ஈழத்தின் பிறப்பு

கருவோடு இனமழித்துச் சென்றான் - பாரில்
கொல்லாமை கற்பித்த புத்தனையும் கொன்றான்
விருத்தியில்லை இனியென்றான் ஈழம் - அந்த
விழியறியா(து) மாவீரம் விதைத்திட்ட ஆழம்
தெருவோடு சுமந்திடுவான் ஒருநாள் - பாவத்
தேகத்தை அழித்தெமக்கு தந்திடுவான் பொன்னாள்
உருவாகும் ஈழத்தின் ஒளியில் - ஈனன்
உணர்வெல்லாம் சருகாகும் மரணத்தின் தீயில் !

சொல்லல்ல இக்கவியின் ஊற்று - ஈழச்
சோகத்தில் எரிகின்ற செந்தமிழின் கீற்று
எல்லோரும் வணங்குகின்ற வாரம் - மீண்டும்
எமக்கில்லை கண்ணீரின் கனம்கொண்ட பாரம்
வில்லெடுத்து வேங்கைஎனக் காட்டு - வீரம்
விடமழித்த புகழ்சொல்லி இடைவாளைத் தீட்டு
வல்வையதன் புதல்வனுடன் மீள்வோம் - எங்கள்
வரலாற்றுத் தாயகத்தின் வலிபோக்கி ஆள்வோம் !

கார்த்திகை பூக்கின்ற மாதம் - காற்றில்
கண்விழிக்கும் மாவீரர் கொஞ்சும் கீதம்
போர்க்களத்தில் பொழிந்திடுமே மேகம் - வேங்கை
பூதவுடல் பூரிக்க உயிர்க்கும் தேகம்
ஆர்ப்பரிக்கும் கடல்போல எழுவீர் - மீண்டும்
ஆள்கின்ற வலிமையெலாம் தந்து போவீர்
போர்ப்படையில் புகழ்சேர்த்தல் சிறப்பு - அந்தப்
பொறிமுறையே விரைவாக்கும் ஈழப் பிறப்பு !

எழுதியவர் : பாவலர் .வீ.சீராளன் (23-Nov-15, 1:51 pm)
பார்வை : 122

மேலே