் ஒலியும்
ஞாயிறுதோறும்
தமிழ்த் திரைப்படம்
ஒளிப்பரப்பாகும் போதெல்லாம்
பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு
நான் ஒரு திரையரங்கு
உரிமையாளர் போல
மமதையில் மிதக்கும்
கர்வத்தையும்…

சக்திமான்,
மகாபாரதம்,ராமாயணம்
நாடகங்களை
கண்டுக் களித்துப்
பெற்ற குதூகலங்களையும்

சித்ரகார்,ரங்கோலி,
ஏக் சே பத்கார் ஏக்
சூப்பர்ஃகிட் முகாப்லா.
நிகழ்ச்சிகள் இந்தியை
பாடினாலும்
மொழி வெறியின்றி
கூடவே பாடி ரசித்த
இறையாண்மை உணர்வையும்


”தடங்கலுக்கு வருந்துகிறோம்”
பதாகையைக் காட்டும்போது
’ம்ம்க்கும் ‘எனச் சலித்துக்கொண்டு
அடக்கிவைத்த மூத்திரத்திற்குச்
சுதந்திரம் கொடுக்கச்செய்து
பெற்ற பேரின்ப நிம்மதியையும்…

ஜண்டு பாம்
ரீகல் சொட்டு நீலம்
பூஸ்ட் இஸ் மை எனர்ஜி
உட்வாண்ஸ் கிரேப் வாட்டர்
விளம்பரங்களை
ரசித்து ருசித்து பார்த்து
மனப்பாடம் செய்து
மகிழ்ந்த
அந்த நாட்களின் சுகந்த ஆனந்தத்தையும்…

இன்று
செயற்கைக் கோளுடன்
என் இல்லத்தை இணைத்து
அகன்றத்திரையுடைய
வண்ணத் தொலைக்காட்சியில்
விளம்பரங்களுக்கு நடுவில்
திணித்துத் திரையிடப்படும்
திரைப்படப் பாடல்களும்
திரைப்படங்களும்
நடனங்களும் நாடகங்களும்
ஏனோ எனக்கு கொடுப்பதில்லை!


**
-இரா.சந்தோஷ் குமார்


(“ வல்லமை” மின் இதழில் வெளியான கவிதை..மேலும் சில வரிகளை சேர்த்து பதிவு செய்துள்ளேன்)

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (22-Nov-15, 11:41 pm)
பார்வை : 121

மேலே